ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
19•08•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம் ,
பொள்ளாச்சி.
(46) மனிதனே புனிதன் —
எண்ணம் தோன்றுவது?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு எண்ணத்தை உருவாக்குவதற்கு,1. சப்தத்தைக் கேட்கின்ற சக்தியும், 2. ஓர் உருவத்தைப் பார்க்கின்ற சக்தியும், 3. அதன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சக்தியும் ஆகியவை ஒன்று சேர வேண்டும். உருவாகிய எண்ணத்தை உணர்ந்து கொள்வதற்குப் பெயர் சுயப்பிரக்ஞை (consciousness) ஆகும்.
நாம் உருவாக்கிய எண்ணத்தை ஒட்டிய பழைய எண்ணங்களை மறுபடியும் மீட்டுக் கொண்டு வருவதை ஞாபகசக்தி(memory)
எனப்படுகிறது.
நாம் எத்தகைய எண்ணங்களை உருவாக்கினாலும் அதனை மன இயக்கம், சித்தத்தின் இயக்கம், புத்தியின் இயக்கம், மற்றும் அகங்கார இயக்கங்களுடன் அவற்றை இணைத்துக் கொள்ளவும் முடியும்.
சக்தி பெற்றவர்கள் தங்களின் கைக்கட்டை விரலினால் பிறர் நெற்றிப் பொட்டில் வைத்து எண்ணங்களை உருவாக்கவோ அல்லது அழித்து விடவோ முடியும். நமது சுவாமிக்கு அவரது குருநாதர் இதனைச் செயல்படுத்தி இருக்கிறார். காரணம் கருதியே, எதிர்காலச் சிறப்பினை உத்தேசித்தே, சுவாமியின் மூளையில் எதிர்மறை எண்ணங்கள் உருவாக்கும் சக்தியைத் தூண்டி விட்டு விட்டார். அன்று தொட்டு
பத்து ஆண்டுகள் உடல்நலம் குன்றியவரானார். அன்று சுவாமிக்குக் கட்டுப்பாடு களுடன் கூடிய மருத்துவ சிகிச்சை வீட்டினர் செய்து இருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் முன்னைற்றம் பெற்றுள்ள மருத்துவ சிகிச்சையை மருத்துவர்கள் திறம்படக் கையாண்டாலும் கூட அக்காலக் கட்டுப்பாடுகள் இன்று இருப்பதாகத் தெரியவில்லை!
உள்ளத்தில் தூய்மை, உடல் தூய்மை, உணவுக் கட்டுப் பாடுகள் மற்றும் ஒழுக்க நடபடிக்கைகள் என்ற கண்காணிப்பில் உட்படுத்தினார்கள். சுவாமி தன்னை அர்ப்பணித்து விட்டு பிரார்த்தனை மட்டுமே செய்து வரலானார். அவருடன் இருந்து செயல்பட்ட அபூர்வ சக்திகள் அனைத்தும் செயல்படுத்தப்பட முடியாமல் முடங்கிக் கிடந்தன.
இதனை வாசிக்கும் மெய்யன்பர்கள் மனிதனிடம் செயற்படும் சக்திகளுக்கு நல்ல மரியாதையும், நம்பிக்கையும் ஏற்படுத்திக் கொண்டால் அதனை வெளிப்படுத்தி நல்ல நல்ல காரியங்களை உலகிற்குத் தர முடியும் என்பதை உணர்த்தவே கூறினேன். சுவாமி அவர்களிடம் ஒருமுறை எனது குழந்தைகள், சித்தர்கள் சொல்லி இருக்கும் பல பாடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சுவாமி அவர்களுக்கு பொறுமையாக பதில் புரியும்படி கூறினார். பிறகு “சித்தர்கள் எல்லாம் உலகத்தில் தங்கள் அனுபவங்களை எழுதி வைத்து விட்டுப் போனவைகள் அநேகம். அதையே அடிக்கடி எடுத்துக் கூறுவது உங்கள் ஞாபக சக்தியைக் காட்டுகிறது. பாராட்டுக்கள் ! சரி, உங்கள் தியான அனுபவங்களைப் பற்றி உலகினுக்கு என்ன தரப் போகின்றீர்கள்?” என்று கேட்டதுமே வாயடைத்துப் போனார்கள். அவர்களுக்கு சமாதானம் கூறிய சுவாமி, “நீங்கள் ஜெயித்து விடுவீர்கள். உங்கள் அனுபவங்களைத்தர நீங்கள் இப்போது கற்று வர வேண்டும். பிறகு அவற்றின் உண்மைகளை உணர்ந்து கொள்வீர்கள்” எனக் கூறியதும் அவர்கள் சந்தோஷம் அடைந்தார்கள்.
