ஐயன் திருக்கைலாயம் சேர்தல்.

260

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

26•05•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(330) மனிதனே புனிதன் —
ஐயன் திருக்கைலாயம் சேர்தல்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°வளர்த்தகடா மார்பில் பாயும் என்ற மூத்தோர் சொல்லை ஜீவன் படுத்தத்தானோ என்னவோ, வெள்ளைக் காளை கண்கள் சிவக்கக் கொம்புகளைச் சாய்ந்தபடி ஐயனை நோக்கி வேகமாக வந்தது. ஐயனோ மெய் மறந்து சிவானந்த லகரியில் ஆழ்ந்து, கைகளை உயர்த்தித் தொழுதபடி ஆகாயத்தில் தோன்றிய ஒளியையும், நந்தி தேவனையும் சேவித்தபடி நின்று கொண்டு இருந்தார். அவ்வரிய காளை ஹூங்காரம் செய்தபடித் தனது கூர்மையான கொம்பு
களால் ஐயன் என அழைக்கப் படும் திரு.சின்னய்யன் அடி வயிற்றில் பலமாகக் குத்தி ஊடுருவும்படி செலுத்தி, மேலே வாரித்தூக்கி உயரத்தில் நிறுத்தி, அசைத்தது. அந்த அசைவினால் சிவனருட் செல்வரான திரு.சின்னய்யன் சர்வலோகைகநாதன் என்று உபநிஷத்துக்களால் புகழ்ந்து கொண்டாடப்படும் பகவான் ஸ்ரீ ஈஸ்வரரின் திருவடி நிழலை அடைந்து மாறாத பேரின்ப வாழ்வை அடைந்து வாழ்ந்திருந் தார். இத்தகைய மகானு பாவனு டைய உடலை உற்றாரும், ஊராரும் ஒன்று கூடி அக்கால வழக்கப்படி மயானத்தில் வைத்துத் தீயிட்டு நீராக்கி, நீர்க்கடன் அனைத்தும் சிறப்புடன் செய்து வெகு விமரிசையாக வழிபட்டார்கள். அன்றைய 1871-ஆம் வருடம், செளமிய ஆண்டு, மார்கழி மாதம் 15 -ந்தேதி, திருவாதிரை நட்சத்திரம், வெள்ளிக் கிழமை, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு என்ற கணக்குப்படி “கதழி வன நாதர்” என்றும் ” வாழைத் தோட்டத்து ஐயன்” என்றும் பக்தர்கள் கொண்டாடும், “விஷ நோய் நிவாரண மந்திர சக்தி” யை ஸ்ரீ ஈஸ்வர சற்குருநாதரிடம் அன்பு கூர்ந்து பெற்ற திரு.சின்னய்யன் அவர்கள் 72 ஆண்டுகள் இப் பூமி மக்களுக்குச் சேவைகள் செய்து திருக்கைலாய பதவியை அடைந்தது இன்றைக்குச் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

சிவனருட் செல்வர் ஐயன் அவர்கள் மூன்று வருடங்கள் சென்ற பிறகு தனது பண்ணை ஆள் கனவில் தோன்றி சில செய்திகளைத் தெரிவித்தார். அது, ” தென் கைலாயமான வெள்ளிங்கிரி மலையில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கிச் செல்லும் நொய்யல் ஆறு சாமளாபுரத்திற்கு வடக்கில் கிழ்மேலாக ஓடிக் கொண்டிருக்கி றது. அதன் வட கரையில் தர்பைப் புல் பெரிய புதராக வளர்ந்துள்ளது. அப்புதருக்கு ஒரு முழம் கீழ்ப்புறத்தில் மணலுக் குள் “சுயம்பு லிங்கம் ஒன்றும், அவ்வாற்றின் தென்கரையில் பெரியதொரு கொளஞ்சிச் செடியின் கீழ் பூமிக்குள் நந்தி உருவக் கற்சிலை ஒன்றும் இருக்கிறது. அவைகளை எடுத்து வந்து நமது பெருந்தோட்டத்து துலைக்கிணற்றிற்குத் தென் மேற்கில் செழுமையாக வளர்ந் திருக்கும், கிளுவை மரத்தின் அடித்தளத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். நாள் தோறும் காலை மாலை இரு வேளையும் கிரமம் தவறாமல் பூஜித்து வரவேண்டும். அவ்வாறு செய்தால் அவ்விடத்தில், அருளும், அற்புதமும், மகிமை யும், தெய்வத்தன்மையும் சிறந்து விளங்கும். கோரிக்கைகள் நிறை வேறும். பல்லாயிரம் மக்கள் பயன் பெறுவர். இது எனது கட்டளையாக நீ ராசியண்ணனி டம் தெரிவிக்க வேண்டும்” என்றுரைத்தார். காலையில் எழுந்ததும் இந்தக் கனவைப் பற்றித் தனது எஜமானிடம் பண்ணையாள் தெரிவிக்க மிகவும் அதிசயப்பட்டு, அவரும் ஊர் மக்களும் சேர்ந்து சென்று, அவற்றைக் கொணர்ந்து வந்து கிளுவை மரத்தடியில் பிராணப் பிரதிஷ்டை செய்தனர். தென் புறத்தில் விநாயகருக்கு கோவில் அமைத்து எழுந்தருளச் செய்தனர். வழிபாடுகள் சிறப்பாகச் செய்து வந்தனர். சில வாரங்களில் கிளுவை மரத்தின் தென்புறம் புற்றொன்று நன்கு வளர்ந்தது. அது தான் அன்று முதல் விஷக்கடி தீர்க்கும் சஞ்சீவினி மருந்தாக மக்களுக்கு உதவியது. புற்றுமண்ணை மேல் பூச்சாக நீரில் குழைத்து உடலில் பூசி மக்கள் தங்களின் பிணி தீர்த்துக் கொண்டனர்.

நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் ஐயன் கோவிலுக்குச் தனது குடும்பத்தினருடன் சென்று இருந்தார். சுவாமியின் சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வரபட் ஆண்டவர் முக்கிய காரணம் கருதி அங்கு சென்று வரப் பணித்திருந்தார். கதழிவன நாதர் ஸ்ரீ ஐயனின் ஆசீர்வாதம் பெற்று வரக் கூறியிருந்தார். கர்பக்கிரகத் தினுள் பெண்களுக்கு மட்டும் அங்கு அனுமதியில்லை. ஆண்கள் அவரவர்களே சென்று பூஜை செய்து கொள்ளலாம். சுவாமி தனது பிள்ளைகள் கோகுல், மெளலி இருவருடன் உள்ளே சென்று வழிபட்டார். கிளுவை மரத்தின் தென்புறம் இருந்த புற்றினுள் சிறிய குழிபோல் இருந்த இடத்தின் உள்ளே கையைவிட்டுப் புற்று மண்ணை எடுக்க வேண்டும். எடுத்துக் கொண்டிருந்தபோது கிளுவை மரத்தின் மேலிருந்து சரசரவென இறங்கிய பெரிய நாகம் ஒன்று மரக் கிளை பிரியும் இடத்தில் அமர்ந்து கொண்டது. படம் விரித்து ஆடிக் கொண்டி ருந்த நாகம் மரத்தின் பின்புறம் வழியாக இறங்கி சிவலிங்கத்தின் பின்னால் நின்று ஆடியது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button