ஓம் ஸ்ரீ ஈஸ்வர மகா ஜோதியே சரணம்!
20•07•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(385) மனிதனே புனிதன் —-
குருநாதர் சந்திப்பும், கட்டளையும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அன்று அமாவாசை தினம். வீட்டில் உள்ளவர்கள் சேத்துமடையில் இருக்கும் தெய்வகுளம் காளியம்மனை தரிசிக்கச் சென்று விட்டனர். சுவாமியின் தகப்பனார் வழக்கப்படி ஆலயங்களுக்குச் செல்லும் பழக்கம் குறைவான வர் ஆத்துப்பொள்ளாச்சியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குச் சென்று விட்டார். எப்பவும் உழைப்பு, உழைப்பு இதுதான் அவரது தாரக மந்திரம். பாடுபடும் விவசாய பூமியை அவர் ஆலயமாக மதித்து வந்தார். தானே இறங்கி தோட்டத்து வேலைகளை, ஆட்களுடன் சேர்ந்து செய்வார். அவரைப் பொறுத்தவரை இரண்டு ஜாதிகள் உலகில் உள்ளது என்றும், ஒன்று உழைக்கும் ஜாதி, மறுறொன்று உழைப்பை மறந்து விட்ட ஜாதி. இதற்கெல்லாம் விளக்கம் கேட்கச் சென்றால், மண்வெட்டி யைக் கையில் கொடுத்து ஏதாவது வேலையைத் தோட்டத் தினுள் செய்து வரச் சொல்வார். உழைத்தால் தான் பசியும் ருசியை அறிந்து கொள்ளும் என்பார். ஞானத்திருமதி பொன்னம்மாள் பாட்டியும், நமது நாகராஜன் சுவாமியும் மட்டும் வீட்டில் இருந்து கொண்டு முக்கியமான நபர் வீட்டிற்கு வரும் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பாட்டி அவர்கள் பூஜை அறையில் தியானத்தில் அமர்ந்து கொண்டார். நமது சுவாமி சூரியனைப் பார்த்தபடி கிழக்கு நோக்கித் திண்ணையில் அமர்ந்து ஜெபம் செய்தபடி இருந்தார். அப்போது வீட்டினுள் இருந்து சற்குரு நாதர் நமது சுவாமியைக் கூப்பிடும் குரல் கேட்டது. வேகமாக எழுந்து வீட்டினுள்ளே சென்ற நமது நாகராஜன் சுவாமி அற்புதக் காட்சியைப் கண்டார். தியானம் செய்து கொண்டிருந்த பாட்டியை சற்குரு நாதர் வலது கையை உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார். பாட்டியின் உடலைச் சுற்றி எங்கும் தங்கநிற ஒளி பிரகாசித்துக் கொண்டி ருந்தது. குருவும், சீடனும் வீட்டின் உள்ளே இருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டனர். சற்குருநாதர் நமது சுவாமியை ஆசீர்வதித்து விட்டு வந்த விபரம் பற்றிக் கூறத் துவங்கினார்.
“மகனே நாகராஜா, முக்கியச் செய்தி இது கவனமாகக் கேள் ” எனக்கூறிவிட்டு முகத்தையே பார்த்தார். சுவாமி, ” வணக்கம் தந்தையே , கட்டளை இடுங்கள் காத்திருக்கிறேன் “என்றார்.
சற்குரு நாதர் விளக்கினார், “பவானியில் நமது பெயர்நாமப் படுத்தி தியானசங்கம் ஒன்றைச் சேலம் குமாரபாளையத்தைச சேர்ந்த தொழில் அதிபராக விளங்கும் SSM.சுப்பிரமணியம் என்பவர் துவங்கினார். நல்ல கதியில் அச்சங்கம் வளர்ந்து வந்தது. அதன் ஞானகுருவாகத் தன்னைப் பிரகடனப்படுத்திய எனது சீடன் வேணுகோபாலன் தியான சங்கத்தைக் கைவிட்டு விட்டு வெளியேறிச் சென்றார். நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்த தியான சங்கத்தலைவர் SSM தற்போது மனம் வருத்தமுற்று இருக்கிறார். அவர் உன்னை பவானி வரச்சொல்லி அழைப்பார். நீ அங்கு சென்று அவரது மனவருத்தத்தைப் போக்கி அவரைத் திரும்பவும் தியானத்தில் ஈடுபடுத்த வேண்டும். அவர் கேட்கும் கேள்விகளுக்குத் தக்கபதில் கூற வேண்டும். நீ உனது தாயார் மற்றும் பொன்னம்மா பாட்டி அவர்களின் உத்தரவைப் பெற்றுக்கொண்டு போக வேண்டும். அங்கு பவானியில் தியான சங்கக் கூட்டம் நடை பெறும். ஆனால் அவர்கள் வீட்டிற்குத்தான் உன்னை அழைத்துப் போவார்கள். அவர்கள் வீட்டில் உனக்குச் சாப்பிடப் பால் தருவார்கள். அதனை நீ பருகக் கூடாது. அப்படிப் பருகிவிட்டால் நீ ஆறு வருஷங்கள் அந்த தியான சங்கத்தில் தங்கியிருக்கும் சூழல் உருவாகி விடும்.”
“இன்னமும் கூறுகிறேன் கேள் மகனே. ஆஞ்சநேயர் தனது தோஷத்தை நீக்கிக் கொண்டிடப் பள்ளிகொண்ட நாகவனத்தில், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி தவம் புரிந்த இடம் ஒன்று உண்டு . ஸ்ரீ நாக லக்ஷ்மியின் ஆசி பெற்ற பரிகாரஸ்தலத்தை உன் வசம் ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீ அகத்தியர் மகா முனிவர் தமது ஏட்டிலும் எழுதி வைத்துள்ளார். ஆதலால் உனது பணியை அங்கு நிறைவு செய்து விட்டுக் கூடிய விரைவில் திரும்பி வந்து பரிகார ஸ்தலத்தை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவரையிலும் இந்த ரகசியத்தை வெளியிடா மல் நீ காத்து வரவேண்டும் ” என்றார். சற்குரு நாதரைப் பணிந்து நமது நாகராஜன் சுவாமி, “ஐயனே, பொருத்தருள வேண்டும். நமக்கும் ஏன் ஆஸ்ரமம் அமைக்கக்கூடாது? அதனால் பல நன்மைகள் உணடாகுமே” என்று கேட்டார். அதற்கு சற்குருநாதர், ” மகனே நாகராஜா, உன்னிடம் ஒப்புவிக்க இருக்கும் பரிகார ஸ்தலமானது புனிதம் மிகுந்தது. ஆலயம் வந்து பிரார்த்தனைகள் செய்திடும் மக்களுக்கு, நேர் மறையான எண்ணங்களில் வழிபடும் முறைகள் தான் மிகவும் அவசியமானது. அதனால் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றமும், சகல காரிய சித்திகளும் உண்டாகும். தெய்வீக சக்திகளின் நோக்கம் இந்த உலகில் ஏற்படும். கல்கி யுகம் உருவாகும் காலகட்டத் தில் நேர்மறையான எண்ணங்களே சாதிக்கும்.”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம் !
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.