உபதேசம் கூறுதல்!

258

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

04•09•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(57) மனிதனே புனிதன் —
உபதேசம் கூறுதல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவத்திரு நாகராஜன் சுவாமி அவர்கள் தவத்திருமதி மீனாம்பாள் நாச்சியார் அவர்களுக்குக் கூறிய அறிவுரைகள் ஏற்கனவே பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் ஒருமுறை சொல்லுவதில் எனக்கும் ஆனந்த அனுபவமே! இது “இறை பக்தி” என்ற தலைப்பில் வெளியானது.

“நம்மைப் பற்றி மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்குக் காரணம் உலகத்தின் மீது நமக்குள்ள பற்றும், ஆசையுமாகும். ஆனால் நம்மைப் பற்றி இறையருள் நினைக்கும்படி செய்வதே அவனருள் பெறும் செயலாகும். இதனையே ஆன்றோர்கள் தன்னை அறியும் வழி என்றும் கூறினார்கள்.”

“நம்முடைய நல்ல செயல்களினாலும், சிந்தனைகளினாலும் நமது உள்ளம் முதலில் பக்குவம் அடைய வேண்டும். பக்குவப் பட்ட உள்ளத்தில் இறைவனைப் பற்றிக் கொள்ளுதலே சிறந்த பக்தி என்பது ஞானியர் வாக்கு! இறைவனது கருணை உள்ளத்தில் நாம் என்றும் நிலையாக இருப்போம். அதனால் நமக்கும் நன்மைகள் கிடைப்பதுடன் உலகத்திற்கும் அது பயனாகும்.”

“நான் என்றும் என்னுடையது என்றும் நாம் நினைத்துக் கொண்டும், அதனைப் பிறரிடம் சொல்லிக் கொண்டு திரிவதாலும், அது நமது மனதில் அகங்கார குணத்தை வளர்த்து விடும். நம்மிடம் உள்ள அனைத்தும் சர்வேஸ்வரனாகிய ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியின் உடையது என்று எண்ணுவதால், எண்ணியதை நினைவினில் இருத்தி செயல் படுவதால் மட்டுமே நம்முடைய பேராசை குணங்கள் நம்மை விட்டு நீங்கிவிடும்.”

“அதனால் நமக்குத தானதரும சிந்தனைகள் மேலோங்கி, நமது உள்ளத்தின் அன்பு குணம் வெளிப்பட்டு அது நம்மை உயர்த்தும்! வாழும் வாழ்க்கையும் சிறப்படையும்! மற்றவர்களுக்கு உபகாரமாக இருத்தலே, இறையருளைப் பெற்றவர்களின் கடமையாகும். உதவி மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல நல்ல ஆலோசனைகளைக் கூட அப்படித்தான் கேட்டு நம்மை(நமதறிவு) வளர்ச்சி பெறச் செய்து கொள்ள வேண்டும்.”

இப்போதேு சுவாமி அம்மா (மீனாம்பாள் நாச்சியார்) சுவாமியிடம்,” துக்கப்படுபவர்கள் என்ன செய்யவேண்டும்?”என்று கேட்டார்.

சுவாமி, “இறை பக்தியின் பால பாடமே முதலில் தனக்குத்தானே கேடுகள் செய்து கொள்வது கூடாது என்பதுதான். துக்கப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். அவர்களால் எக்காலத்திலும் இறைவன் அருளைப்பெற முடிந்திடாது. முதலில் தன்னை நேசிக்கப் பழக வேண்டும். அதனால் நமக்கு நம்மீது ஒரு மரியாதையையும், தகுதியும் ஏற்படும். அப்படிப் பட்ட உள்ளம் உடையவர்களால் தான் உலகத்தையும், இறைவனையும் நேசிக்க முடியும்.”

உலகத்தை நேசிப்பவன் தான் ‘இறைபக்தி’ என்னும் ‘பயிர்த் தொழில்’ செய்யத் தகுதியுள்ள விவசாயி என்கின்றனர். ‘இறை நம்பிக்கை’ உடையவனால்தான் மக்களின் மனதில் ‘நல்ல பண்பையும்’, ‘ஆற்றல் சக்தியையும்’ விளைவிக்க முடியும். உலக மக்களை நேசிப்பதன் மூலமே இறைவனை அறிந்து கொள்ள முடியும்” என்றார்.

சுவாமியம்மா,” இறைசக்தியைப் பெற வேறுவழிகள் இருக்கிறதா?” என்று சுவாமியிடம் கேட்டார்கள்.
அதற்கு சுவாமி, ” இறைவன் நம்மைக் கைவிடாது காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை கொண்டு செயற்படும் போது தான், இறைவனின் மகிமை மனிதனிடத்தில் வெளிப்படுகிறது. இறைவன் அருள் பெற முடிவதோடு மனிதனின் நிலையும் அதனால உயர்வடைகிறது. அப்படிப்பட்ட உள்ளத்தில் இறையருளின் மெய்ப்பொருள் உண்மைகள் (சத்தியம் – வாய்மை); நேர்மையான நடத்தைகள் (தர்மம் – ஒழுக்கம்); தன்னைத்தானே கேடுறுத்தாமல் உலகத்தவர் மேல் செலுத்தும் அன்பு (நியாயம் – கடமைகள்) என்ற வழிகளில் ‘சேவை செய்தல்’ ஆகியவைகளில் நிச்சயமாக இறையருளை அடைய முடியும்” என்று கூறித்தனது மனைவியின் முகத்தைப் பார்த்து அன்புடன் சிரித்தார்.

சுவாமியம்மா,” இறையருளில் மனம் இலயமாவது எவ்வாறு? சற்று விளக்கமாகக் கூற வேண்டுகிறேன்” என்றார்.
சுவாமி அதற்கு, “இன்னும் புரியும்படிக் கூறுவதென்றால் முதலில் சொன்னதைப்போல, எவனொருவன் தனக்குத்தானே நிந்தனைகள் செய்து கொள்கிறானோ அவனே இறைவனை நிந்திப்பவன் ஆகின்றான். இறைவனை உள்ளத்தில் வைத்துப் பூஜிப்பவன் தனது மனநிலைக்கொப்ப, 1.தலைவனாகவும்,
2.தாயாகவும், 3.தந்தையாகவும், 4.மாறாகவும், 5.நண்பனாகவும் பாவிக்கின்றனர்.”

“அந்த அனுபவத்தில் ‘மனோலயம்’ ஏற்படுவதும் உண்மையே. அதனால் இறைவன் மீது நமக்கு ஓர் உரிமையும், பற்றும், பிடிப்பும் ஏற்படும் விடும். அதனால் ‘சரணாகதி’ தனித்துவம் உண்டாகிறது. தனது மெய்யறிவினால் தன்னைப் பக்குவப் படுத்திக்கொண்டு, இன்னும் சிறந்த முறையில் உலக மக்களின் நேசத்தையும் பெற்றுவிடுகின்றனர். சகல செளபாக்கியங்களுடன் வாழ இறைவன் மேல் கொண்ட பக்தி உதவுகிறது” எனக் கூறி மெளனமாக வீற்றிருந்தார்.

காத்திருந்து சுவாமியம்மா மற்றும் ஒரு கேள்வி கேட்டார்கள்,” எந்தெந்த வகைகளில் இறையருள் உதவிபுரியும்? கூறுங்கள்” என்றார்.(இன்னும் வரும்)

-ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button