தெய்வகுளம் காளியம்மன் வந்தே வந்தாள்!

0 228

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

24•07•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(21)
மனிதனே புனிதன் —
தெய்வகுளம் காளியம்மன் வந்தே வந்தாள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்களின் வரலாற்றைப் படிக்கும் அன்பர்களுக்கு அமானுஷ்யங்கள் பற்றிய குறிப்புக்கள் ஆச்சர்யமும், நம்பத்தகுந்த விஷயமாக இல்லையே என்பது போன்ற கருத்துக்கள் எழுவது வழக்கம்! சதா உலக வாழ்க்கையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கு இதனைப்பற்றிய தவறான தகவல்களால் அதீதமான கற்பனை பயத்தினை உண்டாக்கி இருப்பதும் ஒரு காரணம். ஆன்மிக நாட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இதுபற்றிய உண்மையை அறிந்தே இருப்பார்கள்.

சுவாமியின் வாழ்க்கையில் அமானுஷ்யங்கள் பெயரைச் சொல்லி ஏமாற்றி உள்ள சம்பவங்கள் அவரது குடும்பத்திலேயே நடந்தது. வைசூரி கண்டு சுவாமி எழுந்த பிறகு உள்ளூரில் உள்ள மாந்திரீக, தாந்திரீகக் குடும்பத்தினர் சுவாமியின் தாயாரிடம் வந்து உங்கள் மகனுக்கு ஏவல் செய்து உள்ளனர். நாங்கள் அதனை சரி செய்து தருகிறோம் என்று நம்பும்படியாகக் கூறினார்கள். மகனின் நலத்தில் அக்கறை இருந்ததால் சரியென தாயாரும் சம்மதித்து விட்டார்.

ஒரு அமாவாசை நாள் இரவு சடங்குக்குச் சம்பிரதாய ஆயத்தம் செய்தனர். சுவாமியின் வீட்டில் தென்புற வாசலில் கிழக்கு மேற்காக இரண்டு பலமான ஆனிகள் அடிக்கப் பட்டு, கனமான கம்பளிக் கயிறு அதில் கட்டப்பட்டது. எதிர்புறம் குடியிருக்கும் காளியம்மன் பக்தை, ஆயாம்மா வீட்டுத் திண்ணையில் காவல் யக்ஷ்ணிகள் வைத்து அவைகளின் உடலிலும் ஆனியடித்துச் சுவரில் நிறுத்தப்பட்டது. அவைகள் கத்தி அழுதன!

நிலைப்படியில் ஐந்தடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி ஆட்டு இரத்தம் கலந்த பொங்கல் பானை நிறையப் படைத்தனர்.மந்திர தந்திர குட்டிச் சாத்தான்கள் வரிசைக் கிரமமாக இருத்தி சாம்பிராணி தூபம் அடர்த்தியாகப் போட்டு பூஜையைத் துவங்கி மருளாட்டம் ஆடினர். விபூதியைக் கை கொள்ளும் அளவிற்கு எடுத்து நாலாபுறமும் வீசிவிட்டுப் பிரம்பைக் கையில் எடுத்து வனம்வாழ் மக்கள் பேசும் பாக்ஷையில் ஏதேதோ காட்டுக் கூச்சல் போட்டபடி பேயாட்டம் போட்டனர். இரத்தச் சோற்றை எங்கும் வாறிவீசி எறிந்தனர்.

