அம்மை நோயின் தாக்கம்.

0 161

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

22•07•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(19) மனிதனே புனிதன் —
அம்மை நோயின் தாக்கம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தோப்பு மலையில் தாடகையின் சிறிய கோயிலையும், விஸ்வாமித்திரர் யாகசாலையையும் கண்டு வர சுவாமிக்கு ஆவல். ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயிலில் வைத்து ஒரு வயோதிகக் காட்டு வாசியின் அறிமுகம் நமது சுவாமிக்குக் கிடைத்தது.

நமது சுவாமி அவர்கள் தியானம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு மெல்ல அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.சுவாமி எழுந்து செல்லும் இடங்களில் அவர் பார்வையில் அடிக்கடி தென்பட என்ன விஷயம் என்று கேட்டு வைத்தார். தன் பெயர் மாயன் என்றும் தானும் தவத்தில் இருப்பதாகவும், அடுத்த தடவை வரும் போது இருவரும் மலையின் உச்சியில் உள்ள தோப்பிற்குச் சென்று வரலாம் என்று கூறினார். இதைக் கேட்டதும் இறைவனுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மீண்டும் அவரிடம் என்னை எதற்காக இங்கு அழைக்கின்றீர்கள் எனவும், உங்களால் எனக்கு ஒரு சக்தி கிடைக்கும். தீயசக்தி என்னை அங்கு அண்டவிடாமல் செய்கிறது. சுவாமி வந்தால் எனக்கும் நன்மை, உங்களுக்கும் தெய்வத் தொடர்புகள் கிடைக்கும் என்றதும் சற்று திகைத்துத்தான் போனார். ஆகட்டும் வருகிறேன் என்றார். சுவாமி உடன் வந்த பக்தர்கள் திரும்பும்போது அதிக உற்சாகத்தில் இருந்தனர். அதற்குக் காரணமும் அன்று புரியவில்லை.

மாயனிடம் வந்து விடுகிறேன் என்பவர் பல மாதங்கள் தோப்பு மலைக்குச் செல்ல இயலவில்லை. காரணம் நமது சுவாமிக்கு கடுமையான ஜூரமும் அதன் பிறகு வைசூரியும் கண்டது. அம்மை நோய் இவருக்கு வந்தது அசாதாரணமானது. வாழை இலையின்மீது ஆமணக்கு எண்ணெய் ஊற்றித்தான் படுக்கமுடியும். உடல் எங்கும் ஊதிய பலூன்கள் போன்று நீர் நிறைந்த பைகள் தொங்கிக் கொண்டிருக்கும். பைகள் உடைந்து நீர் வெளிப்படும் போது எரிச்சல் கடுமையாக இருக்கும். வேப்பிலையில் காற்று விசிறிக் கொண்டே இருக்க வேண்டும். படுத்த படுக்கையாக இறையருள் வேண்டிப் பிரார்த்தனையை சுவாமி விடாமல் செய்து வந்தார்கள்.

சுவாமியின் தாயாருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. மூன்றாவது வகுப்பு படிக்கும் போது நீண்ட தலைமுடியுடன் சுவாமி இருந்தார். பள்ளிக் குழந்தைகள் அந்தப் பின்னலைப் பிடித்து இழுத்து சடையாண்டி என்று கேலி செய்வார்கள். அதைப் பாட்டியிடம் கூறினார்.

பிறகு நாகூர் சென்று மொட்டை இட்டு முடிக்காணிக்கை செலுத்தி நாகூர் ராஜா என்று அவுலியா முன்பு பெயரை வைத்து தனது மாமனார் திரு. பழனியப்பன் வேண்டுதலை நிறைவேற்றி விட்டோம்.ஆனாலும் இவன் அடிக்கடி உடல் ரீதியான துன்பங்களை அனுபவிக்கின்றானே! அம்மா தாயே! சூலக்கல் மாரியம்மா இவனைக் காப்பாற்றிக் கொடு தாயே! நீ மகராஜியா நல்லா இருக்கணும் மாரித்தாயே! என அவர் மனம் சொல்லியபடி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.

