ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
09•08•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(405) மனிதனே புனிதன் —
அனுபவம் புதுமை ஆனால் உண்மை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அதிகாலைச் சூரியன் உதயம் அற்புதமாக இருந்தது. தோப்பு மலையில் உச்சிக்குச் சென்று விஸ்வாமித்திர மகரிஷியின் யாக குண்டத்தில் இருந்து பஸ்மம் எடுத்து வர வேண்டும். எனவே துரிதமான பயணம் மேற் கொண்டனர். வழி காட்டி தேவைப்படவில்லை. வழி எங்கும் சுண்ணாம்பினால் அம்புக்குறியிட்டுப் பாதை காட்டப்பட்டு இருந்தது. அதனால் பயணம் மிக எளிதாக இருந்தது. வனத்தினுள் உயரே போகப் போக திரு ஷண்முகம் அவர்கள் பரபரப்புடன் காணப்பட்டார். அவர் இந்த இடங்களைக் கனவில் பார்த்திருப்பதாகக் கூறினவர், அதை நினைவில் கொண்டு வர முயன்றார். மதியம் உச்சிப் பொழுதில்தான் அவ்விடம் சென்று சேர்ந்தனர். விஸ்வாமித்திர மகரிஷி, தான் யாகம் செய்திடும் பொழுது தனக்குக் காவலாக ஸ்ரீ ராம லக்ஷ்மன் இருவரையும் நிறுத்தி வைத்த இடமும், தாடகையை வதம் செய்த இடமும் இங்கு தான். பலா, அதிபலா சக்திகளை மகரிஷி அடைந்த அநேகச் சிறப்புகள் வாய்ந்த இந்த இடத்தைப்பற்றி அறிந்து குழந்தை போல் மகிழ்ச்சி உற்றார். சுவாமி தன்னுடன் கொண்டு சென்ற உபகரணங்க ளுடன் யாககுண்டத்தில அக்னியை ஸ்தாபிதம் செய்து யாகமுடிவில் தேவையான பஸ்பத்தை சேகரித்துக் கொண்டார். மூலிகைகளின் ஆற்றலால் யாக அக்கினி குளிர்ச்சியுடன் காணப்பட்டது. இது ஜோதிட நிபுணருக்கு வியப்பை ஏற்படுத்திற்று.
முறைப்படி சித்தர்கள் யாகம் மிக நன்றாக நடைபெற்று பஸ்பம் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டது. தாடகை நாச்சியார் கோயிலும் அங்கு உண்டு. வனவேடர்கள் வழிபாடுகள், சடங்குகள், மிருகங்கள் பலி எல்லாம் நடை பெறும் அவ்விடத்திற்குக் கூப்பிடு தூரத்தில் பச்சைநிற நாகங்கள் ஏராளமாக வாழும் பகுதி உண்டு. அங்கு சென்று திரும்புவதற்குத் தயக்கம் காட்டி னார். விஸ்வாமித்திரர் யாக குண்டத்தில் முன்பாக அமர்ந்து, “தனக்கு ஏதாவது கூற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நமது சுவாமி, “மனித நேயம் என்பது முதலில் தன்னுள் இருக்கும அமைதியில் இருந்துதான் உருவாக வேண்டும். அந்த அமைதியானது யாராலும் சீர்குலைக்க முடியாததாக இருக்க வேண்டும். மனிதநேயம் என்பது மன்னிக்கும் மனநிலையை உருவாக்கி மகிழ்ச்சியைத் தரும். உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் மனதில் உருவாக வேண்டும். அதனை மனிதாபிமானம் என்பர். அத்தகைய மனதில் தான் எப்போதும் இதமான எண்ணங்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கும்.”
நமது சுவாமி தொடர்ந்து கூறினார், “உங்களது உள்ளத்தில் என்றென்றும் இறைவன்பால் நன்றி உணர்வு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அது உள்ளத்தின் தூய்மையை வளர்க்கும். நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் மீது பற்றும், மதிப்பும், அதனை நேசிக்கும் அழகின் உணர்வும், இறையருளும் இருந்தால் தான் சமத்துவ குணங்கள் வெளிப்படும். உங்களைப் போன்றே மற்றவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம்தான் இவ்வுலக வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். உங்களைச் சுற்றிலும் இருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் தாம், உங்களது வாழ்க்கையில் நல்ல படிப்பினையை உருவாக்குபவர்கள். அவர்களுக்கு நன்றி உணர்வுடன் வாழ்த்துக்கள் கூறிக் கொள்ள வேண்டும். இதனால் சகோதரத்துவ உணர்வு உண்டாகும் வாய்ப்புகள் பிறக்கும்”.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் உணர்ச்சி பூர்வ வசமானார். நமது நாகராஜன் சுவாமி அவரிடம், “ஜோதிடர் ஐயா, எந்த நிகழ்ச்சியும் நம்மை உணர்ச்சியின் வசமாக்கக் கூடாது. அதனால் மிக அதிகமான சக்தி இழப்பை நமக்கு ஏற்படுத்தக் கூடும். நல்ல செய்திகள் கேட்கும் போது நமது உணர்வைத் சிரசின் உச்சியில் வைத்திருக்க வேண்டும். அதனால் மனம் கட்டுக்குள் அடங்கி இருக்கும். சக்தி இழப்புத் தடுக்கப்பட்டு நினைவில் ஆற்றல் பெருகும்” என்றார். திரு.ஷண்முகம் ஐயா அவர்கள் நன்றி கூறினார். பிறகு, “சுவாமி, தாங்கள் எனக்கு இந்தத் தோப்பு மலையின் முக்கியமான செய்திகள் பற்றித் தயவு செய்து கூற வேண்டுகிறேன். எனது கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும் சுவாமி ” எனக் கேட்டார். “நீங்கள் ஓடையில் பரிகாரம் செய்ய அமர்ந்ததில் இருந்து வரிசையாக நினைவு படுத்திப்பாருங்கள், உண்மை தெரியவரும் ” என்று சொன்னதும்,திரு.ஷண்முகம் ஐயா அவர்கள்; “ஆஹா ” எனக்
குரல் கொடுத்தார். இருவரும் புறப்பட்டு பரிகாரம் செய்திட்ட ஓடைக்கு வரும்போது மாலை நேரம் மணி ஐந்து. நந்தகோபால சுவாமி கோயிலின் முன்புறம் உள்ள காரை வாசலில் இருவரும் அமர்ந்து கொண்டனர்.
கோயிலின் முன்புறம் சிறிய யாக குண்டம் ஒன்று இருந்தது. கோயிலில் பூஜை செய்திட வாரம் ஒருமுறை ஒரு பெரியவரும், அவரது மகன் ஆசிரியராக பணிபுரிபவரும் வருவார்கள். எல்லாப் பொருட்களும் மலை அடிவார கிராமங்களில் இருந்து
வந்து சேரும்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.