ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
11•01•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(195) மனிதனே புனிதன் —
உக்கிரம் வாய்ந்த உதிரகாளி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்களின் தந்தையைப் பெற்ற அப்பத்தா திருமதி.நாச்சம்மாள் அவர்கள் அடிக்கடி உதிரகாளியம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு வந்து கதைகதையாக அந்த அம்மனைப் பற்றிக் கூறுவார்கள்.
நமது நாகராஜன் சுவாமி அவர்களுக்கு வனத்திற்குச் சென்று வருவது மிகவும் பிரியமான ஒன்று. காரணம் தவம் செய்திட ஏகாந்தமான இடமாக வேறு இருக்கும். ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர் வழியாக செம்மணாம்பதி என்ற இடத்திற்குப் பேருந்து வசதி உண்டு. வனத்துறை சோதனை சாவடியுடன் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விடும். பிறகு கால்நடையாக நடந்து தான் மலையின் அடிவாரம் வரை செல்ல வேண்டும். தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தின் வழியாகச் செல்ல அனுமதி பெற வேண்டும்.
அந்தத் தோட்டத்தின் கடைசியில் உள்ளது காட்டாற்று ஓடை. அதன் கரையில் ஓரிடத்தில் ஒரு பெரிய வேலன் மரத்தினடியில் இருந்த, சிறிய மேடையின் மீது வைக்கப்பட்டிருந்த, சிறிய கல் ஒன்று அம்மனாக, வனவாசிகள் எனப்படும் வில்வேடர்களால் வழிபட்டு வந்த ருத்திர தேவதைதான் அக்காளியம்மன். வேட்டைக்குச் சென்று வெற்றி அடைந்தால், மிருகங்களின் ரத்தத்தை அம்மனின் மீது பூசி வழிபடுவது வேடர்களின் வழக்கம். உதிரத்தைப் பூசுவதால் காளியின் ரத்ததாகமும் தணியும், வேட்டையும் பலியாகும் என்ற வேடர்களின் நம்பிக்கையால், நாளடைவில் உதிரகாளியம்மன் பேரைத் சொல்லியே மற்றவர்களைப் பயமுறுத்தும் செயலையும் மக்கள் செய்து வந்தார்கள்.
நமது சுவாமியை பயமுறுத்த அவர்களின் அப்பத்தா உதிரகாளியம்மன் பேரை உபயோகித்து வந்தார். சுவாமி அதைக் கேட்டு சிரித்தால் மிகவும் கோபப்படுவார். “உதிர காளியம்மனிடம் பிராது செய்தால் மாறுகால், மாறு கை வாங்கி விடுவாள் ஜாக்கிரதை” என்று சப்தமாகக் கூறினார். அது அவர்கள் பாணி. “உலகினுக்கே தாயாக விளங்குபவள், இத்தனை கொடூரமாக நடந்துகொள்வாளா? நம்மையெல்லாம் காப்பாற்றும் சக்தி அல்லவா?” என்று சுவாமி சொன்னதும் அருகில் நின்று கொண்டிருந்த கேரளா கோவிந்து அண்ணன் அதனை ஆமோதிக்க திருமதி. நாச்சம்மாள் அப்பத்தா, “போங்கடா, அவளப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டுவிட்டு அவர் தனது காரியத்தைச் பார்கப் போனார்.
திரு.கோவிந்து என்பவர் கேரளாக்காரர். திரு.நடராஜா அண்ணன் அவர்களுக்குச் சமவயது உடையவர். திரு.நடராஜா அண்ணன் எப்படி தெய்வீக காளியம்மனால் ஆட்கொள்ளப்பட்டாரோ அதைப் போன்று திரு.கோவிந்து அண்ணன், தீயசக்திகளாகிய யக்ஷனால் பீடிக்கப்படப் போகின்றவர். அதனைப் பிறகு கூறுகிறேன். நமது நாகராஜன் சுவாமி அவர்கள் திரு.சிங்கத்தேவர் அவர்களின் மூத்த மகன் திரு.மணி என்பவருடன் செம்மணாம்பதி புறப்பட்டுப் போனார். மதியான்னம் தான் அங்கு உச்சிச்கால பூஜை நடை பெறும். திரு.மணி அவர்கள் சாப்பிடப் பழங்களாவது கொண்டு போகலாம் என்று கைப்பையில் எடுத்துக் கொண்டார். கோயிலில் ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.