இப்போது நமது சுவாமியும் எதிர்மறைப் பாடங்களை சற்குரு நாதரின் உதவியினால் கற்றுக் கொண்டு அதில் இருந்து மீளவும் வழிவகைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவே தன்னை ஆட்படுத்திக் கொண்டார். மருத்துவர்கள் இவருக்கு வந்துள்ள நோயின் தன்மைகளை அறிந்து கொள்ள முடியாத புதிராகவே எண்ணினர். நாடிகள் நலத்துடன் உள்ளன; மலஜல உபாதைகளும் சரியாக நடை பெறுகிறது. ஆள் நன்றாக இருப்பதாகப் படுகிறது என்று கூறிவிட்டனர். வயிற்று வலியால் சுவாமி துடிக்கிறார்.
சுவாமியின் வயோதிக நணபர் சிங்கத் தேவர் சுவாமிக்கு சிலம்பம் விளையாட்டு கற்றுக் கொடுத்த குருவும் ஆவார். அவருக்கு சுப்பிரமணி, ஆறுமுகம் என்ற இரண்டு புதல்வர்கள். மூத்த வரை மணி என்று சுருக்கமாகக் கூப்பிடுவார்கள். அவர் நமது சுவாமியின் நிலையை ஆரம்பத்தில் இருந்து கண்டு பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். ஊரே சுவாமி என்று அழைக்கப்பட்டவர் கிடக்கும் நிலையைக்கண்டு, “இவருக்கு வயிற்றில் ஏதாவது மருந்தை உணவில் கலந்து கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார். “கேரளாவில் இதற்கு வைத்தியம் உண்டு. நான் அழைத்துச் சென்று குணப்படுத்தி வருகிறேன்” என்று சுவாமிகளின் தாயாரிடம் கூறினார்.
சுவாமி குடும்பம் நல்ல வசதியாக வாழ்ந்த காலத்தில் இவர்கள் எல்லோரும் உதவி பெற்றவர்கள். தகப்பனார் விவசாயம் செய்த போது எல்லாம் நன்றாக நடைபெற்றது. அவர் நிலக்கடலை வியாபாரம் என்று ஆரம்பித்த போதுதான் நல்ல நண்பர்கள் அமையவில்லை. வருமானம் வீட்டிற்கு வருவது நின்று போயிற்று. பெரிய பலசரக்குக் கடை சிறியதாக மாறிவிட்டிருந்தது. போதிய பொருட்கள் கொள்முதல் செய்யப் பணம் தேவை. சுவாமியின் பாட்டி பொன்னம்மாள் நாச்சியாரிடம் இலவச உதவிகள் பெற்ற செம்படவினர் நல்ல நிலையில் வசதியாக வட்டிக்குப் பணம் தந்து கொண்டிருந்தனர்.
பணம் பெறுவதற்கு சுவாமியின் தாயார் ரொம்பவே தயங்கினார். தனது தந்தை திரு.சண்முகம் ஐயா அவர்களிடம் இலவச பணஉதவி பெற்றவர்கள். இன்று நாம் இருக்கும் நிலையில் என்ன சொல்வார்களோ என்று தயங்கித் தன் மகனது வைத்திய செலவுக்கு ஆகுமே என எண்ணிப் தயங்கியபடியே போனார். வரவேற்பு என்னவோ பிரமாதம் தான்! ஆனால் மற்றவர்களைக் காட்டிலும் அதிக வட்டி கட்டவேண்டும் என்றனர். வீட்டுக்காரரை எண்ணி பெருமூச்சு விட்டபடியே பணம் பெற்று வந்து, மகனை கேரளா கொண்டு செல்ல மணி வசம் பணம் தந்து அனுப்பி வைத்தார்.
அக்காலத்தில் ஆணாதிக்கம் உச்சகட்டம். கணவனை எதிர்க்கவோ, தட்டிக் கேட்கவோ முடியாது. இன்று பெண்கள் முன்னேற்றம் போல் அன்றில்லை.பெண்ணுக்குபடிப்பு எதற்கு என்ற கேள்வி அன்றிருந்தது. சுவாமியின் தாயாரைப் போன்று எத்தனை குடும்பங்கள் துயறுற்றதோ, அந்த ஆண்டவனே அறிவார்.
சுவாமியின் தகப்பனார் குடும்பத்திற்கும் செய்த உதவிகளை விட, மற்றவர்களுக்குக்காக, அவர் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டவர்கள் அனைவரும், இன்றும் அவரால் வசதியாக வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்கள். பலபேருக்கு விவசாய பூமி களை இலவசமாக கொடுத்தவர். அவர் வாழ்க்கையில் கடைசி காலத்தில் உதவி சுவாமியைத் தவிர யாரும் இல்லை. எல்லாம் இறைவனது சித்தம் என்று கூறி விடலாம். ஆனால் குடும்பக் கடமைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் என்ன கதி ஏற்படும் என்பது சுவாமியின் தகப்பனாரே, அவர் குடும்பமே ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறது.
இனி சுவாமி அவர்கள் பெற்ற கேரள மருத்துவ அனுபவங்களைப் பார்க்கலாம்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.