அறநெறியாளன் உள்ளம்.

154

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•08•2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(52) மனிதனே புனிதன் —
அறநெறியாளன் உள்ளம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இதயத்தில் இருந்து சிந்தித்து உருவாகி வருகின்ற வாசகங்கள் மட்டுமே ஆனந்தத்தை ஏற்படுத்துகின்றன. வெறும் வாயினால் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிப் பேசிடும் வார்த்தைகளினால் வீண் விவாதங்களே ஏற்பட்டு விடுகின்றன.நன்மை பயக்கும் இனிய மொழிகள் கேட்டும், மெளனத்துடனும், அடக்கத்துடனும் இருப்பவனே உள்ளத்தை உணரக் கூடியவன். அவனே சற்குரு நாதரின் உபதேசங்களைச் செவிமடுத்து அதன் உண்மையை உணரக் கூடியவன்.

அப்படிப்பட்ட அற நெறியாளனாய் விளங்கும் அன்பர்கள், மற்றவர்களுடைய தோற்றத்தைக் கண்டு ஏமாந்து விடாமல், உள்ளத்தைக் கண்டே பிறருக்குச் சற்குரு நாதரின் கருத்துகளை, எடுத்துரைக்கும் தகுதியை இறைசக்தி மெய்யன்பர்களுக்குத் தந்திருக்கிறது.

இறைவனது சக்தியைப் பற்றியோ, இறைவன் வழியை எடுத்துரைக்கும் குருமார்கள் பற்றியோ அல்லது இறையருள் மீது பற்றுக் கொண்டு விட்ட மற்றவர்களைப் பற்றியோ நமக்கு எந்தவித சந்தேகங்களும் ஏற்பட்டு இருக்கலாம். அதனால் இறைவன் அருள் பெற்றவர்களுக்கு எவ்வித பாதிப்புகளையும் அது ஏற்படுத்தி விடாது. ஆனால் இறைவன் அருள் கூறும் குருமார்கள் இடத்திலோ, இறை நம்பிக்கை பெற்றவர்களிடத்திலோ, உண்மைக்குப் புறம்பாக நாம் பேசும் பொழுது தான், அதனால் ஏற்பட்டு விடும் கெடுதல்களினால் கட்டாயம் நாம்தான் பாதிப்புக்குள்ளாகி விடுவோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குருமார்களிடம் இறையருள் பெறுகின்ற ஜெபத்தினைக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்று இறைஜெபம் செய்து வரவேண்டும்.

அதனால் என்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது தெரியுமா?

*நம்மை மறந்து விட்ட நேரங்களிலும் நம்மைச் சுற்றிலும் என்ன நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்பது தெரியவரும்.

*நாம் பகல் பொழுதில் விழித்துக் கொண்டிருக்கும் காலத்தில், இரவு தூங்கும் போது கிடைக்கும் நிம்மதியான சுகத்தை இறையருள் உண்டாக்கித் தரும்.

*நாம் இரவில் நிம்மதியாக உறங்கும் காலத்தில், நமது மனம் விழித்துக் கொண்டிருக்கும் ஜாக்கிரதை உணர்வாகிய அற்புதமான வித்தையை, இறையருளால் பெற்று விடுவோம்.

*இறைவனது ஜெபம் நமக்கு முன்னேற்றத்தைத் தருவதோடு, நாம் அறிந்தோ, அறியாமலோ செய்து விட்ட சகல பாவங்களுக்கும், விமோச்சனம் பெறுவதற்கு இறைவழியில் கிடைக்கப் பெறும்.

*நாம் எதனைக் கற்றுக் கொண்டாலும் அதனைப் பழகிப் பழகி பழக்கத்திற்குக் கொண்டு வருவதும் மிகவும் சுலபமான காரியம் தான். ஆகவே இறையருள் சக்தியைச் ஜெபம் செய்யக் கற்றுக் கொள்வோம்.

*இதில் முக்கியமானது ஒன்று இருக்கிறது. இறைஜெபம் செய்தாலோ அல்லது வாழ்வில் வேறு எந்தக் காரியங்களில் ஈடுபட்டாலோ அதன் பலன் எத்தகையதாக இருந்தாலும் அதனை இறைசக்திக்கே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். இறைசக்திக்கு நன்றி கூற வேண்டும்.

* அதனால் இறையருள் எப்போதும் நமக்குப் பக்கத் துணை இருந்து பாதுகாத்து வரும். மேலும் நம்மை இறைவழியில் என்றும் வழிநடத்திச் செல்லும். நமது சுவாமியின் அசைக்க ஒண்ணா இறைநம்பிக்கை வலுப் பெற்றதும் இப்படித்தான்.

பொள்ளாச்சி பத்திரகாளியம்மன் கோயில் பகுதியில் அக்காலத்தில் நமது சுவாமியின் உறவினர்கள் குடியிருந்து வந்தனர். சுவாமியின் குடும்பத்தினரும் அங்கு சென்று பார்த்து வரச்சென்றபோது, சுவாமியும் காரண நிமித்தம்
அவர்களுடன் ஜெபம் செய்து கொண்டு போனார். உறவினர் வீட்டில் மாலை நான்கு மணிக்கு எல்லோரும் தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது பரபரப்பாகப் குழந்தைகள் ஓடிவந்தனர். “யாரோ ஒரு ஆள் தெப்பக்குளத்தினுள் செத்துக் கிடக்கிறார்” என்றனர்.

