எங்கும் எதிலும் நன்மையே!

205

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

09•10•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(92) மனிதனே புனிதன் —
எங்கும் எதிலும் நன்மையே !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனித மனதின் எண்ணம் தனக்குப் பயன்படுவது போன்றே, பிறருக்குப் பயன் படும்போது நன்றி பாராட்டப்படும் உன்னதமாகிறது.
தேனீக்களால் தாக்குண்ட சிறுவன் ஆழியாற்றினுள் குதித்து நீரினுள் மூழ்கியதும், அங்கேயே சுற்றி வந்த தேனீக்கள், சிறுவனின் தலை நீருக்கு வெளியே வந்ததும், மீண்டும் கொட்டியது. சாண எருவை அவனது தலைமீது வைத்து நீரினுள் மூழ்கிச் செய்ய, மிதக்கின்ற எருவை மொய்த்தபடி தேனீக்கள் ஆற்று நீரோட்டத்துடன் சென்று விட்டன. பலர் அதன்படியே தலை மீது சாண எருவை வைத்து நீரினுள் மூழ்கித் தப்பித்தனர். இதற்கு உதவிய ஒரு பெரியவர் மலைவாழ் மக்களைச் சேர்ந்தவர். அவரை எல்லோரும் பாராட்டினர்.

நமது சுவாமியும் சற்குருநாதரும் சந்திக்கும் அரசமரத்தடி மேடையிருக்கும் இடத்தில் குருநாதர் மட்டும் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும் பறந்து அவர்மீது அமர்ந்திருந்த மலைத்தேனீக்கள் எல்லாம், பிறகு பறந்து ஊரை விட்டே சென்று விட்டன! நொண்டி உசேன் வீட்டில் இருந்து பார்த்தால் அரசமரத்தின் கீழே அமர்ந்திருப்பார்கள் நன்றாகத் தெரிவர். சுவாமி இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு கொள்ளவோ, அதனைப் பற்றிய கருத்தோ சொல்லாதது உசேனுக்கு மட்டும் வருத்தத்தைத் தந்து விட்டது. “ஊரே குதியாட்டம் போட்டுக் கிடக்கு! இந்த சுவாமிக்கு மட்டும் மரத்தடிக் கிழவங்கிட்ட என்ன பேச்சு வேண்டிக் கிடக்குது? நம்ம வீட்டு வழியாகத்தானே போகவேணும்! வரட்டும் கேட்டுக் கொள்கிறேன் ” என இரண்டு நாட்களாகக் கருவிக் கொண்டிருந்தார்.

சுவாமி வீட்டருகே தேனீக்கள் வராததால் இதுபற்றித் தெரிய வர வாய்ப்பில்லை. உசேன் வீட்டருகே குடியிருந்த மலைவாழ் மக்கள் முடுகர்கள், உசேன் உடலில் எண்ணெய் தடவி, தேனீக்கள் கொட்டிய முட்களை நீக்கி விட்டனர். வயிற்றுச் சின்னவன் மகனை வேட்டைக்காரன்புதூர் ஆஸ்பத்திரியில் ஒருவாரம் தங்க வைத்துக் குணமாக்கிக் கூட்டி வந்தனர். நல்ல சிவப்பு நிறமுடைய பையனின் உடம்பு, தலை எல்லாம் கருநீல நிறமாக மாறி விட்டது.

அந்த வாரமே வயிற்றுச் சின்னவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. தலையில் முண்டாசைக் கட்டிக் கொண்டார்! வயிறு பெரியகுடம் போல் தெரிய, இடுப்பில்
கைலியைக் கட்டிக் கொண்டார்! பெரிய கம்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு வீட்டின் முற்றத்தில் முன்புற ஓடுகள் நான்கைந்தை உடைத்தபடி கிராம வலம் வரத்துவங்கினார். சுவாமி வீட்டின் பின்புற வாசல் வழியே உள்ளே நுழைந்து விட்ட வயிற்றுச் சின்னவன் தயவால், தின்னையின் ஓடுகள் அனைத்தும் உடைக்கப்பட்டன. நமது சுவாமியைக் கூப்பிட்டு, “நாகப்பா வந்து பாரப்பா! சுத்தமா ஓடுகள் பூராவுமா ஒடைச்சிட்டேன்” என்றபடி சிரித்துக் கொண்டிருந்தார்!

 

சுவாமி வீட்டிற்குப் பின்புறவீதியில் குடியிருந்த பெரிய கருப்பணன், சின்னக்கருப்பணன் அவர்களின் தாயார் ‘வலசம்மா’ என்பவர், “டேய் வயித்துச்சின்னவனே! இது என்னடா பெருங்கூத்து? பேசாமப் போகமாட்டே? “என்று வக்காலத்துப் பேசியபடியே வந்தார். பெரிய கம்பை இரண்டு கைகளால் தூக்கித் தலைமீது பிடித்தபடி,” வலசம்மாக்கிழவி இன்னையோட காலி” என்று கூறியபடி துரத்தத் துவங்கினார். பீமன் கதாயுதத்தைத் துக்கிக் கொண்டு ஓடுவது போல் அது இருந்தது!

வீட்டைச் சுற்றி ஓடிய அவர்களில் வயிற்றுச் சின்னவனின் கர்ணகடூரச் சப்தத்தின் முன்னால், வலசம்மாளின் “காப்பாத்துங்கப்பா” என்ற அபயக் குரல் கேட்கவே இல்லை! பொள்ளாச்சி அண்ணாமலை குடோனில் மளிகை சாமான்கள் ஏற்றப்பட்ட கேரளா மாட்டு வண்டிகள் மெயின் வீதியில் சென்று கொண்டிருந்தன. இவர்கள் இருவரும் சப்தமிட்டபடியே எதிரில் வருவதைப் பார்த்து, வண்டி ஓட்டிகள் வண்டிகளை அப்படியே நிறுத்திக் கொண்டார்கள். இடது கையால் வண்டிச் சக்கரத்தைப் பிடித்தபடி, வண்டியின் அடிப்புறப் பகுதியில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த வலசம்மாவை நோக்கிக் கம்பால் ஓங்கி ஒரே அடி!

கம்பு வலசம்மாவின் இடது மணிக்கட்டில் பலமாக விழ, மளுக்கென்ற சப்தத்துடன் அது ஒடிந்தது. வயிற்றுச் சின்னவன் மாட்டுச் சாணத்தின் மீது கால்களை வைத்து விட்டதால் கால்கள் வழுக்கி நீட்டியபடி மல்லாந்து சிமெண்ட் ரோட்டில் விழுந்து மண்டையில் அடிபட்டு, அப்படியே மயங்கிச் சாய்ந்தார். வலசம்மா மாட்டு வண்டிக்கு அடியில், வலது கையால் இடது கை மணிக்கட்டைப் பிடித்தபடி படுத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார். இருவருக்குமே பலத்த அடி. மருத்துவ மனைக்குத் கொண்டு போனார்கள்.

சிறிது நாட்களுக்கு முன்பு தான் வயிற்றுச் சின்னவன் தனக்குச் சொந்தமான விவசாயபூமிக்குப் போயிருந்தார். கருடன் ஒன்று பறந்து வந்து அவரருகே அமர்ந்தது.
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும்)

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button