ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
14•08•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(410) மனிதனே புனிதன் —-
ஊர் இரண்டுபடக் கூத்தாடியின் குதூகலம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிராமத்தில் அனுதினமும் ஏதாவது ஒரு பிரச்சினையாக காட்சிகள் தினமும் அரங்கேறத் துவங்கியது. அதில் ஒன்றுதான் அருகில் குடியிருந்த இஸ்லாமிய நண்பர் வீட்டைப் பலதரப்பட்ட மக்கள், ஓடுகளை உடைத்தும், கதவுகளைப் பிளந்தும் தங்களைக் கொடூரமாக வெளிப்படுத்திக் கொண்டனர். இந்த ரகளையில் அதிகமாக இஸ்லாமியர்களும் கலந்து கொண்டது தான் மிகுந்த வேதனையான சம்பவம் ஆகும். ஏன் என்று கேட்கத் தோன்று கின்றது அல்லவா? அது பஞ்சாயத்துத் தலைவரைப் தேர்ந்தெடுக்க வந்த தேர்தல் போட்டியில் இரண்டு பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஊழித் தாண்டவம் தான். அவர் உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எதிர்க் கட்சியில் ஆழியாற்றைத் தாண்டினால் வரும் மார்ச்சநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சற்று செல்வாக்கு உடையவர். நமது சுவாமி அவர்களுடன் ஆரம்பப் பள்ளியில் படித்த சக நண்பர் தான். கலவரத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்ள பெண்கள் கொதிக்கின்ற எண்ணையில் அரைத்த மிளகாய் தூளைக்கலந்து, அடாவடியாகத் தங்களைத் தாக்கவந்த கிராம மக்கள் மீது ஆளுக்கு ஒரு கரண்டி கொதிக்கும் மிளகாய்த் தூள் எண்ணையைச் சரியாக முகத்தைப் பார்த்து வீசியடித்து விட்டனர். அனேக கலவரக் காரர்கள் வீதியில் படுத்துக் புழுதியில் உருண்டு கொண்டிருந் தனர். ஏதோ கொஞ்சமாக விவசாயம் செய்து வயிற்றுப் பாட்டைக் கவனித்து வந்த அந்தக் குடும்பமே அன்றிலிருந்து உடைந்து போன வீட்டில் தான் கடைசிவரை வாழ்ந்து வந்தது. வீடிழந்த அவரும் அரசியலை விட்டே விலகி விட்டார். வீட்டை உடைத்துக் கலகத்தில் ஈடுபட்ட நண்பர் இப்போது, உள்ளூர் கிராமத்தை ஆட்டிப் படைக்க வந்த அயலூர் தாதாவாக, உள்ளூர் மக்களே அவரை உருவாக்கி விட்டனர்.பிறகென்ன அடிஉதைக்குக் கிராமத்தில் பஞ்சமே இல்லாமல் போனது. இதில் மகிழ்ந்து போன தம்பன வசியன் குடும்பத்தினர், அயலூர் தாதாவை இருகரம் கூப்பி வரவேற்ற கையோடு பெரிய கறி விருந்துக்கும் ஏற்பாடு செய்து விட்டனர்.
மலையாள எல்லைப் புரத்தில் இருக்கும் கோவிந்தாபுரத்தில் இருந்து தருவித்த கள்ளை உண்டு விருந்தினர் அனைவரும் பிறவி எடுத்த பயன் இதுவென தாதாவின் காலடியில் வீழ்ந்து கிடந்தனர். இதுதான் சமயம் எனக் கருதி அவரது காதில் சப்தமாக, நமது சுவாமி அவர்களை ஊரை விட்டே விரட்ட வேண்டும் என ஓதியும் வைத்தனர். “அவர் பாவம் ஒரு அப்பாவி மனிதர். மரியதைக்கும் உரியவராகத் திகழுகின்றார். இந்த ஒரு வேலை மட்டும் என்னிடத்தில் கூற வேண்டாம்” எனத் தாதா உறுதிபடக் கூறி விட்டார். தம்பன வசியன் குடும்பத்தினர், “இவன்தான் என்ன அப்படி ஒரு பெரிய தாதாவா? இதனைக் கவிழ்க்க வும், நமது சொல்படி ஆட வைக்கவும் வழியா இல்லை? “எனப் பேசிக் கொண்டனர். தங்களது சொல்படி நடக்கும் ஒரு வீட்டில் அலுவலகம் திறக்க உதவியும் செய்தனர். அது கந்து வட்டிக் கடை மற்றும் கட்சி அலுவலகம் எனச் சிறப்புடன் கொண்டாடிய மக்கள் போட்டி போட்டிக் கொண்டு வட்டிக்கும் பணம் பெற்று தாராளமாகச் செலவுகள் செய்தனர். மாதவட்டியை ஒழுங்காகத் தராதவர்கள் தர்மஅடி பெற்றுப் புண்ணியம் அடைந்தனர். அதற்கென ஒரு கும்பல் தர்மஅடியிடத் தயாராக இருந்தது. அந்த திடீர்த் தலைவருக்குத் திருமணமாகிக் குழந்தைகளும் பிறந்து, பள்ளிக் கூடம் சென்று கொண்டிருந்தனர். அவரது பெண்மோக சபல புத்தியை மோப்பம் பிடித்து __ விட்ட தம்பன வசியனின் கூட்டம், அதற்கான ஏற்பாடுகளைச் சரிவரச் செய்தனர். அலுவலகத்தை வாடகைக்கு விட்ட குடும்பத்தி னர் சரியான மலை விழுங்கி களாக இருந்ததால் அவர்கள் வசம் வீழ்ந்து பட்டார் தாதா அவர்கள். பிறகு என்ன நடந்ததோ நாமறியோம். நமது சுவாமி அவர்களின் வீட்டின் முன்பாக நின்று தள்ளாடியபடி வசவு வார்த்தைகளைக் கூடை கூடையாகக் கொட்டிக் கொண்டிருந்தார். “ஊரைவிட்டுப் போய்விடு, இல்லை என்றால் நடப்பதே வேறு” என்ற எச்சரிக்கையை விடுத்தார். சுவாமி எங்கு தான் போவார்? சத்தியத்தில், தர்மத்தில் நம்பிக்கை கொண்ட சுவாமி, “அவருக்கு நல்ல புத்தியைக் கொடு இறைவா ” என்று வேண்டியபடியே அவரைச் சந்திக்கப் போனார். சுவாமியைக் கண்டதும் அவர் தனது கோஷ்டி களுடன் புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இப்படியான செயல் பலதடவைகள் நடை பெற்றது. எப்படியாவது இந்த சுவாமியை ஊர்ப் பொது மக்கள் முன்னிலையில் தனது காலில்
விழச்செய்து விடவேண்டும் என்று உள்ளூர் கருவிக் கொண்டு நமது சுவாமியின் சபரிமலை யாத்திரை செல்லும் நேரத்தில் பத்து ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை கொண்டு வந்தார். பிள்ளையார் கோயில் முன்பாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு உள்ளூர் ஐயப்ப சுவாமிகளைக் கூப்பிட்டு பத்து ரூபாயைத் தந்து யார் காலில் வந்து விழுந்தாலும் ஆசி வழங்கினார்
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.