தீமையின் செயல் இதுதானா?

226

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

24•07•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(389) மனிதனே புனிதன் —
தீமையின் செயல் இதுதானா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தியான சக்தியைத் தவறான வழிகளுக்குப் பிரயோகப் படுத்தும் அநேக நபர்களைச் சந்தித்திருக்கிறோம். நிச்சயமாக அவர்கள் இறையருளால் சபிக்கப் பட்டவர்கள் என்று உறுதியாகக் கூறலாம். இவர்கள் இடம் ஒரு சந்தோஷமான விஷயத்தைப் கூறினால், அவர்கள் மனம் சந்தோஷம் கொள்ளாது. வெளியே மகிழ்ச்சி கொள்வதைப் போல இருக்கும். ஆனால் அகம் வெறுப்பதை அவர்கள் முகம் காட்டிக் கொடுத்து விடும். நாம் சொன்ன சந்தோஷமான செய்தியை அது நடைபெறக் கூடாது என அவர்கள் மனம் அப்போதே ஜெபம் செய்யத் துவங்கி விடும். இப்படிப் பட்டவர்களிடம் கூறி நாம் தோல்வியை அடைவதைக் காட்டிலும், இறைவனிடம் நன்றி கூறிப் பிரார்த்தனை செய்து இருந்தால் எவ்வளவோ நன்மை களை அடைய முடியும். துஷ்ட்டரைக் கண்டால் தூர விலகு என்பதை மறந்தும் இருந்து விடக் கூடாது. எந்த நல்ல செய்தியையும் தீமையாளர்களிடம் கூறி விட எண்ணாதீர்கள். மனம் எதிர்மறையாக இருப்பவர்களால் தியான சக்தியைத் தவறாக உபயோகித்து வரும் தீமையாளர் களால் பிறருக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. பிறருக்குத் சொந்தமான பொருட்களை, உடைமைகளை அல்லது அடுத்தவர் சொத்துக்களைத் தான் அடைய வேண்டும் என்ற மண் ஆசை இவர்களிடம் இருப்பதைப் பிறர் அறியவே முடியாது.

மற்றவர்களிடம் இருந்து நன்மைகளை, உதவிகளைச் பெறும் இவர்கள், தனக்கு உதவி செய்தவர்களுக்கு ஏதேனும் சில கெடுதல்களைத்தான் மறை முகமாகச் ஜெபத்தில் செய்து வருவர். தன்னை மற்றவர்கள் மரியாதை செய்து பணிந்து வழிபட வேண்டும் என எண்ணம் கொள்வார்கள். இவர்களுக்குப் பிறர் மரியாதை செய்யத் தவறினாலோ, இவர்கள் பேச்சைக் கேட்க மறுத்து விட்டாலோ அல்லது இவர்களின் செய்கையைத் தவறு என்று எடுத்துக் கூறிவிட்டாலோ, அவ்வளவு தான். உடனே தனது பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளாதவன் வாழ்வு அழிந்து போக வேண்டும் என்று ஜெபம் செய்திடுவர். தனது சக்தி இழப்பாவதை அறிந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் கெடுதல் களையே எண்ணிச் செயற்படு வார்கள். எந்தக் காலத்திலும் யாராலும், எந்த சக்தியாலும் இவர்களைத் திருத்தவே முடியாது. காரணம் இவர்கள் இறைவனால் தண்டிக்கப்பட்ட வர்கள் என்பதை அறிந்து கொண்டால், நாமும் இவர்களை வெறுக்காமல் விலகிக் கொண்டு விடுவோம். சற்குருநாதர் இதனை மனம்கெட்ட சந்திர தோஷம் என்பார். இதற்கும் பரிகாரம் உள்ளது என்பார். இதற்கு “ஆகாய அமிர்த கங்கா பெளர்ணமி தீர்த்தம் ” குரு ஹோரையில் உண்டால் மனத் தெளிவு ஏற்படும்; சந்திர தோஷம் நீங்கி விடும்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்து தவயோகினி திருமதி சுந்தராம்பாள் அவர்களிடம் இருந்து நமது சுவாமிக்கு அழைப்பு வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. நமது சுவாமி அவர்களைப் பார்த்து வரச் சென்றார். ராசீபுரத்தில் இருந்து ஞானயோகினி அம்மாவின் இளைய சகோதரியும், சென்னை யில் இருந்து மூன்றாவது சகோதரியும் வந்திருந்தனர். மூன்றாவது சகோதரி பொள்ளாச்சி டவுன் போலீஸ் நிலைய வீதியில் குடியிருந்து வரும் இவர்களது கடைசி நான்காவது இளைய சகோதரி மற்றும் இவர்களின் தாயாரைக் காண வந்துஇருந்தார். சுவாமி வருவதைக் கேள்விப்பட்டு எல்லோரும் மகாலிங்கபுரத்து வீட்டில் கூடியி ருந்தனர். எல்லோருக்கும் சுவாமி அவர்களிடத்தில் அன்பும், மரியாதையும் மிகுத்திருந்தது. நமது சுவாமிக்கு நமஸ்காரம் கூற அவரும் நமஸ்கரித்தார். எல்லோரும் அமைதியாகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தனர். அவர்களுடைய தாயாரும், சென்னை சகோதரி யும் தியானம் செய்து கொண்டு இருப்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தியான நிறைவுக்குப் பிறகு தவயோகினி யம்மா அவர்களின் தாயார் நமது சுவாமி அருகே அமர்ந்து கொண்டு, “அப்பா, நாகராஜா சுவாமியே! உன்னைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டு இருக்கிறேன். எனது வைரக் கம்மல்கள் இரண்டும், வைரமூக்குத்தியும், வைர வளையல்கள் இரண்டும் காணாமல் போய் விட்டன. உனது தியானத்தில் காணாது போன எனது பொருட்களைக் கண்டு பிடித்துச் சொல்லப்பா. அதனை எப்படித் திரும்பப் பெறுவது என்பதையும் உங்கள் குருதேவரிடம் கேட்டு பதில் கூற வேண்டும் ” எனக் கேள்வி கேட்டார். சுவாமி அவர்களிடம், “நகை எப்படிக் காணாமல் போனது என்று சொல்ல முடியுமா?” எனக் கேட்டார். அதற்கு அவர், “ஏதோ சொக்குப் பொடியை என்மீது ஒரு ஆள் தூவினார். நான் ஒருவித மயக்கத்தில் அவர் பின்னால் சென்றேன். ஓரிடத்தில் நிறுத்தி எல்லா நகைகளையும் கழற்றி எடுத்துக் கொண்டார். சுய நினைவு வந்தபோது வீட்டில் இருந்தேன். வேணுகோபால சுவாமி பொள்ளாச்சி வந்தபோது அவரிடம் கேட்டேன். நகைகள் கிடைக்கும் என ஆசி கூறி உள்ளார். நீங்களும் குருதேவரக் கேட்டு வாங்கிக் கொடுக்க வேணும் அப்பா” என மீண்டும் கேட்டுக் கொண்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button