தெய்வங்களின் பாஷைகள்.

248

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

04•04•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(278) மனிதனே புனிதன் —
தெய்வங்களின் பாஷைகள்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு நல்ல குருநாதனிடம் சீடன் ஒருவன் வந்து சேர்ந்தான். குரு நாதன் நல்ல நெறிகளை அவனுக்குப் போதித்தார். அத்துடன்,” தான் போதித்த நன்நெறிகளைக் காப்பாற்றிக் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் மனதினைக் காக்க வேண்டும்” என்றார். சீடனுக்குச் சந்தேகம் தோன்றியது. குருவிடம் கேட்டான், “நான் நெறி தவறாமல் இருக்க என்னென்ன கடைப்பிடிக்க வேண்டும்?” என்றான். குருநாதன் பதில் கூறினார், “மகனே முதலில் சுயகட்டுப் பாடுடன் மனதை வைத்துக் கொள். சந்தேகம் கொள்வதை நிறுத்தி விடு. சுய லாபம் கருதியோ, வேறு எதற்காகவோ பொய் உரைக்கும் கருத்துக்களை அறவே ஒழித்து விட வேண்டும். பிறகு உலகினுக்கு ஏதாவது சேவைகள் செய்ய வேண்டும் என்பதில் சீடன் தனது எண்ணத்தைச் செலுத்த வேண்டும். தனக்குச் சொந்த மில்லாத எந்தப் பொருளின் மீதும் விருப்பம் கொள்ளக் கூடாது. மற்றவர்களிடம் இருக்கும் பொருளைக் கண்டு வெறுப்பும் கொள்ளக் கூடாது. மனக்குறையுடன் எப்போதும் இருத்தல் தகாது. இவ்வுலக வாழ்வில் எது நடைபெற்றாலும் அதனால் மனம் பாதிப்படையக் கூடாது. இத்தகைய குணங்களை வளர்ச்சி பெறச் செய்பவன் எவனோ, அவனே அறிவாளியும் நல்ல சீடனுமாவான். ஆகவே ஒழுங்குடன் நடந்து கொள்வாய் ” என்றார்.

உடனே புதிய சீடனானவன் தனது குருவிடம் ,” ஒழுங்கு என்று எதனைக் குறிப்பிடு கின்றீர்கள்? ” என்றான். குருநாதன் சீடனிடம், ” அப்பா, கடவுள் இந்த உலகை எப்படிப் படைத்திருக்கின்றார்? என்பதைக் கவனித்தாயா? அனைத்தும் ஒழுங்குடன் படைக்கப்பட்டு, அவை அனைத்தும் ஒழுங்கின் படி நடைபெற்று இறைவன் ஆணையை மீறாமல், தர்மம் தவறாமல் நடந்து கொள்கின்றன. தர்மம் செய்வது அது தனக்கே செய்து கொள்ளும் உபகாரமாகும். இன்னுமா விளக்கவில்லை? ” என்றார்.
புதிய சீடப்பிள்ளை, ” பிறனுக்குச் செய்த தர்மம் நமக்கு உபகாரமா? அது நம்மைக் காப்பது எப்படி? ” என்றான். குருநாதர் சிரித்துக் கொண்டார்.
” நம்முடைய நற் குணங்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால், நாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதால் மட்டுமே அது சாத்தியம். அப்படியானால் நாம் நமக்கே செய்து கொள்ளும் உபகாரம் அதுவே ஆகும். இந்த உதவிகளைச் சலிப்போ, சங்கடமோ இன்றிச் செய்வதனால் அது நமக்கு நமது நல்ல குணங்களைக் காப்பாற்றித் தரும். இதுவே நாம் பெறும் உபகாரம். இந்த ஸ்ரீ ஈஸ்வர நீதியை மறவாமல் நாம் வாழ வேண்டும் ” என்று நிறைவு செய்த சற்குருவின் பாதார விந்தங்களைச் சீடன் பணிந்தான்.

குருநாதன் எப்போதும் சீடனின் நலத்தில் அக்கறையுடன் இருப்பார். அதனை உண்மைச் சீடன் புரிந்து கொண்டு நடப்பதை சற்குருவும் அறிவார். கோகுல் அவர்கள் குருநாதர் கட்டளைப் படி மயிலிறகும், மசியும் கொண்டு வந்தார். பெரிய நோட்டுப் புத்தகம் அங்கேயிருக்க அதனை எடுத்துக் கொள்ளச் சொன்னார். முதலில் தியானம் செய்யக் கூறினார். எல்லோரும் சிறிது நேரம் மெளனமாக அமர்ந்து இருந்தார்கள். மயிலிறகில் மசியைத் தொட்டுக் ஸ்ரீ கணபதியை சிந்திக்கச் சொல்லி, மயிலிறகால் நோட்டில் எழுதச் செய்தார். ஒரு இடத்தில் துவங்கிக் கடைசி வரை கையை எடுக்காமல் அட்சரம் எழுதப்பட்டது. இது ஸ்ரீ கணபதி யின் பரிபாசை என்று சொன்னார். அதனைப் போன்றே ஸ்ரீ முருகன், ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் போன்ற தெய்வீக சக்திகள் அனைவருக்கும் பரிபாசை எழுத்துக்கள் உண்டு. இவைகள் அனைத்தும் தேவபாஷைகள் என்றார்.

கோகுல் அவர்களுக்கு ஒவ்வொரு தேவதா அக்ஷ்சரங்களையும் சற்குரு நாதர் காண்பிக்க, அதனைப் பார்த்து நோட்டுப் புத்தகத்தில் எழுதத் துவங்கி சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் தெய்வங்களின் பாதைகள் அநேகம் எழுதப்பட்டது. நமது சுவாமியும் சின்ன மகன் மெளலீஸ்வரரும் மிகவும் அமைதியாக அந்த எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதனை எப்படி உச்சரிப்பது? என்றும் பல தடவைகள் படித்துக் காட்டினார். சில அக்ஷ்சரங்கள் மனதில் பதிந்து விட்டன. பல வார்த்தைகள் உச்சரித்துப் பழக வேண்டிய சூழல் இருந்தது. பூஜை அறையில் வழிபடும் தெய்வீக விளக்கு இரவும், பகலும் எப்போதும் சுடர் விட்டுப் பிரகாசமாக எரிந்து கொண்டே இருக்கும். அதன் பரிபாலனம் எந்த நேரம், காலம் வரையறை இன்றி நடை பெறும். காரணம் எல்லா நேரங்களிலும், அவரவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும் போதெல்லாம், சுவாமி விளக்கின் முன்புறம் அமர்ந்து கண்களை இமைக்காமல் தீபச்சுடரைப் பார்த்து, உதடுகள், நாக்கு அசையாமல் ஜெபம் செய்து வருவது தொடர்ந்து கொண்டே இருந்தது.விளக்கை் சுற்றிலும் பச்சிலைகளினாலும், வாசனை மிகுந்த பூக்களாலும் , கூடுமானவரை மல்லிகை, முல்லை மலர்கள் சுலபமாகக் கிடைத்து வந்ததால், அவை களைக் கொண்டு விளக்கை அலங்கரித்து இருப்பார்கள். விளக்கின் முன்பு அந்த புத்தகத்தை வைக்கும் போது…

(மனிதனே புனிதன் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button