ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
28•07•2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(25) மனிதனே புனிதன் —
உதவிக்கு வந்த மாரியம்மன்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காலத்தின் போக்கில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றது. அதனை ஏற்றுக் கொள்ளவும் நாம் பழகிக் கொண்டோம்.
நமது சுவாமி அவர்களின் தகப்பனார் ஹோட்டல் தொழிலை விட்டு விட்டு மளிகைகடை வைத்து சிறப்பாக நடத்தி வந்தார். விவசாயத் தொழிலில் அதிகமாக ஈடுபாடு உள்ளவர்.அவருக்கு எல்லாம் கடவுளின் அருளால் நன்றாக வாழ்வு நடை பெற்றது.
சுவாமியின் தனித் தன்மைகளை
அவரால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.
கிராமத்தில் துன்பப்படும் வயோதிகர்களுக்கு சுவாமியின் மூத்த சகோதரி வீட்டில் இருந்து பணத்தை எடுத்துச் சென்று உதவிகள் செய்து வருவது வழக்கம்.
வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு வயோதிகப் பாட்டிக்குப் பணம் எடுத்துக் கொண்டு போகும் போது, தகப்பனார் வந்து விட்டார். சுவாமி பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம். தெரியாமல் எடுத்த பணமாகையால் உடனே சுவாமியிடம் தந்து விட்டுப் பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று ஓடிச்சென்று விட்டார்.
தந்தை பணம் எடுக்கப் பார்த்தபோது அது அங்கே காணப்படவில்லை!? விஷயம் சுவாமிக்குத் தெரியாது. நமது சுவாமியின் கையில் இருந்த பணத்தைப் பார்த்து விட்டு, இத்தனை நாட்களாகப் பணம் காணாமல் போவது இவரால்தான் என்ற முடிவுக்கே வந்து விட்டார்.
தகப்பனார் தரையில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார். அவர் துயரத்தை இதுவரையிலும் பார்த்து அறியாத சுவாமியும் ஆச்சரியமும் வேதனையும் அடைந்தார். தனது தங்கைக்கு அவப்பெயர் வந்து விடக்கூடாது என்று தானே பழியைச் சுமந்து கொண்டார். தங்கையும் அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். காப்பாற்றியதற்கு நன்றியைக் கூறினார். அன்றைய தினம் முதல் தங்கை மனம் திருந்தினார்.
இந்த சம்பவம் தந்தைக்கு சுவாமி மீது பிரியம் அற்றவராகச் செய்து விட்டது. இந்த மனநிலை வெகு காலம் நீடித்தது.
சுவாமி மெளனம் காத்தது எதற்காக என்று கேட்டால், “பதில் கூறினாலும் தன்னை எதிர்த்துப் பேசுவதாகக் கோபம் கொள்வார். மெளனம் தான் எனக்குப் பிடித்தது. அது காலத்தில் உண்மையை உணர்த்தும்!” என்பார். இந்த நிகழ்வு சுவாமியிடம் சகோதரிகளுக்கு பெரும் மதிப்பும் மரியாதையையும் உண்டு பண்ணியது.
சுவாமி அவர்கள் சபரிமலை யாத்திரை செல்லும் போதுதான் தகப்பனாரின் பிணக்கும் தீர்ந்து அமைதி கிடைத்தது. காரணம் சுவாமி கடுமையான விரதம் பூண்டு இருந்து வந்ததுதான். தகப்பனார் எல்லா வகையிலும் விரதம் இருக்க உதவினார். பாடல்கள் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் ஒருவரை நியமித்தார்.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு தியானம் இருப்பது சுவாமிக்கு ஆனந்தம்தான்.
விரதகாலத்தில் ஒருநாள் அதிகாலை எழுந்தவருக்கு எதுவுமே தெரியவில்லை. காரணம் இரண்டு கண் ரப்பைகளும் மூடிப்போய் வீங்கி இருந்தது. உதவிக்கு யாராவது உடன் இருக்க வேண்டிய நிலைமை.
சுவாமியின் கூடவே இருந்த ஐயப்ப சுவாமிகள் அனைவருக்கும் கவலை மிகவும் அதிகமானது. மருத்துவம் பார்த்து மருந்து போட்டாலும் வலி அதிகப்பட்டதே தவிர குறைய வில்லை.
திரு. நாகப்பநாயுடு, திரு.சிங்கத்தேவர், திரு.பேச்சிமுத்து மூவரும் தகப்பனார் வயதுள்ள சுவாமிகள். உடனிருந்து கவனித்துக் கொண்டனர். பேச்சிமுத்து சுவாமி வீட்டில் குழந்தைகள் தனியே இருக்கிறார்கள், காலையில் வருகிறேன் என்று சொல்லி விட்டு புறப்பட்டுப் போனார்.
நடுஜாமத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நாகப்பநாயுடு எழுந்து கதவின் அருகில் சென்று
“யார் கதவைத் தட்டுவது?” என்று கேட்க,”நான் மாரியம்மாள்! பேச்சிமுத்து சுவாமியின் மகள்!” என்ற பதில் வந்தது. “உங்கப்பன் இந்த நடுஜாமத்தில் தானா உன்னை அனுப்பனும்? என்ன சமாச்சாரம்?” என்று கேட்டார்.
“நாகு சுவாமியை நாளைக் காலையில் சூலக்கல் மாரியம்மன் கோயிலுக்குச் கூட்டீட்டுப் போகச் சொன்னாரு! அதுதான் சொல்ல வந்தேன்”
என்றது குழந்தை!
“இரு கதவைத் திறக்கிறேன்” என்று கூறியபடியே கதவைத் திறந்தவருக்கு அதிர்ச்சி!
வெளியில் யாருமில்லை! அப்ப இவ்வளவு நேரமாப் பேசியது யாரு? குழந்தை சொல்லி விட்டு ஓடிப் போயிருக்குமோ? என்ற சந்தேகம் மனதில் எழ, சிங்கத் தேவரை உடன் அழைத்துக் கொண்டு டார்ச்லைட் பிடித்தபடி பேச்சிமுத்து வீட்டிற்குப் போனார்கள்.
கம்பளி போர்த்திக் தூங்கியவர் முகத்தில் டார்ச்லைட் பிடிக்க எழுந்தவரும்,” இந்த நேரத்தில் எதற்கப்பா வந்தீர்கள்?” என்று கேட்டவரிடம் விஷயத்தை கூறினார்கள். அவருக்கும் ஆச்சரியம்! குழந்தை தாயிடம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன் .
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.