ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
12•09•2016,
திங்கட்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(65) மனிதனே புனிதன் —
கவனித்தல் -நேசித்தல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சற்குருநாதர் மேலும் கூறினார், “நாகராஜா ஆவி ஆத்மாக்கள் தாங்கள் வாழ்வதற்கு ஏதாவது ஒரு சரீரம் வேண்டியே, கவனிக்கும் சக்தியை உபயோகித்து, உடலை நேசிக்கத் தலைப்பட்டு சந்தர்ப்பத்தைப் பயன் படுத்துகின்றன. இங்கு மனதை இழப்பவர்கள் அல்லது உணவு சாப்பிடும் போது வேறு எண்ணத்தில் இருப்பவர்கள் அகப்பட்டுக் கொண்டால் போதும். அல்லது பயந்த சுபாவம் உள்ளவர்களை சீக்கிரம் ஆட்கொண்டு விடுவார்கள். மிகவும் பேராசை உள்ளவர்கள, உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளாதவர்கள், வீண் பாசனத்திற்கு அடிமையாகிப் போனவர்கள், ஏக்கங்களுடன், கோபமும் உடையவர்கள் உடலினுள், அவர்கள் தங்கள் வசம் இழந்த நேரத்தில் உள் நுழைந்து கொள்வார்கள்.”
“தெய்வீக எண்ணமுடன் வாழும் ஒருவர் மன மயக்கம் உறாமல், இறையருள் சக்தியை நேசிக்கும் மனப்பான்மையுடன், கவனித்தல் என்ற சக்தியை உபயோகப் படுத்தினால் உலகமே வசமாகும். ஏன் ஆண்டவனுடன் கூடப் பேச முடியும். சரி வா குளிக்கப் போகலாம் ” என்றவர், ஓடையின் நீர் தேக்கப்பட்டிருந்த தடுப்பணைக்குக் கூட்டிப் போனார். உச்சி வெயிலில் கொதிக்கும் சூடான பாறையில் அமர்ந்து கொண்டார். உடல் அவர் எண்ணப்படி இயங்கியது. வெகுநேரமாகச் சூரியனையே பார்த்துக் கொண்டிருந்தார். நமது சுவாமிக்கு அந்தப் பாடம் புரிந்து விட்டது. சிறு மூளையை இயக்கி குவியும் சூரியக்கதிர் ஒளியை இடதுபுற மூளைப்பகுதிக்கு அனுப்பிக் கொண்டும், தொண்டைப் பகுதியில் கூர்ம நாடியுள் சனிக் கோளினுடைய ஒரு துருவ அறுகோணத்தை, அதன் சக்தியை ஈர்த்துத் தன்னுள் செயல்படுத்திக் கொண்டுமிருந்தார். வெப்பத்தையும், குளிர்ச்சியையும் சமன்பாடு விகிதாச்சாரத்தில் கலக்க விட்டு சக்தியைத் தன்னுள் வளர்த்துக் கொள்ளும் அற்புதமான ஓர் செயலாகும்.
குருநாதர் ஆனந்தம் கொண்டார். விஷயத்தை உடனுக்குடன் கிரகித்துக் கொண்டு விடும் சீடப் பிள்ளையை குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரர் அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். முதன்முதலில் சூரியன் பற்றிய ஆன்மிக விஷயம் சற்குருநாதரால் நாகராஜன் சுவாமிக்கு அருளப்பட்டது. சூரியனின் குளிர்ச்சி சக்தியைத் தனது தவத்தில் பெற்றிட வழி காண்பித்தார். தொடர்ந்து அந்தப் பயிற்சியை தனது அப்பியாசத்தில் நன்றாகப் புரிந்து கொண்டு கடைப்பிடித்து வரலானார்.
பிறகு தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ வரும் இடர்பாடுகளைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள்.
அதன்பிறகு அவர் சுவாமிகளிடம் தண்ணீரில் நின்று ஜெபம் செய்திடும் முறையைப் போதித்தார். அப்போது கையில் வைத்துக் கொள்ளும் பொருட்கள் பற்றிச் சொன்னார். வில்வம், அறுகு, தர்பைப் பற்றியும் அதனை முறையாகக் கையாளும் தன்மைகள் பற்றிச் சொன்னார்கள். சர்பதோஷ நிவர்த்திக்கு அதில் வழியுண்டு என்றார்கள். நிர்வாண யோகிகள் மற்றவர்களுக்காகச் செய்யும் பரிகாரங்களை எடுத்தோதினார். “கோயிலடி மரத்தின் நிழலில் நான் இருக்கிறேன். நீ யாருக்காகவாவது நீரின் கரையில் நின்று இருகரங்களால் நீரை எடுத்து பிரார்த்தனை செய்து குளிக்க வேண்டும். நூற்றெட்டு ஜெபத்துடன் ஆடைகள் துறந்து சூரியனைச் சாட்சி வைத்துச் செய்து விட்டு, என்னைப் பார்க்க வந்து விடு” என்று கூறியபடியே உயர்ந்த பாறைகள் வழியே அனாயாசமாக உயரே ஏறிச் சென்று விட்டார். சுவாமி நாகராஜ் அவர்கள் தன்னுடைய குருநாதர் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைசக்தியிடம் பிரார்த்தனை செய்து விட்டு, சங்கல்பங்கள் ஜெபித்துக் கொண்டார்.
உடைகளைக் களைந்து திகம்பரனாக நின்று சூரியனை வாழ்த்திப் கொண்டு, நீரினுள் இறங்காமல் கரையில் நின்று கொண்டார். பஞ்ச பூதங்கள் சாட்சியாக இரண்டு கரங்களிலும் நீரை எடுத்து ஜெபம் சொல்லி தன்மீது ஊற்றிக் கொண்டு குளித்தார். நூற்றியெட்டுக் தடவை நீரை ஜெபம் செய்து தலை முதல் உள்ளங்கால்கள் வரை ஊற்றிக் குளித்த பிறகு, புதிய தெம்பும் உற்சாகமும் உடலில் மின்காந்த சக்தியும் கூடிவிட்டதை நன்றாக அனுபவ வாயிலாகப் பெற்றுக் கொண்டு விட்டார். மனதில் குருநாதருக்கு நன்றி சொல்லி உடுப்புகள் அணிந்து கொண்டு தனது இதய தெய்வத்தைப் பார்க்க வேகமாக உயரே பாறையின் மீது ஏறி கோயிலடி மரத்தை நாடிப் போனார். அங்கு கண்ட காட்சி சுவாமி யை அதிர்ச்சி அடையச் செய்தது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.