மாரியம்மன் பூவோடு திருவிழாக் காலங்களில் இறுதியாக அங்கு தான் வைத்து விட்டுச் செல்வார்கள். ஜனங்கள் கும்பல் கும்பலாகச் சென்று பார்த்து விட்டு வந்து தங்களுக்கு மனதில் தோன்றியதை எல்லாம் கதைகதையாகப் பேசிக் கொண்டிருந்தனர். சுவாமி அவர்கள் உறவினரிடம் நன்றி கூறிவிட்டு விடைபெற்று வீடு திரும்பும் வழியில் மாரியம்மன் தெப்பக்குளத்திற்குப் போனார்.

குளத்தின் மேற்குப் பகுதியில் பெரிய அரசமரம் இருந்தது. அங்கே சென்று மரத்தின் கீழே நின்று குளத்தின் சுற்றுச்சுவர் மீது சாய்ந்தபடி நீரினுள் எட்டிப் பார்த்தார். வெள்ளைநிற காடாப் பனியனும், நீலநிற பார்டர் போட்ட தூயவெண்ணிற வேட்டி நன்கு அணிந்தபடி, குப்புறப் படுத்து தலையை நீருக்குள் அமிழ்ந்து மிதந்தபடியே அசைவற்று இருந்தார். மிகுந்த தேஜசுடன் நல்ல நிறமாக இருக்கும் அவரைப் பார்த்து, “யாரோ பிராமணன் போல் இருக்கிறது. என்ன துன்பப்பட்டு இப்படி ஒரு முடிவு எடுத்தாரோ? எந்த ஊரோ?” என்று பச்சாதாபப் பட்டனர். பிராமணன் என்பதால் உடலை எடுக்கத் துணிவு யாருக்கும் வரவில்லை! மக்கள் அனைவரும் அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிந்தது.

நமது சுவாமி ஜெபம் செய்து கொண்டு இருந்தவர் காதில் யாரோ மெல்லிய குரலில் பேசுவது நன்றாகக் கேட்டது.

“நாகராஜா நான் மிதக்கும் குளத்து நீரில் குளித்தால் உனது நீர்கண்டம் விலகும் ” கம்பீரக் குரல்தான் ஆனால் மெல்ல ஸ்பஷ்டமாகக் கேட்டது. குளத்தில் குளிக்க வந்தவர்கள் குளிக்காமல் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். நமது சுவாமி வடக்குப்புறப் படிகளில் இறங்கி முதலில் முகத்தை அலம்ப எண்ணி நீரில் கையை வைத்ததும் மின்அதிர்வு ஏற்பட அப்படியே படிக்கட்டில் உட்கார்ந்து விட்டார். சிறிது நேரம் சென்று மெல்லக் கால்களை நீரினுள் விட நீரில் இருந்து உடலுக்குள் பல்லாயிரம் ஊசிகள் தைத்தது போல் மிகவும் குளிந்த பனிக்கட்டிக்குள் விழுந்தால் ஏற்படும் அனுபவம் போல் இருக்கத் துணிந்து நீரினுள் இறங்கி விட்டார். நீரினுள் மூழ்கி கண்களைத் திறந்து பார்க்கவும் நீர் முழுக்க நீலநிற ஒளியாக இருந்தது. நீருககுமேலே வந்த போது நீர் பசுமையாக இருந்தது. ஒருவகையான இன்ப அதிர்வு சுகமாக இருக்க ஒருமணி நேரம் ஆனந்தமாகக் குளித்தார்.

அருகில் நீந்திச் சென்று பார்த்து வரலாமா என்று நினைத்தவுடன் நீரினுள் மின் அதிர்வு அதிகரித்து விட சுவாமி உடனடியாக நீரை விட்டு வெளியேறியதும் அதிர்வு விலகியது. குருதாதரை நமஸ்கரித்து விட்டு சந்தோஷமாக வீட்டிற்கு வந்து தியானத்தில் அமர்ந்தார். தினமும் சென்று குருநாதரைப் பார்த்துவர காலையில் சென்று குளத்தில் குளித்து விட்டு வரலானார். நீரில் மின்சார அதிர்வு இருந்து கொண்டிருந்தது.
உடலை அப்புறப்படுத்தும் தைரியம் யாருக்கும் வரவே இல்லை!

சுவாமி தினமும் குளிக்க வருவதைத் தெரிந்து கொண்ட உறவினர்கள் பிணம் கிடக்கும் குளத்தில் குளிப்பது நியாயமா? என்று கூறினர். மூன்று தினம் குப்புற மிதந்தவர் மற்ற இரண்டு நாட்களும் நீரில் மல்லாந்து மிதந்து கண்மூடித் படுத்திருந்தார். அந்தக் கால நேரத்தில் நீரினுள் தங்கநிற ஒளியாகத் தோற்றம் ஏற்பட்டது. ஐந்தாவது நாள் மாலையில் சூரியன் மறைந்து நேரத்தில் நீரின்மீது பத்மாசனத்தில் இருந்தார். உடல் மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வந்தது. நமது சுவாமி படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார். கரைஏறிய குருநாதர் மெளனமாக ஆசீர்வாதம் தந்தார்.
சில நேரங்களில் நமக்கும் சில விஷயங்கள் புரியவதற்கும் சந்தர்ப்பம் அமைய வேண்டும். சுவாமி கூறியது குருநாதர் கரைக்கு மேலே வந்த போது உடுத்தியிருந்த உடுப்பில் நீரின் இயல்பான ஈரம் படாமல் இருந்ததுதான் புதிராக இருந்தது.

மறுநாளும் நமது சுவாமி குருநாதரைப் பார்க்கும் விருப்பத்தின் பேரில் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button