எதிர்மறையில் மீளுதல்!

207

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

23•08•2016,
செவ்வாய்க்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(50) மனிதனே புனிதன் —
எதிர்மறையில் மீளுதல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்கள் என்னிடம் பல ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களைப் புள்ளி விவரமாக, தேதி, கிழமை, மாதம், நேரம் எல்லாம் குறிப்பிட்டு அந்தந்த நிகழ்ச்சிகள் பூராவும் என்னொன்ன நடைபெற்றது, என்ன பேசினார்கள் என்பதைக் கூறினார். இது எனது சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தது. சுவாமி எல்லாம் நேரில் நடந்து கொண்டிருப்பதைப் போல வர்ணித்ததும், எனக்கும் அந்த சம்பவம் நினைவினில் அப்படியே வந்தது.

ஆச்சரியப் பட்டேன். சுவாமியும், “இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? ஞாபக சக்திக்கும் மனதிற்கும் சரியான தொடர்பு இருப்பதாக நமக்கு நம்பிக்கை வரவேண்டும். தவிர ஞாபகசக்தி தினமும் கூடிக் கொண்டே இருப்பதாக எண்ண வேண்டும். தேவையான பதிவுகள் மட்டும் ஞாபக சக்திக்குள் வைக்க வேண்டும். அந்தத் தகவல்கள் அனைத்தும் மெய்யானதாகவும், சுத்தமானவைகளாகவும் கொண்டு செல்ல வேண்டும். நாம் விரும்பாதவைகளே நிச்சயமாக வெளியேற்றிவிட வேண்டும். தவிர நமது ஆன்ம முன்னேற்றத்தையும் கவனித்து அது வளர்ச்சி பெறுவதில் அதன் உறுதியையும், மேன்மையையும் மனதில் கொள்ள முடியுமானால் எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப் படுத்த முடியும்” என்றார்.
நாங்களும் சுவாமி அவர்களும் ஒரு ஆன்மிகக் கலந்துரையாடல்களைக் கேட்கச் சென்றிருந்தோம்.எத்தனையோ விஷயங்கள் அங்கு பேசப்பட்டது. ஆனால் நமக்குத் தேவையான விஷயங்கள் இங்கிருந்து, இவரிடமிருந்து வருகிறதே என்று நான் புரிந்து கொண்டது அன்றைக்குத்தான். நமக்குத் தேவையானதைத்தான் பேசுவார். பிறகு மெளனமாகி விடுவார். இதில் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்ன வென்றால் சிறுசிறு குழந்தைகள் எல்லோருக்கும் இவருக்கு விளையாட்டுத் தோழர்கள் ஆகி விடுவார்கள்.

இவரும் அவர்களுடன் சேர்த்து விளையாடிக் கொண்டிருப்பார். சில குழந்தைகள் பேர் சொல்லியும், வாடா, போடா என்றும் பேசுவார்கள். அதையெல்லாம் இவர் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் இவருடன் சேர்ந்து தவத்தில் சிறு குழந்தைகள் கூட அமர்ந்து இருப்பார்கள். இவருடன் குழந்தைகள் பல அற்புதங்கள் பற்றிப் பேசுவதை நானும் கண்டிருக்கிறேன். தெய்வீகத் தொடர்பை சிறு குழந்தைகள் அடைய இவர் அவர்களுக்கு ஆலோசனைகள் கூற அவர்களும் பொறுமையாகக் கேட்டுக் கொள்வார்கள். இது ஒரு அபூர்வ தன்மைதான்.

பெரியவர்களுக்கு எத்தனை மரியாதையைத் தருகிறோமோ அத்தனை மரியாதையை சிறு குழந்தைகளுக்குக் கொடுப்பார். ஒருமுறை வெளிநாட்டு சுவாமி ஒருவர் ஆயுர்வேத வைத்தியம் பார்க்க கேரளா திருவனந்தபுரம் வந்தவர் நமது சுவாமியைப் பார்க்க ஆசைப்பட்டதால் இவரும் சென்றிருந்தார். அங்கு ஜெர்மன் தேசத்தில் இருந்து ஒரு குடும்பம் அந்த சுவாமியின் பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களின் மகன் பத்து வயதுக் சிறுவனைச் சக்கரவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு மருத்துவ மனைக்கு வந்திருந்தனர். அவனிடம் ஒரு அபூர்வ சக்தி இருந்தது.

நாம் ஏதாவது ஓர் பொருளை அவன் கையில் கொடுத்தால் அதனை முகர்ந்து பார்த்து, கொடுத்தவர் எப்படிப் பட்டவர் என்பதனை மிகத் துல்லியமாகக் கூறிவிடுவான். நமது சுவாமி எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ள வெளிநாட்டு சுவாமிக்கு மிகுந்த ஆவல்!
ஆவல் அதிகரிக்க அவர் தங்கி இருந்த விடுதியின் அறைக்கே அச்சிறுவன் வரவழைக்கப் பட்டான். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மிகவும் நல்ல நிறமும், சிரித்த முகத்துடனும் அறைக்குள் வந்தான். அவனது தந்தை ஜடாமகுடம் போல் கொண்டை அணிந்து வித்தியாசமான தோற்றத்தில், வண்டியைத் தள்ளியபடியே வந்து வணக்கம் சொன்னார்.

