ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
03•09•2016,
சனிக்கிழமை.,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(56) மனிதனே புனிதன் —
இனிய வார்த்தைகள் கூறு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நல்ல குணம் உடையவர்களின் சேர்க்கை நமக்கு எக்காலத்திலும் நன்மையும், மனதிற்குள் இன்ப உணர்வுகளை உண்டாக்கும்.
திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்த சமயத்தில் தனது குருநாதர் பற்றியே சுவாமி சிந்தித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அது ஏக்கமாகவே இருந்தது. மணமக்களைச் சுற்றிலும் ஓதுவார்கள் அமர்ந்து தேவாரம் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்புறமாக ஒரு நாற்காலியில் அமர்ந்து தனது கையில் ஒரு வளைந்த சர்பம் போன்று விளங்கும் கம்பைப் பிடித்தபடி தனது குருநாதர் அமர்ந்து இருக்கும் காட்சி கண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார் நமது சுவாமி! வலது கையை உயர்த்தி ஆசி கூறும் அவரைக் கண்டு கையெடுத்துக் கும்பிட்டு “ஓம் ஸ்ரீ ஈஸ்வபட் ஆய சச்சிதானந்த சற்குரு தேவா சரணம்” என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்தார். குரு சிஷ்ய மனோபாவனை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அது ஓர் அனுபவ ஞானம்! நமது சுவாமிக்கு சந்தோஷம்!
சுவாமி அவர்கள் வாழ்க்கையில் அவருடைய சந்தோஷம் எல்லோருடைய சந்தோஷமாக மாறி விடும். இதனை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். திருமண விழாவிற்கு வந்திருந்த அனைவருடைய மகிழ்ச்சிக்கும் இதுதான் காரணமாக இருக்கும்! திருமணம் இனிதே நடந்த பிறகு நண்பர்கள் தங்களின் சில கருத்துக்களைச் சுவாமியிடம் கூறினார்கள். அதற்கு சுவாமி,” மறுவீடு அழைப்பிற்கு அவர்கள் வரும்போது நாம் எப்படிப் பட்டவர்கள் என்பதைப் புரிய வைத்து விடுவோம்” என்றதும், திரு.ஜியாவுத்தீனும், திரு.சுப்பிரமணியும்,” சரிசரி அப்படியே செய்து விடுவோம்” என்றனர்.
மாப்பிள்ளை, பெண்ணையும் கோலாகலமாக கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பட்டாசுகள் வெடித்தும் , ஆடியும் பாடியும் ஆனந்தம் கொண்டாடினர். ஊரே தங்கள் வீட்டு நிகழ்ச்சியாக விருந்து கொடுத்து உபசரித்தனர். பெண் வீட்டார் உறவினர்கள் தட்டுமுட்டு சாமான்களுடன் அலட்சியமாக வந்தனர். ஊர் மக்கள் திரண்டு அவர்களுக்குக் கொடுத்த மரியாதையும், உணவு உண்ணச் செய்தபோது செய்த உபசரிப்புகளில், சற்றுத்தட்டுத் தடுமாறிக் கிறங்கி அசட்டுச் சிரிப்புடன் அவர்கள் இருப்பதைக் கண்டு நண்பர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டனர். மேலும் அவர்களிடம் நட்புடன் அளவளாவி மகிழ்ந்தனர். இதனைக் கண்டு அவர்களுக்கு மாப்பிள்ளை வீட்டாரிடமும், கிராமத்தினரிடமும் மிகவும் பிரியம் ஏற்பட்டு விட்டது. நன்கு சந்தோஷத்துடன் கலகலப்பாக மாறி விட்டனர்.
சுவாமியின் மாமனார் ஐயா தெய்வீக உணர்வு உள்ளவர். தனது தகப்பனார் இறந்த காலத்தில் தனது உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தவர். அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்பு க்களை உண்டாக்கிக் தந்தவர். தனது கடைசி காலம் வரையில் சுவாமியின் கூடவே அவர் வாழ்ந்தார். திருமதி. மீனாம்பாள் நாச்சியார் அவர்கள் தனது தியான ஏக்கத்தை சுவாமியிடம் வெளிப்படுத்தினார். எப்போது தெரியுமா?
திருமணத்திற்குப்பிறகு மூன்று மாத காலம் எதுவுமே பேசாமல் மெளனத்தைக் கடைப்பிடித்து வந்தார் திருமதி மீனாம்பாள் நாச்சியார் அவர்கள்! சுவாமி தியானத்தில் ஆழ்ந்து இருப்பதை உண்ணிப்பாகக் கவனித்து வந்தார். அது அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. பூஜை அறையில் உள்ள ஒரு தட்டில் பொறித்திருந்த சில வாசகங்களைத் தினமும் படித்து வந்தவர், மூன்று மாதம் கழித்து சுவாமி அவர்களிடம் மனம் திறந்து பேசினார். இந்த வாசகங்கள் தனக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும், தியானத்தைக் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளதாகவும் கூறி, சுவாமிக்கு தகடு கிடைத்த விவரங்களைக் கேட்டறிந்து கொண்டார்கள். அந்த வாசகம் இதுதான் :
புகழ் கண்டு மயங்காதே!
புகழ் தேடிச் செல்லாதே!
புகழாரம் பாடாதே!
இன்னல் கண்டு கலங்காதே!
இகழ்ச்சி கண்டு பதறாதே!
இகழ்ந்துரைக்க எண்ணாதே!
சுவாமி அவர்கள் தனக்கு வாய்த்த மனைவி தனது மனம் போல் இருப்பது கண்டு இறைசக்திக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சுவாமி அம்மா என்று அனைத்து பக்தர்களும் அன்புடன் அழைக்கப்பட்ட அந்த மாதரசியிடம் தனது தியான அனுபவங்களைத் தவத்திரு நாகராஜன் சுவாமி அவர்கள் எடுத்துரைத்தார். இனி அந்த விபரங்களைக் பற்றி அறிந்து கொள்வோம்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.