ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
22•11•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(145) மனிதனே புனிதன் —
உபதேச சொற்பொழிவு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முதல் நாள் புத்தகம் படித்து மாலைநேர சொற்பொழிவு துவங்கியது. முதன் முதலாக அங்கு கலந்து கொண்டு நமது சுவாமிக்கு அவர்களில் தவத்திரு. வேணு கோபால சுவாமியின் படத்தைத் திரு.Dr.ராஜசேகரன் அவர்கள் வீட்டில் அவரின் தாயார் தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் அவர்கள் தியானம் நேரத்தில் எடுத்து, பிரார்த்தனை செய்யும் போது, சுவாமி அவர்கள் பார்த்திருப்பதால் நன்கு தெரிய வந்தது. மற்றவர்கள் யாரும் அறிமுகம் இல்லாததால் தெரியவில்லை.
மாலை நேரக் கூட்டத்தில் தவத்திரு.வேணு கோபால சுவாமி தனது உபதேசத்தில் அடிக்கடி “பிரம்மம், பிரம்மம்” என்று குறிப்பிட்டுப் பேசியதால், நமது நாகராஜ் சுவாமிக்கு சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரர், “பிரம்மம் என்றால் என்ன? என்று கேட்டால், உன்னை அடையாளம் கண்டு கொள்வார்” என்று கூறியிருந்ததது ஞாபகத்தில் வரவே, அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நேக்கிக் காத்திருந்தார்
. சில்க் ஜிப்பா அணிந்தவர் நல்ல சிகப்பு நிறமாக கம்பீரமாக அமர்ந்து தலைமை தாங்கினார். அவர்தான் சத்தியத்தின் சக்தி நிலை என்ற புத்தகத்தை வாசித்தவர். அவர் யார்? என்று திரு. சண்முகசுந்தரம் அவர்களை நமது சுவாமி விசாரித்தார். ” அவர் தான் இந்தச் சங்கத்தின் தலைவர். SSM குரூப் மற்றும் டேன் இந்தியா கம்பெனியின் நிர்வாகி, என்றும் கூறினார். மற்றொருவரை அவரது மருமகன் திரு.R.பால சுப்பிரமணியம் என்றும், இன்னும் ஒருவரை வெள்ளக் கோயில் டாக்டர் திரு.R.கிருஷ்ணன் எனக் கூறினார். மேற்கொண்டு விபரங்கள் அப்போது நமது சுவாமிக்கும் தெரியாது. தலைவர் உரைக்குப் பிறகு தவத்திரு வேணுகோபால சுவாமி சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் நிறை வுக்குப் பிறகு ஞானக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப்படும் என்று அறிவித்தார்கள்.
பலர் தியானம் செய்யும் போது கிடைத்த காட்சிகளுக்கு விளக்கம் கேட்டார்கள். அவைகளுக்கு சில விளக்கங்கள் வெள்ளக்கோவில் டாக்டர் திரு. R.கிருஷ்ணன் கூறினார். மேல் நோக்கிய சுவாசம் பற்றியும் பேசிக் கொண்டார்கள். நமது சுவாமி எழுந்து நின்றார். ஆவலுடன் சங்ககுரு பார்த்தார். “பிரம்மம் என்றால் என்ன?” என்ற சற்குருநாதரின் கேள்வியைக் கேட்டார். உடனே அவருக்குக் கோபம் வந்து விட்டது. “உட்கார், நீ சின்னப் பையன். உனக்கு ஒன்றும் தெரியாது. பிரம்மத்தைப் பற்றி அறிய இப்படி முயற்சிக்கலாமா? உட்கார்” என்றார் கோபம் தீராமலே! எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டார்கள். இன்னும் சிலர், “இவனுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். எதுக்கு? இந்த வேண்டாத கேள்விகள்!” என்று பரிகசித்தார்கள். கேள்வி கேட்டாகி விட்டது. அதற்குப் பதிலை எதிர்பார்த்துக் தலையை வெளியே காட்டாமல் கூட்டத்தில் குனிந்து உட்கார்ந்து கொண்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.