உடனே இரண்டு கண்ணாடி டம்ளர்களில் தண்ணீர் ஊற்றி நமது சுவாமிக்கு ஒரு டம்ளர் நீரும் தந்து தானும் ஒன்று கையில் வைத்து மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தார். நமது சுவாமி மெளனமாக டம்ளர் நீரைக் கையில் பிடித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டு சுவாமி படித்தவர், மிகவும் வசதி மிக்கவர். அதிகார மான குரலில் பேசுவார். எல்லா நாடுகளிலும் பக்தர்கள் உள்ளவர். உண்மையாகவே அவருக்கு ஏகப்பட்ட மரியாதை! நன்றாகப் பழகக் கூடியவர். அவர் பங்கு ஜெபம் முடிந்த பிறகு ஜெர்மன் சிறுவனிடம் டம்ளர் தரப்பட்டது.

அதனை முகர்ந்து பார்த்து விட்டு, “இதில் கெட்ட எண்ணங்கள் வருகின்றன. இவர் தனது பொறாமை குணத்தை நீக்காவிடில் கடுமையான வியாதிக்கு ஆளாவார்! என்னை இங்கு வரவழைத்தது பிறரைப் பற்றிய ரகசியங்களை இவர் அறிந்து கொள்ளப் பார்க்கிறார். தன்னைப்பற்றித் தெரிவதே ஞானம்” என்றதும் அவருக்குக் கடுமையான கோபம் வந்து விட்டது. பையன் தகப்பனாரைத் திட்டிக் தீர்த்தார். அவரும் அந்த சுவாமியிடம் பலமுறை மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அந்தச்சிறுவன் நமது சுவாமியிடம் டம்ளர் நீரைக் கேட்டான். வெளிநாட்டு சுவாமி, “நாகராஜா கொடப்பா அவனிடம். உனக்கு சொல்வதை வைத்து இந்தப் பையன் சொல்வது உண்மையா என்று கண்டு கொள்கிறேன்” என்றார்.

எல்லாப் பற்றுக்களும் துறந்தும் அநேக வழிகாட்டிகள் மற்றவர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்வைப் பற்றியும் அறியப் பற்று வைப்பது என்பதும் விசித்திரம் தான்! மக்கள் வாழ்வில் ஏற்படும் அநேக மாற்றங்களினால், வழிகாட்டிகளின் வாழ்வு பாதிப்புக்குள்ளாகி, அவர்களின் தீட்சண்யப் பார்வை தமக்கு இன்னல் விளைவித்தவர்கள் மீது கட்டாயம் திருப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.

அவர்கள் அறியாமலேயே இவைகள் நடை பெறுகின்றன. இதனால் யாருக்கு என்ன நன்மைகள் என்பதைச் சிந்தித்துத் தெளிவு கொண்டால்,
வரலாற்றின் உண்மைகளும் புரிய வரும். அவ்வப்போது நமது சுவாமியின் அனுபவங்களை இடையிடையே நான் கூறுவதால் மெய்யன்பர்கள் குழப்பமுற வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

சிறுவனும் சுவாமி அருகே தனது சக்கர நாற்காலியில் வந்து சுவாமி கையில் இருக்கும் நீர் டம்ளரை சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே பெற்று, நன்றாக முகர்ந்து பார்த்தான். பிறகு அவன்,”இவர்தான் சுவாமி! இவர்தான் சுவாமி என்று கத்தினான். சுவாமியின் கையைப் பற்றிக் கொண்டு, “நான் குணம்பெற ஆசி கூறுங்கள்” என்றான். வெளிநாட்டுத் தமிழ் சுவாமிக்குக் கோபம் எல்லை மீறி பையனைச் சபித்து விட்டு, பெட்டி படுக்கையுடன் அறையைக் காலி செய்து கொண்டு வெளியேறச் சிறுவனின் தகப்பன் “சாமி சாமி” என்று கெஞ்சியபடியே பின்னால் ஓடியது பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது.

சுவாமியிடம் கூட விடை பெற்றுக் கொள்ளாமல் போனார். பிறகு அவரது ஆள் ஒருவரை பொள்ளாச்சியில் தங்கி நமது சுவாமிக்கு அவப்பெயரை உருவாக்கிவிட பெரும் பணம் தந்து விளையாடிய கதை தனிக்கதை. சிறுவன் வாக்கும் பலித்து அந்தத் துறவி கடுமையான வியாதியினால் மாண்டு போனார். இனி நாம் சுவாமியை விட்ட இடத்தில் இருந்து தொடர்வோம்.

பொள்ளாச்சி திரு. ராஜசேகரன் டாக்டரிடம் மருத்துவம் செய்து வந்த சுவாமி நல்ல குணம் பெற்றார். அவருக்கு இப்போது திருமண ஏற்பாடுகள் பலமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது. திருமணத்திற்குப் பிறகு சுவாமி மீண்டும் நமது டாக்டர் திரு.ராஜசேகரன் ஐயா அவர்களைச் சந்திக்கும் போது ஒரு அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகுதான் சுவாமியின் வாழ்வில் சற்குரு நாதரின் அருட் பாடங்களை அவரிடம் கேட்டு அறிந்து கொள்வது வரும்! நமது சுவாமிக்கு திருமணம் செய்வித்த நிகழ்வைப் பார்ப்போம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும் )

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button