ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
08•10•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(91) மனிதனே புனிதன் —
எதிர்பாராத கிராம ‘பந்த் ‘
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது தோழர் உசேன் அவர்களுக்கு மனக்கிலேசம் ஏற்பட்டதற்குக் காரணம், மோடி மஸ்தான் எருமை மாட்டை அழைத்துக் கொண்டு மாயமாகிப் பத்து நிமிடங்களாகியும் தென்படாததால், ‘எருமை மாட்டின் விலை என்ன தொகையோ? அது தனது தலைமீது விழத் தானே காரணமாகிப் போனேனே’ என்ற விசனமும் தான்! எருமையைப் பறி கொடுத்த கானானின் தாயார் பெருமாயி எதுவுமே நிகழாது மாதிரி, வாய் திறந்து பலமாகச் சிரித்து, “இவன் எங்கே மாயமாப்போனான்? கண்ணு முன்னால கொட்டக் கொட்ட முழிச்சிகிட்டு நிக்கறதப்பாரு!” எனக் கையை நீட்டிக் காட்டினார். பெருமாயி காட்டிய இடத்தில் மோடிமஸ்தான் இல்லை!
இப்போது மோடி மஸ்தான் குரல் மட்டும் எல்லோருக்குமே கேட்டது. “இந்தாம்மா பெருசு, உனது தலை மேல இருக்கற புல்லுக்கட்டக் கீழ போடு” என்று கரகரத்த குரலில் கட்டளை இட்டதும், பயந்து போன பெருமாயி அப்படியே செய்தார். இப்போது அவரின் கண்களில் இருந்தும் மஸ்த்தான் மறைந்து போனார்.
“ஐயோ என் எருமை போச்சே!” என குரல் எடுத்து அழுதார்கள். உடனே மோடிமஸ்த்தான் கண்ணுக்குத் தென்பட எல்லோரும் கரகோஷம் செய்தனர். பிறகு மஸ்தான் கூறினார், “இந்தம்மா வச்சிருந்த புல்லுக்கட்டுல சில மூலிகை வேர்கள் இருக்கு! அதால என் ஜாலம் அவர்களிடத்தில் நடக்கலே! புல்லுக்கட்ட கீழே போட்டாங்கோ ஜாலம் பலிதமாச்சு” என சந்தோஷப்பட்டார்.
இந்த சமயத்தில் மலைத் தேனீக்களின் இறைச்சல் பலமாகக் கேட்டது. தேனீக்கள் என்றால் சாதாரணக் தேனீக்கள் அல்ல! மலைகளில் வசிக்கின்ற கோதுமைத் தேனீக்கள்! ஒவ்வொன்றும் மிகப் பெரிய வண்டுகள் போன்றிருக்கும்! கும்பலாக வந்த தேனீக்கள், கிராமத்தின் உள்ளே பெட்டிக்கடை வியாபாரம் நடத்தி வந்த ‘வயிற்றுச்சின்னவன்’ என்று அழைக்கப்பட்டவரின் இரண்டாவது மகனைத் துரத்தியபடி பறந்து, அவனது மொட்டைக் தலையில் கொட்டியபடியே வந்தன. அவன் அலறியபடியே தான் தப்பிக்க ஜாலவித்தையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கும்பலுக்குள் புகுந்து கொண்டான். மோடி மஸ்தான் ஜனங்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டே, தலையில் இருந்த குல்லாயைக் கழற்றிக் தலையைக் குனிந்து நன்றி சொல்லியபடி இருந்தார். இனிப் பணம் வசூல் ஆக வேண்டிய நேரம்!
வயிற்றுச் சின்னவன் மகன் தேனீக்கள் கடியால் அவஸ்த்தைப்பட்டுக் கும்பலுக்குள் புகுந்து, தலைகுனிந்து வணங்கிய மஸ்தான் மீது விழுந்து விட்டான். மோடி மஸ்தான் கீழே விழுந்ததும் அவரின் தலையையும் தேனீக்கள் பதம் பார்த்தன. அவரும் மண்ணில் உருண்டு, புரண்டு கத்தினார்.
” யோவ் மஸ்தான் மாயமா மறஞ்சிடு” என்று சொல்லிச் சிரித்த நொண்டி உசேனையும் தேனீக்கள் விட்டபாடில்லை! அவரும் தேனீக்களால் தாக்கப்பட்டு நொண்டியபடியே ஓடினார். கும்பல் சிரிக்கும் போது வெளேர் என்று பல்கலைக் காட்டியவர்கள் அனைவரும் மலைத் தேனீக்களால் தாக்கப்பட்டு அலறினார்கள்.
நந்தவனப் புளியந்தோப்பில் எங்கிருந்தோ வந்த மலைத் தேனீக்கள் மிகப்பெரிய மரத்தின் கிழக்குப் பக்கப் பெருத்த கிளையின் மீது பிரமாண்டகூடு ஒன்றைக்கட்டி இருந்தன. அங்குதான் மரத்தின்கீழே கரம் வரைந்து கோலிக் குண்டு விளையாடுவர். விளையாட்டில் பணம் வைத்துச் சூதாடி அவ்விடத்தைச் சூதாட்ட அரங்கமாக்கிக் கொண்டனர். சூதாட்ட மோகத்தில் காலநேரம் போவது தெரியாமல் விளையாடி, கெட்ட பெயரினைச் சம்பாதித்துக் கொண்டவர்கள் அநேகம் பேர்! பள்ளிக்கூடம் போகாமல் குண்டு விளையாடும் நோக்கில், வயிற்றுச் சின்னவன் மகனும் அங்கிருந்தான். பசி வந்தவர்களுக்குப் பலகாரம், தேநீர் வாங்கிக் கொடுத்து வந்தவன், தன்னை விளையாட்டிலும் சேர்த்துக் கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தான். “போடா நீ சிறுபயல்” என்று அவர்கள் கூறிவிட்டதால் கடுப்பாகி, கைக்கு அடக்கமான ஒரு கல்லை எடுத்துக் குறிபார்த்துத் தேன்கூட்டின் மீது விட்டெறிந்தான். கல் விழுந்த உடனே அது வந்த பாதையில் பயணித்த கோபம் கொண்ட தேனீக்கள் வேண்டிய மட்டும் கொட்ட, விழுந்து ஓடியவன் அலறல் சப்தத்தால் தொடர்ந்து கொட்டு கொட்டென்று கொட்டியபடி அவனுடனேயே பறந்து பின் தொடர்ந்தன. பெரிய அளவில் கூடுகள் இருந்ததால், ஏராளமான தேனீக்கள் கிராமம் பூராவுமாகப் பறந்து பாகுபாடின்றிக் கொட்டித் தீர்ந்தன.
ஆழிஆற்றுக்குள் குதித்து விடு என்று யாரோ உரக்கக் கத்த, பாலத்துக்கு வடக்குப் பக்கமுள்ள டோபிகளுக்கு எனக் கட்டப்பட்ட, துவைக்கும் துணிகள் வைக்கும் மண்டபத்தின் வழியே அவன் ஓட, டோபிகள் அலறும் சத்தம் ஊருக்குள் கேட்டது. விபரம் தெரிந்த ஒருவர் சுவற்றில் தட்டிக் காயவைக்கப்பட்டிருந்த சாண எருவுகளைப் பெரிய பையில் போட்டு எடுத்துக் கொண்டு அவன் பின்னால் ஓடிச் சென்றார்.
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.