ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
24•08•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(51) மனிதனே புனிதன் —
குருஈஸ்வராலய உதயம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பஞ்சேந்திரியங்களின் அறிவு மனிதனின் முன் மூளையில் பதிவுற்றுப் பின் மூளையில் அவை கருத்தாகப் பதிவு பெறுகின்றன.
தேகப்பற்றை(உலகாதயம்) விட்ட கருத்துக்கள் ஆகாயமயமாய் (சிரசின் உச்சியில்) சிறப்படைந்து, முன் மூளையிலும், பின் மூளையிலும் பதிவுகள் நடை பெறுகிறது.
இதனை யோகிகள் தமது அறிவில் கண்டறிந்தனர்.
மூளையில் பதிவாகும் கருத்துக்களின் முதிர்வு சக்தியாய், முன் மூளையில் ஒரு வகையான அதிர்வு அலைகள் ஏற்பட்டு, அவை பின் மூளை நோக்கிச் செல்லும்.
பின் மூளையில் இருந்து ஒருவித அதிர்வு அலைகள் முன் மூளை நொக்கிச் செல்லும். இவைகள் உரசுவதில் தலையில் ஒளி, ஒலி உண்டாகி தலை முழுக்கப் பரவச் செய்யும். அந்த அதிர்வைத்தான் பேரின்பம் என்று சித்தர்கள் கூறியது.
உள்ளத்தில் இந்தப் பேரின்பத்தை அடைந்து இன்புற ஏக்கம் உருவாக வேண்டும். அந்த ஏக்கமே படைப்புக்குக் காரணமாக இருப்பதால், முயற்சி செய்தால் இதனை அடைய முடியும். இந்த இயல்பினில் ஒரு ரகசியத்தை ஸ்ரீ முருகப் பெருமான் அகத்திய சித்தருக்குச் சொல்லி வைத்தார்.
அதாவது மூலாதாரத்தில் இருந்து உற்பத்தியாகும் குண்டலி நாதமானது, பின் மூளைக்குச் சென்று முதிர்ச்சி பெற்று, அங்கிருந்து சிரசில் இடது பக்கத்திற்கு ஒளியாக மாறிய பின்னர் அது சிரசு முழுவதும் ஒளியாகப் பரவிப் பாயும்.
இதனை அறிந்து கொண்டு தவப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். தனது ‘உயிர் சக்தியை (விந்தணுக்களை) இழக்காது’ இருந்தால் ஆன்ம பலம் நமக்குப் பெருகி விடும். உயிர் சக்தியை இழக்காமல் செய்யும் வித்தை “ஸ்கந்த குண்டலினி” எனப்படும்.
தொடர்ந்த பயிற்சியினால் பின் மூளையில் இருந்து இடப்பக்க மூளைக்கு வரும் “ஒளி முதிர்வு சக்தியை” சிரசு முழுவதும் பரவச் செய்தால், சிரசின் உச்சியில் தலை கீழாக இருக்கும் சகஸ்ரார மலை நேராக நிமிர்ந்து விடும். அங்கு ஏற்படும் சிதாகாய ஒளியை “யோக குமரன்” என அகத்திய மகாசித்தர் குறிப்பிடுகின்றார்.
சாதகன் அறிய வேண்டியது ஒன்று உண்டு. அண்டபிண்டம் என்று குறிப்பிட்ட சித்தர்கள் சுத்த குண்டலி, அசுத்த குண்டலி என்று மறை பொருளாகக் சொல்வதால் தகுதி உள்ளவன் இதனைப் பெறவேண்டும் என்பதாகவே பொருளாகிறது. இந்த உயர்ந்த “அகத்தியம்” என்ற சக்தியைப் பெற்றவர்களை “அகத்தியர்” என்ற பட்டப் பெயரிட்டு அழைத்தார்கள். அதனால் அநேக அகத்தியர்கள் இன்னும் உலவி வருவதைக் கருத்தில் கொள்ளவும். இருவித குண்டலினி சக்தியைப் பற்றிய விபரம் அறிந்து செயல்படத் தகுதி பெற்றவர்களுக்கு நிச்சயமாக குரு முகத்தில் விளக்கம் பெறுவார்கள்.