சுவாமியைச் சிறு பிள்ளை முதல் வளர்த்து வந்த இஸ்லாம் குடும்பத்தினர் கண்ணீருடன் அமர்ந்து சுவாமிக்கு ஆறுதல் கூறிக் கொண்டும் தாகத்திற்கு இளநீரில் பனங்கற்கண்டு இட்டுப் பருகக் கொடுத்தும் கண்ணிமை போலப் பாதுகாத்து வந்தனர். இரவும் பகலும் ஆட்கள் மாறி மாறிக் கவனித்து ராஜ உபச்சாரங்கள் செய்து வந்தனர்.

மிலிட்டரியில் இருந்து ஓய்வு பெற்ற திரு.அபதுல்ரஹ்மான் அவர்களின் தாயார் கொடுவாயூர்க்காரம்மா என்று ஊர் மக்களால் அழைக்கப்பட்ட அன்பு உள்ளம் கொண்ட பெருமாட்டி, “தனது உயிரைப் பெற்றுக்கொண்டு சுவாமியின் உயிரைத் தந்து விட வேண்டும் ” என்ற பிரார்த்தனை செய்ததைக் கண்டு எல்லோரும் அதிர்ந்து போயினர்.
அன்னாரின் மருமகள் ஜெமீலக்கா, குழந்தைகள் பேறு பார்க்கும் மருத்துவ அப்பத்தா,
தெய்வகுளம் காளியம்மன் பக்தை ஆயாஅம்மா, உசுனத்தா பாயின் தாயார் ஜைனம்மாபீவி எல்லோரும் சுவாமி வீட்டில் தங்கி கவனித்து உதவிகள் செய்தனர்.

எப்படியும் சுவாமி பிழைத்து எழுவார்கள் என்று கிராமத்தில் கிருஸ்த்தவ நண்பர்கள், சுவாமியின் மீது அக்கறையுடன் ஜெபம் செய்தனர்.

இந்த அம்மை போட்டவர்கள் பெரும்பாலும் இறந்து போயிருப்பதால், உள்ளூர் மக்கள் இவருக்காக வேண்டிக் கொண்டதில் அர்த்தம் இருக்கிறது. தெய்வ நம்பிக்கை, பாசமுள்ளவர்கள் பிரார்த்தனை எல்லாம் சேர சுவாமி உடல்நலம் பெற்று எழுந்தார்.

தன்னை வளர்த்து வரும் கொடுவாய்க்காரப் பாட்டியிடம் எதற்காக இப்படி ஒரு பிரார்த்தனை செய்தீர்கள் என்று கண்ணீர் விட்டுக் கேட்டார். மகனே ஆண்டவன் உனக்கு நன்மைகள் செய்யட்டும் என்று வேண்டிக் கொண்டார்.

அந்த வாரத்திலேயே வெறிபிடித்த நாய் ஒன்று அந்தப் பாட்டியைக் கடித்தது. தடுக்கச் சென்ற சுவாமியின் சகோதரி விஜயலக்ஷ்மியையும் கடித்துக் குதறியது.

சுவாமியின் தகப்பனார் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு அழைக்க கொடுவாய்பாட்டி ஏற்க மறுத்து விட்டார். யார் சொல்லியும் கேட்காமல், மருத்துவம் செய்து கொள்ளாமலேயே அன்னார் உயிரை இறைவனிடம் ஒப்படைத்தார்.

சுவாமியின் தங்கை மருத்துவ சிகிச்சையில் பிழைத்தார்.

சுவாமியை கிராமத்தினர் இந்தளவிற்கு நேசித்த காரணம், அவரின் அன்பும், கருணை மிகுந்த உள்ளமும் தான்.

(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button