இளம் துறவியின் வருகை.

245

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

26•06•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(361) மனிதனே புனிதன் —
இளம் துறவியின் வருகை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கல்வியை மனிதர்கள் வெறும் பொருள் ஈட்டுவதற்கு மட்டுமே உபயோகம் என்று தான் பெரும் பாலானவர்களின் எண்ணமாகும்.
இறைவனை அறிந்து கொள்ள உதவும் ஆன்மீகப் படிப்பைப் தெரிந்து கொள்ள ஆர்வமோ, முயற்சியையோ எண்ணும் நிலை உண்டா? என்பது அவரவர் மனசாட்சியிடம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். ஆனால் சிலர் அதனையும் துலைத்து விட்டு செல்வத்தை வெறும் போகப் பொருளாக மட்டுமே எண்ணுகின்றனர். ஆன்மிகம் தேடும் அநேகரும் மற்றொரு செல்வத்தை மறந்து விட்டு, அவர்களும் பொருட் செல்வத்தை மட்டுமே தேடிக் கொண்டிருக்கும் விந்தையைச் சிந்தித்தபடி நமது சுவாமி கணபதி கோவிலின் வெளிப்புறத் திண்ணையில் அமர்ந்திருந்தார். காற்று அன்று ஏனோ பலமாக வீசிக் கொண்டிருந்தது. வெளியே இருந்த இரண்டு ஆலமரங்களின் அநேக விழுதுகள் காற்றின் வேகத்தில் அசைந்து கொண்டி ருப்பது, அந்த மையிருள் சூழும் நேரத்தில் பீதியை உண்டுபண்ண வந்த ஜடாமுடி அரக்கன் தனது தலையை அசைத்துத் தனக்கு வேடிக்கை, விளையாட்டுக் காட்டுவதாக எண்ணி சுவாமி சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது கையில் பெரிய இரண்டு பைகள் நிறைய மளிகைக் பொருட்களைப் பாப்பம்பட்டியில் வாங்கி வந்த, நடுத்தர வயதுள்ள, சற்று தாட்டி யான உடல்வாகு உள்ள மனிதர் வந்து கோயிலின் தென்புறத் திண்ணையில் அமர்ந்து கொண்டார். களைப்பில் சற்று ஒய்வாகப் படுத்தும் விட்டார்.

அவரைப் பெரியசாமி என்று தான் அழைப்பார்கள். மலை உச்சியில் உள்ள வள்ளலார் மடத்தைக் கவனித்துக் கொள்ள வந்து சேர்ந்த துறவு எண்ண முடைய நபர் அவர். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு எழுந்து கொண்ட பெரிய சாமி அவர்கள் நமது சுவாமியைப் பார்த்து, “உணவு சாப்பிட வேண்டு மானால் மேலே மடத்துக்கு வந்து சேர்” என்று கூறிவிட்டுச் புறப்பட்டார். யார்? எவர்? என்று யாரையுமே அவர் விசாரிக்க மாட்டார். யாரைப் பார்த்தாலும் உணவு சாப்பிட அழைத்துப் பசிக்குச் சோறு போடுவது மட்டுமே தனது பணி என வாழ்ந்தவர் அவர். தனது பாட்டி பொன்னம்மாள் நாச்சியார் குணத்தை அது ஒத்திருக்கவே அவருக்கு வந்தனம் கூறினார் சுவாமி. அவர் தனது தோளில் பெரிய பையை எடுத்து வைத்துக் கொண்டார். மற்றொரு பையை சுவாமி எடுத்துக் கொள்ள இருவரும் நிதானமாக மலைப் பாதையில் ஏறிச் சென்றனர். தேவி ஐயிரை அம்மன் கோயில் வாசலில், சிமெண்ட் தளம் போடப்பட்ட நகரக் கொட்டகை யினுள் மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் வழியாகத்தான் மலை உச்சிக்குச் செல்லும் பாதை குகையின் வாயிலின் முன்பு சென்றது. அது சமணத் துறவிகள் வாழ்ந்த இடமாதலால் குகையின் வாயிலின் மேல் நிர்வாணத் துறவிகளின் புடைப்புச் சிற்பங் கள் பூச்சக்கரக் குடையுடன் தவக் காட்சிகள் தந்தன. குண்டு பல்பு வெளிச்சத்தில் கொட்டகை யின் தளத்தில், துறவி ஒருவர் படுத்திருந்தார். சிவந்த நிறமாக, நல்ல தேஜஸூடன், அழகாக, செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவராகப் பார்த்தால் மரியாதைக்கு உரிய வராகத் தென்பட்டார். நெற்றியில் பாங்கு டன் நாமம் துலங்கியது. தண்டு, கமண்டலத்துடன், உத்திராட்ச மாலைகள் அணிந்து, முப்புரி நூல் மார்பில் பொருத்தமாகத் தவழ்ந்து, வித்தியாசமாகக் காணப்பட்டார். ஓர் சுகந்த நறுமணம் அவரிடம் இருந்து வீசிக் கொண்டிருந்தது. வந்தவரை வாவென அழைத்து அன்னமிடும், வள்ளலார் மடத்துத் துறவியைப் பார்த்ததும் அவர் புன்முறுவல் காட்டினார். சுமை காரணமாக அதனைக் கவனிக்காமல் மடத்துத்துறவி முன்னால் சென்று விட்டார். நமது சுவாமியை ஏறெடுத்துப் பார்த்தார் அந்த இளம் துறவி. சுவாமிக்கு உடலில் மின்காந்த சக்தி பாய அதிர்வு அலைகள் உடல் முழுக்கப் பாய்ந்தது. அவருக்கு அன்பு வணக்கம் தெரிவித்தார். அவரும் புன்னகை புரிந்தபடி வந்தனம் சொல்லி ஆசி கூறினார். சுவாமி வள்ளலார் மடத்துத் துறவியுடன் சென்று மடத்தில் தங்கிக் கொண்டார்.

காலையில் எழுந்து நீராடி வந்தபின் ஜோதி வழிபாடு, அகவல் பாராயணம் எல்லாம் நிறைவடைந்து, மடத்தில் சமைக்கப்பட்ட கஞ்சி உணவை, அங்கு வந்திருந்த அனைவரும் உண்டு பசியாறினர். இரவில் பார்த்த இளம்துறவி கலை உணவு உண்ண வராததால், நமது சுவாமி விசிறிசாமி குகை மடத்தின் வழியே சென்றார். செந்தாமரைகள் மலர்ந்து குளத்திற்கு அழகைத் தந்து கொண்டிருந்தன. அங்கே சற்குரு நாதரின் அருகே இளந் துறவி பணிவுடன் அமர்ந்திருந் தார். சற்குருநாதரின் அபிமானத்தைப் பெற்றவர் என்பது சற்று நேரத்தில் புரிய வந்தது. நமது சுவாமியை விட்டு விட்டு வேகமாகச் சென்று விட்ட சற்குரு நாதரை மீண்டும் காண்கையில் ஏற்பட்ட புளகாங் கிதத்திற்கு ஈடு இணையே கிடையாது என்றெண்ணினார். இளம் துறவியின் உடல் சூரிய வெளிச்சத்தில் மின்னியது. நமது சுவாமியை அவர்கள் அமரச் செய்தனர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button