அகால மரணம் ஏன்?

240

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

22•03•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(265) மனிதனே புனிதன் —
அகால மரணம் ஏன்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“எப்பொழுதும் மனிதன இயற்கைக்கு உடன்பட்டே வாழ்ந்து வரவேண்டும் என்ற நியதியை யாரும் தடுப்பாரில்லை. பிரபஞ்ச அமைப்பிற்கும், அதன் கருத்திற்கும் இசைந்து வாழாமல் இருக்கின்ற மனிதனுக்கு, வாழ்வில் நேர்வதெல்லாம் எதிர்மறையாக இருக்கும். அப்படிப்பட்ட மனிதனே தனது விதியை எண்ணி எண்ணி வருத்திக் கொண்டிருப்பான். தனக்கு வாழ்வில் நேரிடும் சம்பவங்களுக்கு, அதனையொட்டி என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்யாமல் வேறு ஒன்றைச் செய்வான். சமமான மனநிலையை இழந்து விடுவான். ஆகவே மனங்கலங்காமல் காரியம் ஆற்றும் துணிவை, நேர்மறையான பிரார்த்தனையில், தகுந்த வழிகாட்டிகள் உதவியுடன் அடைந்திட முடியும்.”

“ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்! மனிதன் செய்யக் கூடிய எந்தக் காரியங்களும் அது ஏதாவது ஒரு வகையில் உலகத்திற்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். தன்னால் இந்தக் காரியத்தைச் செய்து விட முடியுமா? முடியாதா? இந்தச் செயல் நமது சக்திக்கு உட்பட்டு செயலாகுமா? என்பவை பற்றி சிந்திக்க வேண்டும். நமக்குள் உள்ள சக்தியானது இறைவனால் அருளப்பட்டதே! தன்னால் செய்ய முடியாத காரியங்களை மற்ற ஒருவனைச் செய்யச் சொல்லி வேண்டும் பொழுது தனது அறிவினையும் உபயோகப் படுத்த வேண்டும். அந்த வகையில் சக்தி நிறைந்த ஆற்றல் பெற்றவர்கள் கூறும் ஆலோசனைகள், உலகினுக்கு உபகாரமாகச் செயல்பட வழி காட்டுதல்களில் எல்லாம் அபூர்வமான விஷயங்கள் பரிகாரம் எனப்பட்டது. இதில் பிரபஞ்ச சக்தியின் இயற்கை இயல்பு கொண்டே மனித அறிவு திறம்பட வழிகாட்டி உதவியது.”
— ஸ்ரீ ஈஸ்வர நீதி

எங்களுக்குத் தெரிந்த குடும்பத்தில் காலசர்ப தோஷம் உடையவர் ஒருவர் இருந்தார். அவருக்கு அக்காலத்தில் வயது ஐம்பது ஆகியிருந்தது. சுவாமி சொல்லிய பரிகாரங்களில் அவரால் கவனம் செலுத்த முடியாதவாறு வேலைப் பழுவால் அவதிப்பட்டு வந்தார். வீட்டினர் நெருக்கடி அதிகம் இருந்தது. அவரது மனோபீஷ்ட்டம் எதுவுமே நடை பெறவில்லையே என்ற ஆதங்கம் வேறு. அவரது விவசாய பூமியை அரசாங்கம் எடுத்துக் கொண்டது. அக்காலத்தில் இடங்கள் இன்று போலில்லாமல் மிகவும் மலிவான விலைக்குக் கிடைக்கும். தனது பூமி கைவிட்டுப் போனதில் ஏகப்பட்ட வருத்தம். மற்றோரு விவசாய பூமியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் பசிதாளாமல் வீட்டிற்கு வந்தவர், பாத்திரத்தில் பழையசாதம் வெளியே வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்தார். ஆது கெட்டுப் போன உபயோகமற்ற பொருள். பசியினால் அதனை உண்டு விட்டுத் தோட்ட வேலைகளைத் கவனிக்கப் சென்றவருக்கு, உடல்நிலை சீர்கேடடைந்தது. அவரைப் பற்றி அக்கரை வீட்டில் உள்ளவர்களுக்கு இல்லாததால், அவர் அங்கே மயக்கமாகி மண் தரையில் சாய்ந்து விட்டார்.

கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வெற்று உடம்புடன் சூடான தரையில் துடிதுடித்துக் கொண்டு இருந்தார். அப்படியே உயிர் பிரிந்து விட்டது. அவரவர்கள் வேலை அவரவர்களுக்கு என்று இருந்த சுயநலம் குடும்பத்தினர் அவரைப் பற்றிய நினைப்பின்றி இருந்தனர். இறந்து போனவரின் மாடுகள் அவரது உடலருகே கண்களில் கண்ணீர் விட்டபடி அவரது முகத்தை நாவினால் வருடியபடியே இருந்தது. இரவு நேரம் ஆக மாடுகள் வீடுபோய்க் குரலெடுத்துக் கத்திக் கதறிக் கொண்டு இருந்த அந்த ஜீவன்கள் பிரம்பால் அடி வாங்கி விட்டு, விதியே எனத் தனது பணியைத் தொடர்ந்தன. தனது எஜமானரை எண்ணி விடிய விடிய கத்திக் கொண்டிருந்தன. பையன்களோ நினைத்தால் வீடு வருவார்கள். இல்லையென்றால் எங்காவது சென்றிருப்பார்கள். “மாடுகளை விட்டு விட்டு இந்த மனுஷன் எங்குபோய்த் தொலைந்தாரோ?” என்று வைதபடி வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருந்தார் மனைவி. மறு நாள் பையன் களைத்தேடிச் சென்று , அப்பா வீடு வந்து சேரவில்லை என்ற செய்தியைக் கூறினார்கள். அதனைக் கேட்டதும் எல்லா இடங்களிலும் அப்பாவைத் தேடிப் போனார்கள்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button