ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
20•09•2016,
செவ்வாய்க்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(73) மனிதனே புனிதன் —
அதிசய மனோ பாவம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சில முக்கிய சம்பவங்களை நான் இடையிடையே சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. வரலாற்றின் ஏடுகளில் சிலருக்கே சில அபூர்வத் தன்மைகள் ஏற்படுகிறது என இருக்கிறது. இறைவனது திருவுள்ளம் அப்படித்தான் என்று நினைக்கும் கருத்தில் மனதின் அமைதி என்றும் நிலையாக இருக்கிறது. நமது மனம் முந்திக் கொண்டு, உண்மையை உணராமல் அல்லது அறிவதற்கு இஷ்டப்படாமல் சேட்டைகளைச் செய்து விடுவதும் உண்டு. நம்மை நாமே பெரிய சக்தி பெற்றவர்கள் என்ற எண்ணம் வந்து விடும் போது, நம் முன்னே வாழ்ந்து உலாவும் புனிதர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் தவறவிட்டு விடுகிறோம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் ஒரு வேடிக்கை உண்டு. இவர்கள் புனிதர்கள் என்று தெரிந்ததும் அவர்களிடம் தமது சொந்தக் காரியங்களை உடனே நிறைவேற்றித் தருமாறு கட்டாயப் படுத்துவோம். நம்மிடம் உள்ள சரக்கு உண்மை இல்லை என்பதறிந்து கொண்டு அவர்கள் மெளனமானாலும் விடமாட்டோம். அவர்கள் கூறவருவதைக் கேட்கவும் மாட்டோம். நான் சொல்ல வருவதை நீங்கள் கட்டாயம் கேட்டுத்தான் தீர வேண்டும் என்று கூறி சுவாமியின் கால்களைக் காலை முதல் மாலை வரையிலும் ஆள் மாற்றி ஆள் அமர்ந்து பிடித்துக் கொண்டு இருந்தவர்களை நாங்கள் அறிவோம். சுவாமி பேசாமல் அமர்ந்து கொண்டே இருப்பார்.கால நேரம் போவதறியாமல் அமர்ந்திருப்பார். நம்மால் அது இயலாமல் புறப்பட்டுச் சென்று விடுவோம். இவர்களை நாம் அறிய முயலாமல், இவர்களிடம் கட்டாயப் படுத்தி எதனை அறிந்து கொண்டு விட முடியும்?
சிலருக்கும் காரியங்கள் உடனே நடந்து விடும். சிலருக்குச் சில நாட்கள் செல்லும். சிலவற்றை சுவாமி கண்டு கொள்ளவே மாட்டார்கள். அதற்கான காரணம் இருக்கும். சிலர் தெய்வீக ரகசியங்களுக்குள் தனது தகுதியறியாமல் நுழைந்து, ஆழம் தெரியாமல் காலை விட்டு அவதியுற்றார்கள். சிலர் சுவாமி சொல்வதைக் கேட்கப் பிடிக்காமல், தெய்வீகம் என நினைந்து ஆவியுலகத் தொடர்பில் சிக்கி, நோயுற்று மாண்டு போனவர்களையும் கண்டிருக்கிறேன். அவர் காட்டும் சரியான பாதையில் சென்று வெற்றி பெற்றவர் களையும் அறிந்திருக்கிறேன். அவர்களெல்லாம் தானதர்மங்கள் செய்து இறைவன் கருணைக்கு ஆளானவர்கள்!
உலகத்தில் எக்காரியங்களிலும், எதுவெல்லாம தர்மமாக செயற்படுகின்றதோ அதனையே பண்பு என ஞானியர்கள் கூறினர்.
பிறரை மதித்து நடப்பதும், பொறுமையும், சகிப்புத்தன்மையுமே பண்பாட்டின் நிலைக்களன்கள்.
இயற்கையான அறிவுடன், அநேக எண்ணிக்கைகள் கொண்ட உயிர்கள் இருந்தாலும் அதற்கென்று(உயிர்) தனியே உருவம் கிடையாது. உருவம் உடைய உடல்களை அது இயக்கும் போது கூட தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. உடல் கிடைத்தாலன்றி உயிர் தனியே இயங்குவதுமில்லை. மற்றவற்றைப் போல் உயிர் தனது வளர்ச்சியைக் காட்டாமல் புதிராகவே கடவுளின் தன்மையைப் போலவே விளங்குகிறது. அதனைப் போன்றதே ஞானியர்கள் நெஞ்சம்.
மனிதனின் உயிராத்மாவானது தான் தோன்றிய விதத்தையும், வாழும் வாழ்க்கையின் இறுதி முடிவுக்குப் பின்பும் உள்ள நிலையை அறிந்து கொண்டிட என்ன செய்ய வேண்டும்? அதற்கு அறிவு துலங்க வேண்டும்!
அறிவு துலங்க மனம் பண்பட வேண்டும்!
மனம் பண்பட மனதில் அமைதியும், தூய்மையும் வேண்டும்!
மனத்தூய்மையும், அமைதியையும் பெறவேண்டுமாயின் அறியாமை நீங்க வேண்டும்.
வாழ்வின் இடர்கள், கவலைகள், பேராசை, கோபம், ஆணவம், அகங்காரம் நீங்கிட ஒரு சற்குரு நாதன் வேண்டும். அநேக நன்மை பெறும் வழிகளை அவரிடம் நம்பிக்கையுடன் கற்றுத் தேர்ந்து மனிதனாக வேண்டும். இறைத் தொடர்பும் தியானமும் அதனால் உண்டாகி விடும். அதுவே மனதின் அதிசய அற்புதமாகும்.
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.