இறைவனை அடைய வழி?

174

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

17•12•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(170) மனிதனே புனிதன் —
இறைவனை அடைய வழி?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த உலகில் கடமை வழி ஆற்றுபவர்கள் எப்போதும் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு செயலாற்றும் போது, அவர்களும் இறையருளால் வெற்றி பெறுகின்றார்கள். உண்மையில் இறைநம்பிக்கை கொண்டவர்கள எத்தகைய சோதனைகள் வந்தாலும், இறைவனை நிந்தனை செய்யமாட்டார்கள்; மேலும் இறைசக்தியை வலுவாகப் பற்றிக் கொள்வார்கள். இந்தக் கருத்தின்படி நடந்து வந்த நாகராஜன் சுவாமி அவர்களின் கருத்துக்கும் சோதனை செய்து அருள் செய்வதும், இறைவனது சித்தமாக இருந்தது. பள்ளிப் பாடங்களைச் சீராகக் கற்காமலும், பள்ளிக்கு ஒழுங்காக வராமலும் தேர்வு எழுதாமலும் ஒரு மாணவன் வெற்றி பெற முடியுமா? அது போன்றது தானே வாழ்வும்!

சுவாமி நெருங்கிய சீடப்பிள்ளை! அதிக அக்கறை இருக்கும் போது சோதனைகள் என கெடுபிடிகள் அதிகமாகவே அல்லவா இருக்கும்? இந்தக் கால கட்டங்களில் நமது சுவாமி மிக அதிகமாகவே மெளனவிரதம் என்ற பெயரில் பேசுவதை் குறைத்துக் கொண்டார். என்ன ஏசினாலும் காதுகளில் விழாமலும் எண்ணிய அவருக்கு உண்மையாகவே காதுகளில் எவ்வித சப்தங்களும் கேட்காது போனது. அதனால் சுவாமிக்கு நன்மையே விளைந்தது. அதனை ஏற்றுக் கொண்டு முழுமையாகத் தன்னை, தனது சக்தியை வளர்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார். பிறகு இறையருளால் சரியானது!

கடவுளைத் தேடும் அன்பர்களில் ஒரு சிலரே, தனது புலனடக்கத்தின் வழியே உண்மையைக் கண்டு கொண்டார்கள். இன்னும் சிலர் தவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பரம்பொருளைத் தேடினார்கள். பலர் ஏதாவது தான, தர்மங்கள் மற்றும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்தின் மூலமாகவும் இறைவனை அடைந்து விடலாம் என்றெண்ணிச் செயல்பட்டனர். அநேகர் தெய்வ மந்திரங்களைப் பாராயணம் பண்ணுவதாலும், தெய்வீகமான, புனித யாகங்களைச் செய்வதன் வாயிலாகவும் இறைவனை விடாது நாடினார்கள். நம்பிக்கையைக் கூட்டிக் கொண்டார்கள். அதற்கு வேதகால ரிஷிகளே வழி காட்டியும் இருக்கின்றார்கள். வேதங்கள் வாயிலாக இறைவனைப் பற்றிய அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவுவழியே செல்வாராயினர்.

எண்ணிலடங்கா பக்தர்கள் மலைக் கோயில்களுக்குப் பாதயாத்திரைப் பயணம் செல்வதிலும், தீர்த்தயாத்திரை செய்து வருவதிலும் கடவுளின் அருளைப் பெற விடாது செல்ல விழைகின்றார்கள். “தான் யார் ? எதற்காக இவ்வுலகில் பிறந்தேன்? என்ன காரியம் செய்ய வந்திருக்கிறோம்?” என்ற கருத்தில் எண்ணத்தை செலுத்தும் ஞானியர்கள், ஆத்ம ஞானத்தையே தங்களது உலகமாகக் கருதி வாழ்வதாக அவர்களே குறிப்பிடுகின்றார்கள். இவர்களில் சிலர் துறவு வாழ்வே சிறந்தது என்று நினைந்து அதில்தான் இறைவனை அடைய முடியும் என்ற வைராக்கியத்துடன், குடுப்பத்தினரைத் துறந்து, தங்களுக்கு என்று நிலையான மடம் ஏதும் வேண்டாம் என்கிறதைக் கருத்தில்கொண்டு, எங்கும் நிலைக்காது, அலைந்து கொண்டிருப்பதே தங்களின் வாழ்வு என எண்ணி, வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவைகளை ஆதி முதல் இறைவனைத் தேடும் பணியைக் கவனித்து வந்தவர்களில் சிலர் இல்லத்தை ஏற்காது, தாங்கள் பிரம்மச்சரிய வழியில் சென்றார்கள். உலகமே நமக்குத் சொந்தமாகி விட்டது! இனி மனைவி, குழந்தைகள் என்கிற பந்தங்கள் நமக்கெதற்கு? அதனால் என்ன சாதனை செய்திடப் போகிறோம்? பெண் ஆசை வந்து விட்டால், பொருட் செல்வத்தைத் தேடும் ஆசை வரும்; பிறகு சொத்து, சுகம், பந்தம், உலக ஆசைகள் எனத் தொடர்ந்து வரும்; என இவைகளை எல்லாம் மீறி மனதில் திடசித்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதனால் பசிபட்டினி, நோன்பு, விரதம், பிச்சை எடுத்து உண்ணல் இவைகளே இறைவனை அடையச் செய்திடும் புனிதம்மிக்க பயணம் என்று வாழ்ந்தார்கள். மண், பெண், பொன் எல்லாம் உலக மாயை என்னும் ஆசைகளே என்று நினைத்து ஆத்மாவை அறிந்து கொள்ளவே முயன்றார்கள்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button