ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
16•04•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(290) மனிதனே புனிதன் —
சுவாமியை சோதித்து அறியலாம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நம்முடைய எண்ணங்களில் பகவான் சிந்தனையைச் செலுத்தி அமைதியான மனதுடன் அமர்ந்திருக்கும் போது மூலாதாரத்தில் மூன்று தலையுடைய நரம்புகள் சூலம் ஒன்றின் தோற்றத்தை ஒத்து இருக்கும். அந்தச் சூலம் எதையோ சம்ஹாரம் செய்வது மோன்று, தலைகீழாகக் காட்சி தரும். தியானம் செய்பவர் தனது எண்ணத்தைப் புருவ மத்தியில் செலுத்தும் போது, சூலாயுதமோ நிமிர்ந்து பிரகாசம் கொண்டது போல் விளங்கும். மேலும் தவம் செய்யச் செய்ய சூலம் போன்ற மூன்று ஒளிப்பிரவாகம் சிரசை நோக்கிச் செல்வது போன்று, உணர்வு உண்டாக்கும். இம் மூன்று வழிகளில் ஒன்று வலக்கண் வழியே சூரியன் சக்தியாக வெளிப்படும். மற்றொன்று இடக்கண் வழியே சந்திரன் சக்தியாகத் தோற்றம் தரும். பிரிதொன்று பிடரியின் வழியே ஜீவாத்ம சக்தியாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இச்சை, கிரியை, ஞானமாகிய முத்தொழில் செயலுற ஊக்கமும், ஆக்கமும் தருவதாக விளங்கும். சூலம் போன்ற தோற்றம் கீழ் நோக்குவதாக மனதில் எண்ணி “ஹூம்” என்னும் சப்தத்தை தொண்டைப் பகுதியில் உண்டு பண்ணினால் தீமை சக்திகளை அருகில் வரவிடாமல் தடுக்க முடியும் என அனுபவ ஞானத்தால் உணர்த்திச் சென்றனர்.
ஸ்ரீ ஈஸ்வர நீதியைச் சிந்தித்த படியே அமைதியாக அமர்ந்து இருந்த நமது சுவாமியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கிய படியே திரு.R.B யைப் போன்ற தோற்றமும், சிரித்த முகமும், உள்ளத்தில் ஆர்வமும் உடைய டாக்டர் திரு.R.கிருஷ்ணன் அவர்கள் வீட்டினுள் வந்து கொண்டு இருந்தார். கைகால்கள் முகம் அலம்பிக் கொண்டு தனது அன்பான, ஆர்வமுடன் கூடிய ஞானப் பேச்சைத் துவங்கினார். சுவாமி அவர்கள் குருநாதரிடம் கற்றுக் கொண்ட பாடங்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்படிபட்ட பாடங்களைப் பொக்கிஷம் போல் பாதுகாக்க வேண்டும் என்ற தனது கருத்தை டாக்டர் கூறினார். ஞானி ராமநாதன் ஐயா அவர்களுக்குப் பரம திருப்தி. சுவாமிக்கு மதியம் உணவு உண்ணக் கொடுத்து உபசரித்தார்கள். டாக்டரின் துணைவியார் அவர்களும் தவம் செய்து சக்தி பெற்றவர். ஞான குருவின் உபதேச மந்திரப் பொருளை நன்கு உணர்ந்து கடைப் பிடித்து வந்தவர். இவர்களது வாழ்க்கையில் ஓர் கடும் சோதனைக்கு ஆளாகி, அதனையும் வென்று வந்தவர்கள். இவர்கள் வீட்டில் கொள்ளையிட பலமாதங்களாகப் போக்கு, வரவைக் கவனித்து வந்த கள்வன் ஒருவன், ஓர் நாள் அவனது எண்ணம் நிறைவேற்ற தகுந்த தருணம் வாய்ந்த சென்று எண்ணினான். டாக்டர் திரு.R.கிருஷ்ணன் அவர்கள் வெளியே சென்றிருந்த நேரம் அது. மக்கள் நடமாட்டம் மிகுந்த காலனிப் பகுதி அது. டாக்டரின் துணைவியார் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தார். பூட்டு வியாபாரியின் வேடத்தில் நிறைய சாவிகளை ஓர் வளையத்தில் கோர்த்து எடுத்து வந்தான். சமயத்தில் கனமான சாவிக் கொத்து ஓர் பலம் வாய்ந்த ஆயுதமாகவும், தடுப்பவரைத் தாக்கிட, அடித்து வீழ்த்திடப் போதுமானதாக அது இருந்தது. மெல்ல மெல்ல வீட்டின் வாசலுக்கு வந்து, ஆள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்து கொண்டு, சந்தடி சப்தமின்றி பூனையைப் போல வீட்டினுள் நுழைந்து விட்டான்.
பொருள் அகப்படா விட்டால் ஆளைக் கொன்று விடும் நோக்கம் அவனுக்கு இருந்துள்ளது. சமையல் அறைப் பக்கமும் சென்று விட்டான். இறை ஜெபத்துடன் வாழ்ந்த அந்த அம்மையாருக்கு உள்ளுணர்வு செயல்படத் துவங்கி விட்டது. ஏதோ ஒரு துன்பம் தன்னை நெருங்கி வருவதாக உணர்ந்து கொண்டு விட்டார். அதனை விரட்டிடும் ஜெபத்தையும், குரு முகமாக மனோ தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டார். தான் இருக்கும் அறைக்குள் யாரோ மற்றொருவர் இருப்பதாகவும், அவர் தனக்குக் கேடுவிளைவிக்க வந்திருப்பதாகவும், ஐம்புலன் களிலும் எச்சரிக்கை உணர்வை யும், பாதுகாப்பையும் தனக்குத் தந்து கொண்டு இருப்பதாகவும் அவருள் அந்தராத்மா பேசியது. வந்த கள்வன் டாக்டரின் துணைவியார் எச்சரிக்கை அடைந்து விட்டதை அறிந்து கொண்டு, தனது இடது கையில் சாவிகள் நிறைந்த இரும்பு வளையத்தையும், வலது கரத்தில் நீளமான கத்தியையும் வைத்து, கொலை பாதகம் செய்ய வும் துணிந்து விட்டான். தான் நிற்கும் இடத்தில் உள்ள சுவற்றில் ஒர் ஆளின் உருவம் நிழலாடுவதை கண்டு, சுவற்றின் நிழலை அனுமானித்தார். உருவம் பின்புறம் நெருங்கி கத்தியை உயர்த்துவதும் சுவற்றின் நிழலில் புரிந்தது. அவருக்கு உடம்பில் திடீரென ஓர் ஆவேசம் உண்டானது. திடீரெனத் திரும்பி ஆவேசமாகக் கத்தியதும் கள்ளன் வெல வெலத்துப் போனான். அவனது இரண்டு கரங்களையும் பலமாகப் பற்றிக் கொண்டு ஆவேசமாகக் குரலெடுத்துக் கத்தினார். அவன் பயந்து நடுநடுங்கினான்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.