ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
08•09•2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(61) மனிதனே புனிதன் —
காட்சிகள்! காட்சிகள்!!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தொலைக்காட்சிப் பெட்டியை விந்ஞான ஆராய்ச்சியில் கண்டு வெளிப்படும் முன்பு, அது மனிதனின் அறிவில் இருந்த ஓர் ஞான அற்புதம்! இதனை யோகிகளும், ஞானிகளும் தனது தவவலிமையால் பெற்று தொலைநோக்குப் பார்வைக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். தங்கள் உடலை அழியாமல் பாதுகாக்கும் ஒளஷதங்கள் மற்றும் காயகல்ப இரகசியங்களைக் கண்டறிவதற்காக ஞானக் கண்ணைத் திறந்து கொள்ளவும் கடும் தவம் புரிந்து வந்தனர். இடை விடாத முயற்சியால் அதனைப் பெற்று உலக நலனுக்குப் பயன்படுத்தி வந்தார்கள். அப்படிப்பட்ட ஞானியர்களின் ஆசீர்வாதம் வேண்டும், அனுபவ ஞானத்தினைப் பெறவேண்டும் என்கிற தணியாத ஞானதாகம் உள்ளவர் நமது நாகராஜன் சுவாமி!
தியானக்கூட்டம் நடை பெற்றுக்க கொண்டிருந்தது. ‘அருட்பா’ என்ற சிறிய பாடல் புத்தகத்தில் இருந்து ‘தாயே தந்தையே வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக’ என்ற பாடலை ஒருவர் பாட(வசன நடையில் தான்) மற்றவர்கள் அதனைப் பாடினார்கள். கோயிலின் தென்பகுதியில் சிறிய ஆலய அமைப்பில் சிவன் பிரதிஷ்ட்டை முன்பாக ஆண்கள் வடக்கு திசை பார்த்தும், பெண்கள் தெற்கு முகமாகவும் அமர்ந்திருந்தனர். அக் கூட்டத்தின் தலைவராக பொள்ளாச்சி டவுன் போலீஸ் ஸ்டேஷன் வீதியில் உள்ள குறிஞ்சி சில்க்ஸ் ஜவுளிக்கடை உள்ள பெரிய கட்டிடத்தின் உரிமையாளரும், தீப்பெட்டித் தொழிற்சாலை நடத்தி வந்த திரு. இராமசாமி என்பவரே அவர்! டாக்டர் திரு.ராஜசேகரன் அவர்களின் மூத்த சகோதரி திருமதி. காந்திமதி அம்மாள் அவர்களின் கணவனும் ஆவார்.
நமது சுவாமி அவர்கள் அங்கு அமைதியாக நின்று கொண்டிருந்தார். கூட்டத்தின் நடுநாயகமாக அமர்ந்து பாடிக் கொண்டிருந்த நமது டாக்டரின் தாயார் திருமதி.M.சுந்தரம்மாள் அவர்கள் சுவாமியைப் பார்த்து விட்டு, “தம்பி இங்கே வந்து நீயும் உட்கார்ந்து கொள். நாங்கள் எல்லோரும் தியானம் செய்கிறோம். நீயும் கண்களை மூடி “ஓம் ஈஸ்வராய குருதேவா” என்று தியானம் செய்யப்பா” என அன்புடன் கூறினார்கள்.
சிவன் கோயில் வாயில் படி முன்பு ஒரு சிறிய படம் வைக்கப்பட்டது. படத்தில் தவத்திரு வேணுகோபால சுவாமியும் மற்றொரு பாதியில் ஒன்பது தீ நாக்குகள் கொண்டு எரியும் அக்கினியின் நடுவே ஒரு பெரியவரின் தலை அச்சிடப்பட்டு, சமுத்திர நீர் இரத்தமயமாக ஒளிர, ரத்தக்கடலின் மீது மஞ்சள் வண்ணத்தில் சூரியன் தகதகவென உதயமாகி, ஆகாயமும் இரத்த மயமாகக் காட்டப்பட்டிருந்தது.
ஆகாயத்தில் பச்சை நிற எழுத்தில் ‘ஓம் ஈஸ்வரப்பட்டாய குரு தேவர் அருளிய அருள் வாக்கு’ என்றும் அதன் கீழே அரை வட்ட வடிவில் ‘ஓம் ஈஸ்வராய குருதேவர்’ எனவும் வித்தியாசமாக இருக்க, அது ஏதோ ஒரு கருத்தைக் கூற வருவது போன்று மனதில் பட்டது. அந்தப் படத்திற்கு முன்பு வைக்கப் பட்டிருந்த தட்டில் பேக்கரியில் இருந்து வாங்கி வந்த பன்கள், மற்றும் முறுக்கு வகைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நைவேத்தியம் சற்று வித்தியாசமாக இருந்தது.
படத்தில் இருந்த தவத்திரு வேணுகோபால சுவாமி என்பவரை எங்கேயோ பார்த்த மாதிரி மனதில் உதயமாகியது. சுவாமி அவர்களுக்கு அகக் காட்சிகள் உதயமானது. தவத்திரு வேணுகோபால சுவாமி மட்டுமல்லாது, டாக்டர் திரு. ராஜசேகரன் அவர்களின் தாயார் திருமதி சுந்தரம்மாள் அவர்களும், தனக்குச் ஜென்மாந்திரத் தொடர்பு உள்ளவர்கள் என்பதை அகக்காட்சியில் கண்டு மனம் சந்தோஷப்பட்டாலும் சுவாமிக்கு வெளியில் அதைச் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை.
அமைதியாக தியானத்தில் ஆழ்ந்து போனார். மெதுவாகக் கண்விழித்த போது எல்லோரும் சுவாமியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்களுக்குள் அவர்களின் பாஷையில் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது திரு. இராமசாமி அவர்கள், ” இதக் கேளுங்க! வீட்டில் அவரவர்கள் சொந்த மொழியில் பேசிக் கொள்ளுங்கள். இது பொது இடம். இங்கு தமிழில் பேசினால்தானே மற்றவர்களுக்கும் புரியும்” என்று தனது கண் கண்ணாடியை அணிந்து கொண்டு, சற்று கரகரப்பான குரலில் கணீரென்று பேசினார். அவர் பேசிய உண்மை அங்கிருந்த சிலருக்குப் பிடிக்க வில்லை என்பது அவர்களின் முகபாவனையில் இருந்து தெரிந்தது.
சுவாமிக்கு இன்னும் ஒரு சந்தோஷ அதிர்ச்சி காத்திருந்தது. “தியானத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அவரவர்களுக்குக் கிடைத்த காட்சிகள் பற்றிக் கூறுங்கள்” என டாக்டரின் தாயார் கூறியதும் அதிர்ந்து போனார் நமது சுவாமி!
‘ஆஹா.. அகக்காட்சிகள் பற்றி நன்றாக அறிந்தவர்கள் போலத் தெரிகிறது. அதன் உண்மைகளை இவர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பதை அறிந்து கொள்ள வழி கிடைக்கும் போல வருகிறது. எப்படியும் இவர்களிடம் அறிந்து கொள்ளலாம்.எதற்கும் பொறுமையாக இருக்க வேண்டும்’ என மனதில் நிம்மதி கொண்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.