ஆத்ம ஆணைக்குக் கீழ்ப்படிதல்.

228

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மகா ஜோதியே சரணம்!

08•08•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(404) மனிதனே புனிதன் —
ஆத்ம ஆணைக்குக் கீழ்ப்படிதல்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°நமது சுவாமி பரிகார முறையை ஜோதிட நிபுணர் திரு.ஷண்முகம் ஐயா அவர்களுக்குக் கூறிவிட்டு விஸ்வாமித்திர மகரிஷி தவ மேடைக்குச் திரும்ப வந்து அமர்ந்து கொண்டார். ஓடையின் அக்கரையில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக கிழங்குகளைப் பூமிக்குள் குழிகள் பறித்தெடுத்துத் தின்று கொண்டிருந்தன. சற்று தொலைவில் யானைகள் மேய்ந்து கொண்டும், உரக்கக் குரல் எடுத்துப் பிளிறிக் கொண்டும் ஓடித் திரிந்து கொண்டிருந்தன. நமது சுவாமி திரு.ஷண்முகம் ஐயா அவர்களிடம் , “அதோ எதிரில் தெரிவதுதான் சித்தர்கள் அமைத்த ஸ்ரீ வித்யா பீடம் உள்ளது. இங்கு மிருகங்கள் நமக்கு எவ்விதத் துன்பங்களை யும் ஏற்படுத்தாது. நீங்கள் அச்சம் கொள்ளாது இயற்கையில் மனம் ஒன்றியிருத்தல் வேண்டும். உடலில் இருந்து உடைகள், அரைஞாண் கயிறு இவைகளை நீக்கி விட வேண்டும். இன்பம், துன்பம், வெப்பம், குளிர்ச்சி, மான அவமானம் இவைகளை மறந்து விட்டு, மனம் அடங்க ஒன்றிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். யாருக்கு சாபம் நீங்க வேண்டுமோ அவர்களை எண்ணிச் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இந்தப் பிரார்த்தனையில் ஈடுபடும் உங்கள் மீது ஸ்ரீ வித்யா பீடத்தின் சித்தர்கள் கவனம் திரும்பும். ஆக வெட்கப்படாமல் காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும். அதோ மரங்களில் உள்ள வானரக் கூட்டங்களும் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கும். இதில் நீங்கள் தவறும் பட்சத்தில் அவைகள் உங்களின் உடுப்புக்களைக் கவர்ந்து சென்று விடும். எனவே இறைவனுடன் மனம் ஒன்றி ஈடுபடுங்கள் ” என்று கூறிவிட்டு வந்திருந்தார். திரு.ஷண்முகம் ஐயா அவர்கள் மாலை நான்கு மணியாகியும் திரும்ப வரவில்லை. எதற்கும் தேவைப்படும் என சுவாமி புதிய உடுப்புகள் ஓரு ஜதை எடுத்துச் சென்றிருந்தார்.

மாலை ஐந்து மணிக்குத் திரும்பி வந்த திரு.ஷண்முகம் ஐயா அவர்கள் பிரம்மை பிடித்தவர் போன்று கண்கள் இமையாது விழித்தது விழித்தபடியே இருந்தார். நமது சுவாமி விபூதி ஜெபம் செய்து அவரது நெற்றி யில் பூசி, உச்சந் தலையில் மூன்று முறைகள் பலமாக ஊதிவிட்டார். கவனம் முழுவதும் திரும்ப வரப் பெற்ற ஜோதிட நிபுணர் ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, உணர்ச்சி வசப்பட்டு, நமது சுவாமியின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒன்றிக்க கொண்டார். அவரது தோளைப் பிடித்து உலுக்கி இவ்வுலக கவனத்தில் மனம் திரும்பச் செய்தார். இரவு அங்கேயே தங்கிக் கொள்ள முடிவு செய்து மாலையில் அவல் உணவை உண்டனர். கோயில் மண்டபத்தை ஒட்டியுள்ள மரத்தில் ஏறி, மண்டபத்தின் மீது வசதியாக அமர்ந்து கொண்டனர். இரவில் கண் வெளிச்சம் தெரியாத மந்திகள் மரங்களில் அமர்ந்து கூச்சல் இட்டுக் கொண்டிருந்தன. திரு.ஷண்முகம் ஐயா அவர்கள் அன்றைய இரவு நேரத்தில் பரிகார ஜெபத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நமது நாகராஜன் சுவாமி அவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினார். “அவைகள் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள். அதனைப் பிறரிடம் ஏன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீர்கள்? ” என சுவாமி கேட்டார். ஜோதிட நிபுணர், “சுவாமி எதற்கான விடைகள் ஆயினும் தைரியமாகப் பேசக் கூடிய வலிமை உங்களிடம் உள்ளது. அதனால் எனது அனுபவத்தைப் பேச விரும்புகின்றேன்” என அன்போடு கூறினார். காரணம் அங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அதிசயம் மிக்கதாகத் தோன்றியதால் ஆர்வம் மிகுத்துச் சொல்வதற்குத் துடித்துக் கொண்டிருந்தார்.

நமது சுவாமி தியானத்தில் ஆழ்ந்து இருந்த காரணத்தால் அவருக்கு வனத்தில் பேச்சுத் துணையின்றி சிறிது அச்சமுற்றிருந்தார். அவர் மந்திகளின் கூச்சல் தாளாமல் மனதின் அமைதியை இழந்திருந் தார். தூரத்தில் ஒரு வயோதிகர் சிவக்கனி போல் வருவதைக் கண்டு தைரியமும் கொண்டார். அவர் கோயிலின் அருகே வராமல் விலகி ஸ்ரீ வித்யாபீடம் நோக்கிச் செல்பவராகத் தென் பட்டார். அவரது கண்களில் அக்கினி ஒளிர்ந்து கொண்டிருந்த தது. திரு.ஷண்முகம் அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு, “சாமி, சாமி” என சப்தமாகக் குரல் கொடுத்தார். அவர் தீவிழி விழித்து பார்க்கவே பயந்து நடு நடுங்கிப் போனார். போதாததற்குக் காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து கோயிலைச் சுற்றிலும்’ ஓடிக் கொண்டிருந்தன. என்ன செய்வது என அறியாமல் கைகளைப் பிசைந்தபடி திரு. ஷண்முகம் அமர்ந்திருந்தார். மின்மினிப் பூச்சிகள் பலவித நிறங்களில் கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து திகைத்துப் போனார். இதைவிட அதிசயம் வேறென்ன இருக்க முடியும் என அவரது மனம் எண்ணியது. நமது சுவாமி அசைவில்லாமல் அமர்ந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, அவரையும் அறியாமல் ஒருவித மோன மயக்கத்தில் ஆழ்ந்து போனார். தூரத்தில் வினோதமான பூஜை வாத்திய ஓசைகள் கேட்பதை உணர்ந்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button