ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்.
10•07•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம், பொள்ளாச்சி.
(7) மனிதனே புனிதன் — ஈஸ்வர குருநாதன் வம்சம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கர்நாடக தேசம் ஈஸ்வர மங்கலத்தில் வாழ்ந்து வந்த, ஈஸ்வரனையே தங்கள் தலைவராகவும், குருவாகவும் கொண்டு சிவத்தொண்டு புரிவதையை வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு, புனித தெய்வீக வாழ்வில் ஈடுபட்ட குடும்பம் ஒன்று வறுமை தாளாமல் புலம் பெயர்ந்து மைசூர் நகரம் வந்து சேர்ந்தது.
அக்குடும்பத்து ஆண் குழந்தைகள் உரிய பருவத்தில் லிங்கம் ஒன்றை தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள். காலை மாலை இரவு பூஜை செய்தபிறகுதான் உணவு உட்கொள்வர்.
ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்த காலம் அது. மைசூருக்கு வெளியே பசுக்களை மேய்த்துப் பரிபாலனம் செய்து தெய்வமாக வழிபட்டு வந்தனர்.
ஈஸ்வர குருநாதன் வம்சத்தினர் மைசூர் வந்ததற்குக் காரணம் ஒன்றும் இருந்தது.அவர்களின் குல தெய்வம் நஞ்சன்கூடு நஞ்சுண்ட ஈஸ்வரர். ஈஸ்வர மங்கலத்தில் இருந்து வந்து வழிபட்டு செல்வது என்பதை நினைத்துப் பார்க்கவே இயலாது.
மைசூரில் இருந்து விவசாயமாக ராகி பயிர் செய்வதும், பசுக்களை மேய்த்துப் பால் தயிர் விநியோகம் செய்து பிழைப்பது உத்தமம் என்று எண்ணினர்.
மற்றும் குலதெய்வம் இருக்கும் நஞ்சன்கூடு சென்று வரவும் வசதி. காட்டு வழியில் பயணம் மிகவும் கடினம். மிருகங்கள் பயம் வேறு. பக்தர்கள் கூட்டமாகக் கூடி மாட்டு வண்டிகளிலும், நடந்தும் மல்லகஜட்டிகள் என்ற வீரர்களைக் துணையாகக் கொண்டும்தான் யாத்திரீகர்கள் சென்று வருவர்.
அவர்கள் குடும்பம் பல தலைமுறைகள் பல்கிப் பெருகியதில், நஞ்சன்கூடு வந்து அதில் ஒரு குடும்பம் வசித்தது.பிறகு சாம்ராஜ் நகரில் தங்கி வாழ்ந்து பன்னாரி மாரியம்மன் குடிகொண்ட சத்தியமங்கலம் வந்து பரம்பரை தொழில் செய்து வாழ்ந்தனர்.
ஆண்களும், பெண்களும் அந்தப் பரம்பரையில் வீரம் மிக்கவர்களாக எங்கும் தைரியத்துடன் வாழுபவர்களாகவும் விளங்கினார்.
பல காரணங்களால் அங்கும் இருந்து புறப்பட்டு கடையில் அந்த வம்சத்தின் கிளை ஒன்று
அமராவதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாராபுரம் வந்து வசித்து ஜவுளி சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டு வளமாக வாழ்ந்தனர்.
நஞ்சுண்ட ஈஸ்வரரை குலதெய்வமாகக் கொண்டதால் அக்குடும்பத்து ஆண் குழந்தைகளின் பெயர்கள் நஞ்சய்யா, ஈஸ்வரன், நாகப்பா, நாகய்யன், நாகராஜூ என்றும், பெண்கள் நாச்சம்மா, நஞ்சம்மா, நஞ்சுண்டேஸ்வரி, ஈஸ்வரி என்றே இருக்கும்.
நமது சுவாமி நாகராஜ் அவர்கள் அப்பாவைப் பெற்றவர், ஈஸ்வர குருநாதர் வம்சத்தைச் சேர்ந்த நாச்சம்மாள் பாட்டி ஆவார். ஈஸ்வர மஹா ஜோதி ஆண்டவர் இயக்கி நடத்தும் காரண காரியங்களை முழுமையாக அறிந்தவர்தாம் யார் இருக்கின்றார்கள். பிரமிப்பாக, மலைப்பாகத்தான் இருக்கிறது. உண்மையும் அதுதான். எல்லாம் ஈஸ்வரர் சித்தம்.
சுவாமி நாகராஜ் அவர்கள் அப்பா வகைப் பாட்டி வீரப் பெண்மணி. தைரியமுடன் இயற்கையாகவே அந்த தேசத்துப் பெண்களுக்கே உரிய அழகும் மிக்கவர்கள். வீர குணத்தை ஊட்டியே வளர்த்தவர்.
நமது சுவாமி நாகராஜ் அவர்களுக்கு அம்மவைப் பெற்ற பாட்டியிடம் தான் வாஞ்சை அதிகம். காரணம் சுவாமியின் இளம் வயதிலேயே இதிகாசக் கதைகள், உலக நடப்புகள், சித்தர்களைப் பற்றியும் கதைகளாகவே கூறிப் பக்குவம் படுத்தியவர் பாட்டி பொன்னம்மாள் அவர்கள்.
தனக்கு சூக்குமத்தில் தோன்றும் இறைசக்தி பெற்றவர்கள் பற்றியும், கண் முன்னால் காணும் தெய்வங்கள் பற்றியும் அடிக்கடி எடுத்துக் கூறியுள்ளார்.
ஞானத்தின் ஆர்வத்தினை ஊற்றுக் கண்ணாய் இருந்து தவம் செய்திடவும் ஊக்கம் தந்தவர்.
சுவாமிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர வளர இவரின் ஞானத் தேடல் வேட்கையும் ஆரம்பமாகி விட்டது. வீட்டில் தனிமையில் தியானம் செய்வது, ஆழியாற்றின் கரைதனில் அமர்ந்து இயற்கையுடன் ஒன்றி தியானத்திலேயே இருந்து கொண்டிருப்பது என்று செயல்படலானார்.
பால பருவத்து அனுபவங்கள்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
என்னதான் தியானம் செய்வது என்று இருந்தாலும் சுவாமியின் குழந்தைப் பருவத்து இளமைப் சிறார்களின் துடிப்பு மிக்க சேட்டைகளும், குறும்புத் தனங்களும் வந்து தலைகாட்டும். இவரின் விளையாட்டுத் தனங்கள் வெளிப்படும் போதெல்லாம் தாயாரின் கண்டிப்புகளும் அவ்வப்போது இருந்து வந்துள்ளது.
தாயார் கடுமையாகக் கண்டிப்பதோடு, சிலசமயங்களில் பிரம்பினாலும், தனது கையாலும் அடிக்க வரும் போது போக்குக் காட்டி அவரை அலைக்கழிப்பதும், தாயாரின் அடிக்க முடியாத நிலையில் தானே சென்று அவரின் தண்டனைகளைப் பெற்றுக் கொள்வதும் நடந்தது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
நன்றி! வணக்கம்!
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும்)
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.