சித்தர்கள் பாடலைப் பாடுவதும் பொருள் கொள்வதும் இன்னொரு பெருமையைத்தான் சேர்ப்பிக்கும். சித்தர்கள் அனைவரும் பற்பல வழிகளில் அடைந்துள்ளார்கள். அதனை மந்திரம் என்று தெய்வப் பெயர்களைச் சூட்டியுள்ளனர். தெய்வ மந்திர ஜெபப் பெயர்கள் சரியான வழியை ஒவ்வொரு விதமாகப் காட்டிக் கொண்டிருக்கும். அவரவர் இஷ்டப்பட்ட வழிகளில் செல்லலாம். இப்படித்தான் இந்த வழிதான் சிறந்தது என்று சொல்லமுடியாது.
காரணம் அவரவர் தகுதிக்குத் தக்க வண்டி வாகனங்களில் பிரயாணம் செய்வது போன்றது தான் இதுவும். நமது சுவாமியிடம் இவைகளைக் கேட்டால் கூறுவார். ஆனால் நாம் கற்ற வித்தைகளைப் பரைசாற்றும் பொழுது எந்த குருநாதனும் தனது வாயைத் திறக்க மாட்டார்கள். பணிவு அற்றவனுக்கு எது தான் சித்திக்கும்?
குருநாதர் என்பவர் சீடனது எண்ணங்களைப் புரிந்து கொண்டு வழிகூறுபவர். நாம் பல புத்தகங்களைப் படித்து நம்அறிவு வளர்ந்திருக்கும் அதுவும் நமது இஷ்டத்திற்கு! அதனால் ஏற்படும் குழப்பநிலை இருக்கிறதே அதைச் சொல்லவே முடியாது. படிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் நான் கூறவில்லை. படித்து அதனை உங்கள் அறிவினில் தெளியுங்கள். தெளிந்த பிறகு அதன் உட் பொருள் விளக்கம் கிடைக்கும். அதனை மக்களுக்கு கொடுக்க வாருங்கள். இந்த அறிவு தானம் ஆன்மப் பசியுள்ள எத்தனை பேருக்கு உபயோகப்படும். உபதேசம் கேட்கும் நிலையில் நாம் இருக்கிறோம். உபதேசம் சொல்வதற்கும் தகுதியை உண்டாக்கிக் கொள்வோம். இல்லாவிடில் மதயானை தெளிந்த குளத்தைச் கலக்கி சேறு பூசிக் கொண்டதாக ஆகிவிடும். அகங்கார, ஆணவ, மாயா மும்மல நீக்கம் மிகவும் அவசியம்.
நமது சுவாமி தெளிவாகக் கூறிய பலவற்றில் எனது அறிவில் பதிந்ததை நட்பு முறையில் கூறி இருக்கிறேன். பொறுத்தருள்க!
நமது சுவாமி தனது மூளையில் உருவாகிக் கொண்டிருந்த எதிர்மறை சக்திகளை நல்ல கருத்தின் முதிர்ச்சியாக மாற்றிக் கொண்ட பாடமும் நமக்குப் புரிகிறது. குருநாதர்கள் தங்கள் சீடர்களுக்கு உயரிய நிலையை அடைய வைக்கவே இப்படி சோதிப்பார்கள். நமது சுவாமி பொறுமையாக எதிர் கொண்டார். ஆனால் இந்தக் காலத்தில் நாம் சொல்வதையெல்லாம் சுவாமி கேட்டு நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்று எண்ணி விடுகிறோம்.
இறையருளுடன் வாழ்வதற்குத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வாழும் உணர்வுகள் வரவேண்டும். இல்லா விட்டால் மனதினில் சந்தேகம் என்பது உண்டாகும். இதுதான் நமக்கு எதிர்ப்பை உருவாக்கி இறைநம்பிக்கையைப் பாழ்படுத்தி விடும். மனிதனின் இயற்கை இயல்பு குணங்களை சந்தேகம் என்ற நச்சு மனிதப் பண்புகளை மறையச் செய்து விடும். நீரோட்டம் போன்றதே வாழ்வு! அதனைத் தக்க வைத்துப் பயன் படுத்துவதே விவேகம்.
