கவனித்தல் சக்தி.

134

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

11•09•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(64) மனிதனே புனிதன் —
கவனித்தல் சக்தி.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தோப்பு மலைக்குச் செல்லத் தன்னை ஆயத்தம் செய்து வந்தார் சுவாமி. தனது மனைவியுடன் அமர்ந்து சமயம் கிடைக்கும் போதெல்லாம் ரிஷிபத்தினி சக்தி குறித்து எண்ணத்தில் கொள்வதும், தியானம் இருப்பதுமாக இருந்தார். இப்படி தியானம் இருந்து வருவது ‘குடும்பத்திற்கு ஆகாத விஷயமாக’ சுவாமி குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்பட்டு விட்டது. தகப்பனார் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று விட்டால் இந்தப் புகைச்சல் மெல்லக் கிளம்பும். மருமகளுக்குப் புத்தி சொல்வதில் துவங்கி பிறகு நிர்பந்தம் செய்வது என்று முடிவாகியது. இதில் மாட்டுப் பெண்கள் பாடு என்பது சொல்லி மாளாது. சுவாமிக்குத் தெரிய வராமல் முதலில் உணவு உண்ண விடாமல் செய்ய முயன்றனர்.

இவையெல்லாம் கிராமத்தில் கைவந்த கலை. இட்லி இருக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சட்டினியோ, சாம்பாரோ இருக்காது. சாதம் இருக்கக் குழம்பு மாயமாகி விடும். எப்படியோ அதையும் உண்டு விடலாம்! காதுகள் பட குடும்ப விமரிசனங்கள் செய்து மனம் நோகச் செய்வது என்கிற படி போனாலும், சுவாமியம்மா மீனாம்பாள் அவர்கள் அதனைக் கண்டு கொள்வதுமில்லை, பொருட்படுத்துவதும் இல்லை. மெளனத்தாலும், பொறுமையாலும் எதிர்ப்பை வென்று மீண்டு வந்தார். தனது இனிமையான வார்த்தைகளால் வலியச் சென்று தியானம் பற்றி எடுத்துச் சொல்லி வரலானார்.

இருந்தாலும் இது வேலை வெட்டி இல்லாத சாமியார்கள் காரியம் என்ற குறிக்கோளை மட்டும் மாற்றிக் கொள்ள யாரும் கடைசி வரையில் சம்மதிக்கவும் இல்லை. நாளொரு துன்பமும் பொழுதொரு வாதனையும், வேதனையுமாகப் பொழுது விடியும். சுவாமியம்மா அவர்களால் மட்டும்தான் சமாளித்து வர முடிந்தது. இன்று குருஈஸ்வராலயத்தில் முக்கிய பொறுப்பை வகிக்கின்றார் என்றால் அவர் சுவாமி அவர்களிடம் கற்றுக் கொண்ட சிறுசிறு நல்ல விஷயங்கள்தான்.

“தோப்பு மலைக்குச சென்று வருகிறேன்”- என்று சுவாமி நாகராஜ் கூறியதும், தமக்கே உரித்தான முறையில் உணவு மற்றும் தேவைகளைத் தந்து உதவினார்கள். சுவாமி தனியாளாய் மலையின் அடிவாரத்தில் வழக்கப்படி தியானம் செய்து விட்டு மலைப் பாதையில் சென்றார். காலையில் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகள் கூட்டம் கூட்டமாக மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த காட்சி பரவசத்தை ஏற்படுத்தியது. மலைக் கோயிலுக்குச் சென்று ஸ்ரீ நந்தகோபாலை வணங்கி விட்டு வெளியேறி வந்து பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டார். தியானத்தில் அமர்ந்து நேரம் போவது அறியாமல் அதில் ஆழ்ந்து போயிருந்தார். கண்விழித்த போது சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வரர் எதிரில் சித்தாசனத்தில் அமர்ந்து இருந்தார். எப்படி? எப்போது? எங்கே இருந்து வருகிறார்?! என்பது கடைசி வரையிலும் புரியாத மர்மமாகவே இருந்தது. தனது குருநாதனை நினைத்தாலே ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்து விடும் சுவாமிக்கு, அவரை நேரில் பார்க்கும் போது நமது சுவாமியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்!

“எழுந்து என்னுடன் வா” என்று எழுந்து அழைத்தபடியே குருநாதர் முன் செல்ல சுவாமி பின் தொடர்ந்தார். பாறைகளின் வழியே கூட்டிப்போய் ஓடையின் கரையில் அமர்ந்து கொண்டார். சீடனும் சற்றுத்தள்ளி அமர்ந்து கொள்ள அருகே அழைத்தார். தனது குருநாதர் அருகில் செல்ல மய்க்கத்தைத்தரும் நறுமணம் அவரைச் சுற்றிலும் கமழ்ந்து கொண்டிருந்தது. மின்னல் வீச்சைப் போல் வன தேவதைகள் தங்களின் ஓளி வீச்சைக் குருநாதரின் சிரசினைச் தற்றிவரச் செய்து மகிழ்ந்து மறைந்தனர். நீரில் பிரதிபலிக்கும் சூரிய ஒளிப் பிரகாசத்தைக் கவனிக்கச் சொன்னார். சுவாமி நாகராஜ் அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தார். ஏதோ ஒரு ஆகர்ஷன சக்திக்குத் தான் வசமாவதைச் சிறிது நேரத்தில் உணரத் தலைப்பட்டார். சுவாமி முகத்தின் முன்பு தனது ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் சேர்த்து சப்தம் உண்டாக்கி விடக் கண் விழித்த சுவாமியின் கண்களுக்கு சில காட்சிகள் தென்பட்டன. இறந்து பட்ட ஆத்மாக்கள் தாங்கள் வாழ, சக்தி பெறத் தண்ணீரில் பிரதிபலிக்கும் ஒளியை கிரகித்துக் கொண்டிருந்தன! எங்கும் புகைப் படலம் போன்று தென்பட்டன. ஒளியானது, ஒலியாக மாறும் அதிசயமான மெய்க்காட்சியில் மனம் தன்னை இழந்து கொண்டிருப்பதை அதாவது மன மயக்கம் ஏற்பட்டுக் கொண்டிருப்பது பிரியமானதாக இருந்தது.

சற்குருநாதர்,”இது உனக்குச் சக்தி பெறும் வழியல்ல! மன மயக்கம் ஏற்படும் பொழுது ஆவிகள் உனது உடலினுள் பிரவேசித்து விடும். நீ அதனை உற்றுப் கவனித்தாலோ, அதிசயமாகப் பார்த்தாலோ உனது சக்தி குறையும் நேரத்தில் அவைகள் நெருங்கி வரும். அவைகள் இறந்த பிறகும் வாழ ஆசைப்படுகின்றன. அதற்கு அவைகள் ‘கவனித்தல்’ என்ற சக்தியை உபயோகப் படுத்துகின்றன! அதனுள்தான் மனித உடலை அல்லது மற்றவைகளை நேசிக்கும் தன்மை அவைகளின் குறிக்கோளாக மறைந்து இருக்கும்” என்றார்.(தொடரும்)

– ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன் மதுரை
M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button