ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
21•03•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(264) மனிதனே புனிதன் —
உலகம் நடைபெறவே எல்லாம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“துக்கம் என்பது மனிதனது உள்ளத்தில் உதித்த எண்ணமே அன்றி வேறில்லை. தெய்வ அம்சம் பொருந்திய இது, உடலையும் ஆன்மாவையும் இணைக்கும் உன்னதமான பொருள். அனைத்துமே இறைவனுடையது தான். உடல், உயிர், ஆன்மா, மனைவி, மக்கள் அனைத்துமே ஆண்டவன் இடத்திலிருந்து வந்த புனிதமான, மிகவும் நெருக்கமான உறவாகும். இந்தக் குடும்ப உறவுகள் வெறும் உடல் சம்பந்தப்பட்டது அல்ல! உயிரானது உயிருடன் கொண்ட பந்தமுடையது. ஆண்டவனிடத்தில் உற்பத்தியாகி வரும் தன்மை கொண்ட இவை அவருக்கே சொந்தமானது. உள்ளத்தில் உருவாகும் இன்பம், துன்பம் எல்லாம் உலகம் இயங்கவே நடை பெறுகின்றன. மனித அறிவின் வளர்ச்சியில் பலகலைகளை மனிதன் கற்றுத் தேர்ந்து மேலும் தனதறிவை வளமையாக்கிக் கொண்டான். நவகிரகங்களைக் கொண்டும், இருபத்திஏழு நட்சத்திர ஈர்ப்பில் காலத்தைக் கணிக்கும் முறையினில் வெற்றியும் பெற்றான்.” — ஸ்ரீ ஈஸ்வர நீதி
நமது சுவாமி அவர்களிடம், “அம்மா நான் சொல்வதைக் கேட்டுத் தாங்கள் கோபம் கொள்ளக்கூடாது. காலக் கணிப்பில் உங்களுக்கு சந்திர தோஷம் உள்ளது. அதனால் மன நிம்மதி இன்றித் தவிக்கின்றீர்கள். வினைகள் தீர்க்கும் பூதநாயகன் ஸ்ரீ விநாயகர் பகையாக உள்ளார். அதனால் தான் உங்களைப் பற்றி எண்ணாமல் மற்ற குடும்பங்களை அவச்சொல்லால் தூற்றுகின்றீர்கள். பிறரைக் கேலியும், கிண்டலும் செய்து அற்ப சந்தோஷத்தை அடைகின்றீர்கள். இந்த தோஷம் நீக்க மிக எளிமையான பரிகாரம் எனது சற்குரு நாதரால் அருளப்பட்டிருக்கிறது. செய்தால் சரியாகி விடும். தேவையானால் உங்களுக்குச் சொல்கிறேன். தவிர நாக தோஷம் நீங்கள் புகுந்த வீட்டில் உங்களது கணவருக்கு இருக்கிறது. இந்த தோஷம் ஆட்கொல்லி தோஷமாக மாறிவிட்டிருக்கிறது. கால சர்ப தோஷமாகிய இதற்கும் பரிகாரம் உண்டு. குலத்தின் தெய்வம் ஆகார வழிபாட்டில் மட்டுமே, உங்களுக்கு உதவக் காத்துக் கொண்டிருக்கிறது என்பது மாத்திரமே, சந்தோஷமான செய்தியாகும்” என்றார். அதற்கு அவர், “சுவாமி அப்புறமா கதை பேசிக் கொள்ளலாம். நானோ நகையைப் பறிகொடுத்து விட்டுத் தவித்துக் கொண்டிருக்கிறேன். அதைக் கண்டு பிடிக்க ஏதாவது வழி சொல்லுங்கள் ” என்று படபடத்தார்.
நமது சுவாமி அவரது மகனிடம்,
“சிறிய மண் சட்டியின் அடிபாகத்தில் சிறிய துவாரமிட்டு உள் பக்கத்தில் உலர்ந்த சருகுகள் நிறையப் போட்டு எடுத்து வரச் சொன்னார். அதன்படி செய்தார்கள். வீட்டினுள் சுவற்றில் ஏதாவது துவாரம் உள்ளதா என்று பார்த்து வரச் சொன்னார். அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என்றே பதில் கூறினார்கள். நிதானமாகப் பார்த்து வாருங்கள் என்று கூறியதும், மண் பாவனைகள் அடுக்கி வைத்துள்ள இடத்தின் பின்புறமாகச் சிறிய துவாரம் ஒன்றை அந்த அம்மா கண்டு பிடித்தார். சுவாமி மண்சட்டியில் உள்ள சருகில் நெருப்பு வைத்து அந்தத் துவாரத்தின் வழியே புகையை ஊதிவிடச் சொன்னார். அப்படியே செய்திட வீட்டுச் சுவற்றில் பல இடங்களில் உள்ள துவாரத்தின் வழியே, புகை வெளிப்பட ஆரம்பித்தது. அந்த அம்மாள் உட்கார்ந்து இருந்த இடத்தின் எதிர்ப்பும் சுவற்றில் இருந்து புகை குபுகுபுவென வெளிப்பட்டது. ” இதென்ன வீட்டுச் சுவரில் பல இடங்களில் துவாரம் இருக்கும் போலத் தெரிகிறதே ” என்று கூறிய அந்த அம்மா அவர்கள் பயந்து போய் “ஐயோ” என அலறிக் கொண்டே தரையில் சாய்ந்து உருண்டு விட்டார்கள். அவர் அருகே எதிர்புறம் சுவற்றில் புகை வந்த துவாரத்தைப் பிளந்து கொண்டு, திக்குமுக்காடிப் போன எலி ஒன்று வாயில் நகையைப் பற்றி இழுத்துக் கொண்டு, வெளிப்பட்டுக் குதிக்கும் இடத்தில் அந்த அம்மாள் அமர்ந்து இருந்ததால், அவர் மேலேயே சாடிக்குதித்து விட்டது.
மடியில் நகை விழுந்து விட்டது. பயத்தில் சாய்ந்து விட்ட அவர்கள் மீது பெரிய எலி குதித்து ஓடும் வேகத்தில் கையில், நகத்தால் பிராண்டி விட்டுத்தான் அதன் போக்கில் சென்றது. பயத்தில் உருண்ட அந்த அம்மாள் முகத்தில் நகையைப் பார்த்த சந்தோஷத்தில் மெளனமாகிப் போனார். பிறகு எழுந்து நின்று சந்தோஷ நடனமே ஆடி விட்டார். அவரது மூத்த மகனுக்கு எந்த ஜெபத்தில் இவர் கண்டு பிடித்தார் என்று அறிய ஆவல் மிகுந்து, ஓராண்டு காலமாக அடிக்கடி சந்தித்து, பகலில் சூரியன் உச்சிக்கு வரும்போது கண்களால் சூரியனைப் பார்த்து சக்தி பெறும் முறையைக் கற்றுக் கொண்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.