சுவாமி வாங்கிக் கட்டிக் கொண்டார்

243

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

09•04•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(283) மனிதனே புனிதன் —
சுவாமி வாங்கிக் கட்டிக் கொண்டார்
•••••••••••••••••••••••••••••••••••••••••••
சுவாமியின் தகப்பனார் திரு. APM சாமி அவர்களுக்குப் புதுப் புதுத் தொழில் துவங்குவதற்கு ஊக்கம் தரப் புதுப் புது நண்பர்கள் உண்டாகி இருந்தனர். கோட்டூர் அருகே உள்ள அங்கலக் குறிச்சியில் ஒருவரும், ஆனைமலை அருகில் உள்ள சோமந்துரைச் சித்தூரைச் சேர்ந்த மற்றொருவரும் சேர்ந்து, மூவருமாகக் கூட்டுத் தொழில் துவங்கினர். நிலக்கடலைக்காய் கொள்முதல் செய்து ஈரோடு முருகன் மில்லில் கடலை எண்ணை எடுப்பதற்காக ஆரம்பத் தொழில் இருந்தது. நல்ல படியாகத்தான் நடந்து வந்தது. அப்புறமாக அந்நாளைய அரசாங்கம் கள்ளுக் கடை களையும், சாராயக்கடை களையும் ஏலம் எடுக்கும் முறையை அறிவித்தது. தொகையை விண்ணப்பத்தில் கூறிப்பிட்டு ஏலம் கோருபவரின் விலாசத்துடன் அளிக்கக் கோரியிருந்தது. பொள்ளாச்சித் தாலூக்கா தாசில்தார் அலுவலகத்தில் இது நடை பெற்றது. ஏலம் கோரும் முதலாளிகள் முதல் நாள் தனியே கூட்டம் போட்டு, அவரவர்களின் சொந்த ஊர்க் கடைகளை ஏலம் எடுப்பது என முடிவு செய்து கொள்வார்கள். இதனால் ஏலம் கோரும் போட்டிகள் இல்லாமலே அனைவருக்கும் கடைகள் கிடைத்தன. உள்ளூர் போட்டியாளர்கள் இருந்து விட்டாலோ ஏலம் கேட்கும் தொகை மிகவும் அதிகமானால் லாபம் குறையும் எனக்கருதி வியாபாரிகளின் கூட்டம் நடைபெற்றது. திரு.APM. சாமி அவர்களும், கூட்டாளிகளுக்கும் சில ஊர்க்கடைகள் கிடைத்தன. அதில் அவரவர்களின் சொந்த ஊரிலேயே கிடைத்து விட்டது. இதற்குப் பெரிய வியாபாரிகளின் தயவு வேண்டும். தடுத்தும் கேளாத தகப்பனாருடன் நமது சுவாமி பேசுவதையே நிறுத்திக் கொண்டார்.இதில் விஷேசமே தகப்பனாருக்குத் தனது பிள்ளை களிடம் தான் பேசுவதற்கே நேரமில்லாமல் போனது தான்.