நமது சுவாமியும் அவரது தூரத்து உறவினர் அண்ணன் திரு.நடராஜா அவர்களும் அமைதியாக வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வாசலில் கட்டப்பட்ட கம்பளிக் கயிறு மேலும் கீழுமாக உயரவும் தாழவுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கம்பளிக் கயிறு படார் என்ற சத்தத்துடன் உடைந்தது. மாந்திரீகனும் தனது ஆட்டபாட்டத்தைச் சட்டென நிறுத்திக் கொண்டு விட்டான். அண்ணன் திரு. நடராஜா அவர்களின் உடலுக்குள் தெய்வகுளக் காளியம்மன் சன்னத்தமாகப் பிரவேசம் ஆனார்கள். வீறுகொண்டு எழுந்தவர் மாந்திரீகர்கள் மீது பாய்ந்து விட்டார். அவன்களின் பிரம்பு பிடுங்கப்பட்டு திருச்சாத்து பூஜை ஆவேசமாக நடக்க, அவர்கள் அலறிய அலறல் சப்தம் கேட்டு ஊரே திரண்டு விட்டது.

காளியம்மனும் தீர்த்தம் முத்தரித்து அவர்கள் மீது வீ சிய போது ஆடாமல் அசையாமல் முன்பற்களைக் காட்டியபடி கொலுபொம்மை போல அப்படியே நின்று விட்டார்கள். ஊர் மக்களும் சும்மாயிராமல் தங்கள் பங்குக்கும் தரும அடி கொடுத்து கட்டிப் போட்டனர். காளியம்மன் கொடுத்த அடியில் முன்பற்கள் இரண்டும் உதிர்ந்து விட்டது. அவைகள் இல்லாததால் இந்தத் தாந்திரீகத் தொழிலை இனி விட்டு விட வேண்டியது தான்!

தெய்வகுளக் காளியம்மனின் வாக்கு உரத்த குரலில் வெளிப்பட்டது. “இவன் எனது குழந்தை. தெய்வ பாதுகாப்பில் உள்ளவன். இவன் மேல் தீமை சக்தியை ஏவி விடாதே. ஜாக்கிரதை!” அனைவரும் விதிர்விதிர்த்துப் போனார்கள். தனது கையை பற்களால் கடித்து இரத்தத்தை உறிஞ்சி குட்டிச்சாத்தான்களின் மீது உமிழ்ந்து,” ஹூம்! குடித்து விட்டு இடத்தைக் காலிசெய்து விட்டு ஓடிப் போங்கள் ” என்ற கர்ஜனைக்குரல் கேட்டு, மாநீதிரீகன் மண்டி இட்டுத் தாயே என்னை மன்னித்து அனுகிரகிக்க வேண்டும் அம்மா என்று கதறி அழுதான். மஞ்சள் நீர் வேப்பிலையுடன் சாப்பிட்டு நடராஜா சாந்தம் அடைந்தார். ஊர் மக்களும் இவ்வளவு உடல் மெலிந்து இருக்கும் நடராஜாவிற்கு அத்தனை பலம் எங்கிருந்து வந்ததோ? எனப் பேசியபடியே போனார்கள்.

மன்னிக்கப்பட்டு மனம் திருந்தி நல்லவனாக உழைத்து வாழ்ந்து வந்தான். சுவாமி யிடம் கடைசிவரை அன்புள்ளத்துடன் நடந்து நிறைய உதவிகளும் பெற்று மகிழ்ச்சியுடன் பழகி வரலானான். ஒருமுறை சுவாமி அவர்களிடம் இந்த தாந்திரீகத் துறையில் உங்கள் அனுபவங்கள் என்ன? என்று கேட்டார். சிரித்துக் கொண்டே அவர்களும் எங்களிடம் ஏமாந்தவர்கள் அநேகம் பேர். பயமுறுத்தி மிரட்டிப் பணம் பெறுவோம். பணப்பத்திர ஒப்பந்தம் கூட செய்து மாதாமாதம் எங்களுக்கு பணம் கப்பம் கட்டும்படி செய்து விடுவோம்.உங்களிடம் மட்டுமே பலிக்கவில்லை. பல்போனதே மிச்சம் என சுவாமியுடன் சேர்ந்து அவர்களும் மனம் விட்டுச் சிரித்தார்கள்.
(இன்னும் வரும் )

நன்றி! வணக்கம்!

–ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன் மதுரை மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button