ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
29•09•2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(82) மனிதனே புனிதன் —
ஐவர்மலை மெளன மலை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சமணத்துறவிகளாலும், ஏனைய ஞானியர்களாலும் ஐயிரை மலை, மெளனமலை, மனக்குன்று என்றெல்லாம் பேசப்பட்ட ஐயிரை மலை, இன்று சொல் வழக்கில் ஐவர் மலை என்று மறுவிவிட்டது. பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாதவாச காலத்தில் வந்து் தங்கி இருந்ததாகவும், பீமன் களி உருண்டை என்று தனியே நிற்கும் உருண்டைப் பாறையையும் சுட்டிக் காட்டுவார்கள்.
இப்போது பெளர்ணமி சமயம் அன்னதானம் நடந்து வருகிறது. இதை நமது நாகராஜ் சுவாமி தொடங்கி நடத்தி வந்தார். சுற்று வட்டாரப் பொதுமக்கள் இன்று தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சுவாமியின் குருநாதர் அநேக காலங்கள் தங்கி தவம் புரிந்த மலை இது என்ற காரணத்தால் கூட அடிக்கடி சென்று தங்கி தவம் புரிந்து வந்திருக்கலாம். இரண்டு சிறு குன்றுகள் ஒன்றாக இருக்கும் அதில், தெற்கு பக்க குன்றின் உச்சியில் கணபதி கோயிலும், வடக்கில் முருகன் கோயிலும் உள்ளது. இடையில் உள்ள கணவாயில் மடமும், மண்டபமும் உள்ளது. மடத்துக்கு மேற்புறம் குளம் இயற்கையாக அமைந்துள்ளது.
முருகன் கோயிலுக்கு வடபுறமும் மழை காலத்தில் நீர் தேங்கி இருக்கும் பெரிய இரண்டு பள்ளங்கள் இருக்கிறது. காற்று மிகவும் வேகமாக வீசும். சமாளித்தபடி நடக்க வேண்டும். காற்று வீசும் போது முருகன் கோயில் பள்ளத்தில் உள்ள நீரில் அலை அலையாக ஓம் என்பது போல் தோன்றுவது கண் நிறைந்த காட்சி தான். இங்கு உயிருடன் சமாது ஆனவர்கள் அதிகம் தான். இங்கு சமணத்துறவிகள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. விசிறி சாமி சமாதியான இடத்தில் இருந்து கூப்பிடு தூரம் தெற்கில் நடந்தோமானால் மிகப்பெரிய எக்காலத்திலும் நீர் வற்றாத பெரிய தாமரைக் குளம் உண்டு.
நினைத்த மாதிரி இப்போதெல்லாம் ஜீவசமாதி ஆக முடியாது! கொஞ்ச காலத்திற்கு முன்பு அப்படி சமாது ஆக எண்ணிய ஒரு சன்நியாசியை தடை செய்து, பிறகு அவர் இறந்தவுடன் நல்லடக்கம் நடை பெற்றது. அவர் எப்போதும் தமது கரத்தில் விசிறி ஒன்றை வைத்து இருப்பார். இரண்டு கோஷ்டிகளாக மாறிய பக்தர்கள், மண்டைகள் உடையும் சண்டைகள் இல்லாமல், எப்படியோ ஒருவகையில் சமாதானமாகி, சாமிகளின் ஆவலைப் பூர்த்தி செய்தார்கள். நமது சுவாமி அவர்கள் அங்குள்ள குகையில் தவமிருந்து, சில உண்மைகளை உணர்ந்துள்ளார்கள்.
மரங்கள், செடி, கொடிகள் இல்லாத அந்த மலையைத் தேடி வந்து தவம் செய்து செல்வது எதனால்? அமாவாசை காலங்களில் மாந்திரீகர்கள் வந்து என்ன இங்கு அடைகிறார்கள்? நமது சுவாமியின் குருநாதரும், சுவாமியும் அங்கு எதற்காக தவத்தில் இருந்தார்கள்? எங்கிருந்தோ தேடி வந்து அநேக ஞானியர்கள் அன்னாகாரமின்றி சந்தோஷமாக இருப்பது ஏன்? இப்படியெல்லாம் எனக்கு எண்ணத்தில் தோன்றியதை நமது சுவாமியிடம் கேட்டும் விட்டேன். அதற்கான விடையை எப்போது சொன்னார் தெரியுமா? சற்குரு நாதரின் இரண்டாவது சீடர் தவத்திரு வேணுகோபால சுவாமி, அங்கே ஓரு தியானக் கூட்டத்திற்குச் ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் எல்லோரும் செனாறிருந்தோம்.
பலரும் பலவற்றைப் பேசினார்கள். நமது சுவாமி நாகராஜ் மட்டும் மெளனமாகவே இருந்தார்கள். இரவு பத்து மணிக்கு மேல் சந்தடியில்லாமல் எழுந்து சென்ற நமது சுவாமியை, சத்தமின்றி நாங்கள் நான்கு பேர் பின்தொடர்ந்தோம். நல்ல நிலவொளி பகல் போல் இருந்தது. முருகன் கோயிலுக்கு கிழக்குப் புறம் உள்ள வசதியான பாறை ஒன்றில் அமர்ந்து கொண்டார். ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர், எங்களைப் பார்த்து விட்டு வரச்சொல்லி சைகை செய்தார். அருகில் அமரச் சொல்லிவிட்டு தியானத்தில் ஆழ்ந்து போனார். நாங்களும் தியானத்தில் அமர்ந்தோம்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.