முதல் நாள் கள்ளுக்கடைத் திறப்பு விழாவை அதன் ரசிகப் பெரு மக்கள், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமுடன் நடத்திக் கொண்டிருந்தனர். நமது சுவாமி அவர்களிடம் நமக்குப் பிடித்ததே ஒளிவு மறைவு இன்றித் தனது உள்ளத்தைத் திறந்து பேசும் அவரின் உண்மையான குணங்கள் என்று நான் கூறுவேன். சுவாமி அவர்கள் வீட்டு வாசலில் இருந்து பார்த்தால் அங்கு நிகழும் சம்பவங்களை நன்றாகப் பார்க்க முடியும். நமது சுவாமி அந்த கிராமத்தைவிட்டுப் போய்விடும் முடிவிற்கே வந்து விட்டார். அந்த நேரத்தில் பொள்ளாச்சி, தென் வடல் ராஜா மில் ரோட்டில் இருந்து, திரு.APM சாமி அவர்களை தன்னுடன் அழைத்துச் செல்ல ஒருவர் வந்து நமது சுவாமி அவர்களிடம் விபரம் கூறினார். ” தன்னுடன் முதலில் உங்கப்பனை அனுப்பி வை” என்று ஏகவசனத்தில் ஆரம்பித்தார். தகப்பனார் ஊரில் இல்லை, இனி என்ன செய்வது? என்று நினைத்தபடி இருந்தார். இடத்தைச சொல்லி விட்டு அவர் தான் வந்ததற்குப் பேருந்து சப்தம் தரவேண்டும் என்றார். அவரை அனுப்பிய பிறகு சுவாமி வளந்தாயாமரம் என்ற இடத்தில் இருந்து வரும் 3- ம் நெ. பேருந்தில் புறப்பட்டுப் போனார்.
திருவள்ளுவர் திடலில் இறங்கி தென்வடல் ராஜா மில் ரோட்டில் போனவர், அங்கே பொட்டல் புதூரைச் சேர்ந்த துணி வியாபாரிகள் தமது வாடிக்கையான வியாபாரத்தைத் துவங்கி இருப்பதைப் பாராத்தபடி போனார். வட்டிக்கடை கிழக்கு திசை நோக்கியிருந்தது. சுவாமி அவர்கள் வட்டிக்கடைக்குள் நுழைவதைப் பார்த்து விட்டு வியாபாரிகள் மெல்ல மெல்லத் வட்டிக்கடை வாசலுக்கு வந்தனர். வட்டிக்கடை அதிபர் ஏக கடுப்பாகி இருந்தார். கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்த வியாபாரிகளை விரட்டினார். அவர்கள் பணிய வில்லை. ” எதுக்கு எங்கள வெரட்டற? இந்த வீதி உனக்குச் சொந்தமா?” எனக் கோபமாகக் கேட்டதும் அதிபர் பணிந்தார். தனது எல்லாக் கோபத்தையும் நமது சுவாமி மீது காட்டினார்.
ஏக வசனத்தில் ஆரம்பித்தார். “ஏனய்யா, உங்கப்பன் பணம் புத்தாயிரம் வாங்கி வருஷம் இரண்டாகிறது. கடந்த இரண்டு மாத காலமா எனக்கு வட்டிப் பணம் வந்து சேரவில்லை. நீங்கள் சோத்துல உப்புப் போட்டுத் தின்னுகிறீர்களா? இல்லையா?” என்று கேட்டதும், பொட்டல் புதூர் வியாபாரி களுக்குக் கோபம் வந்து விட்டது.

 

அவர்களின் தலைவனாக இருப்பவர், “டேய் அவுக, ஊருல மரியாதப் பட்டவக! நாக்கு மேல பல்லப்போட்டு சகட்டு மேனிக்குப் பேசாத. ஊர்ல ஜனங்க அவரைத் தெய்வம் போல மதிக்குது. உம் பிசுக்கோத்துப் பணம் பத்தாயிரம் நாங்க கட்டறமடா . அவர ஏதாச்சும் பேசனே, மவனே உனக்குக் கேடுதாண்டா” என்று எகிறினார். அவ்வளவுதான் அவரும் வாயடங்கிப் போனார். அந்தக் கடைக்காரரைப் பார்த்து சுவாமி, “ஐயா, நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் யாருக்கும் பணம் தந்தீர்களோ, அவர் பெரிய வியாபாரி ஆகி விட்டார். பெற்ற கடன் தீர்க்கப் பணத்தை நானே கட்டி விடுகிறேன். நீங்கள் கால அவகாசம் எனக்குத் தர வேண்டுகிறேன். வணக்கம் ” என்று கூறிவிட்டு கண்கலங்க வெளியே வந்தார்.
(வரலாறு வரும்)
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button