நமது சுவாமியும் டாக்டர் திரு. ராஜசேகர் அவர்களைப் பல முறை சென்று சந்தித்தவர், ஒரு நாள் அவரது மேஜை மீது நீலவண்ணத்தில் உறை போடப்பட்டிருந்த புத்தகம் ஒன்றைக் கண்டார். வித்தியாசமாக அச்சிடப்பட்டிருந்த அந்தப் புத்தகத்தின் அட்டையில் இருந்த ஒருவரி சுவாமி மனதைக் கவர்ந்தது.
மாமகரிஷி ஈஸ்வரபட்டர் அருளியது என்ற வாசகத்தில் “ஈஸ்வரபட்” என்ற எழுத்துக்கள் மட்டும் வெளிச்சமாகத் தெரிந்தது. சுவாமி விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்கு வரும்போது அந்த வார்த்தை தவிர வேறோன்றும் தோன்றவில்லை. சகலமும் சுவாமியை விட்டு அகன்று சென்று விட்டது போன்றும், இப்போது சுவாமி மட்டும் ஒளிப்பிரவாகத்தில் ஆனந்தமாக இருப்பதைப் போன்றும் உணர்ந்தார்.
மாலையில் ஐந்து மணிக்குப் பேருந்து நிலையத்தில் அமர்ந்தவர், எல்லாம் மறந்து, தனது நினைவுகள் அற்று இரவு ஒரு மணிக்குக் கண்களைத் திறந்தவர் எங்கும் அமைதியில் ஆழ்ந்திருக்கக் கண்டார். தனது கிராமம் ஐந்து கல் தொலைவு மனக்களிப்பில் நடந்து செல்ல வைத்தது. எண்ணிப் பதினைந்து தினங்களில் அதே நினைவில் நமது சுவாமி வழக்கம் போல் ஆரோக்ய நிலைக்குத் திரும்பி விட்டார்.
தனது குருநாதர் தன்னைத் தேடி வந்ததும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினால் கை தொழவும் குருநாதர் ஆசியருளினார். தனக்கு இடப்பட்ட பணிகளைச் சுவாமி பணிவுடன் கேட்டுக் கொண்டார். இருவரது பிறப்புக் காலமும் ஒன்றுதான் என்றார். குருநாதர் தன் ஆதி வரலாற்றைக் கூறிவிட்டு, “திருமணம் செய்து கொள். உனக்கு வானியல் பாடங்கள் தருவோம். சித்தர்கள் வருடப் பிறப்பு ஆவணி மாதத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வரும். சூட்சும ஞானியர்கள் அனைவரும் ‘குருஈஸ்வராலயம்’ என்ற அமைப்பில் செயல்படுவார்கள். ஆகவே பொறுமையும், தைரியமும் தேவை. இனி எனது தொடர்பு அதிகமாகக் கிடைக்கும். நீ அழைத்தால் நான் வருவேன்” என்றார்.
நமது சுவாமி அவரிடம் “தங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா? ” என்றவுடன் அவர்,”எந்தப் பெயரைப் படித்ததில் இருந்து அதே நினைவாக வாழ்கின்றாயோ, அது நான்தான்” என்றார். பிறகு சுவாமிக்கு நமசிவய மந்திர ரகசியம் பற்றிக் கூறியவர், ஜெப மந்திரம் ஒன்று ஓதினார். அது “ஓம் ஸ்ரீ ஈஸ்வரா” என்பதே!
மறுபடியும் சுவாமி தான் “பொள்ளாச்சி மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஐந்து தினங்கள் ஜலசமாதி யோகத்தில் அமரப் போகிறேன். நேரம் கிடைக்கும் போது என்னை வந்து பார்த்து வா. உனது நீர்கண்டத்தை அங்கு நிவர்த்திக்கிறேன்” என்று கூறிவிட்டு மெல்லப் புறப்பட்டார். அந்த தேஜஸ் பொருந்திய தோற்றம் அன்று முதல் இன்று வரை மாறாமல் சுவாமியின் மனதில் பதிந்து விட்டது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும் )
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.