திரு.பாஸ்கரின் லட்சியம்!

234

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

01•04•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(275) மனிதனே புனிதன் —
திரு.பாஸ்கரின் லட்சியம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சோமனூர் திரு.கணேசன் அவர்கள் நல்ல மனநலத்துடன், உடல் ஆரோக்யமும் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தார். நமது சுவாமி ஸ்ரீ நாகராஜன் அவர்கள் திரு.கணேசன் அவர்களின் தம்பி திரு. பாஸ்கரன் அவர்களைச் சந்தித்தார். அவர் ஆன்மவாழ்வு வாழ வேண்டும் என்ற உறுதியுடன் கூடிய லட்சியம் கொண்டவர். அவர் மனதினை அலைக்கழித்துக் கொண்டிருந்த பல விஷயங்களுக்கு, அதற்கான விடையைத் தேடிக் கொண்டு இருந்தார். அவை என்ன வென்றால், மனிதனை மரணம் ஏன் பயமுறுத்திக் கொண்டிருக் கின்றது? மரண பயம் இன்றி மனிதன் வாழ வழியுள்ளதா? மனித ஜென்மம் எடுத்ததன் பயன் என்ன? உலகில் காணப்படும் பொருட்கள் மீது மனிதனுக்கு ஆசைகளும் உண்டாவதேன்? இந்த உலகத்தில் பிறந்துவிட்ட மனிதர்கள், உலக இயல்புக்கு மாறுபட்டு ஏதும் அற்றவர்கள் போல அலைந்து திரியும் நிலை உண்டாவதேன்? இப்படி அநேக கேள்விகளை அவர் தனக்குள் கேட்டுக் கொண்டும், விடைகளைத்தேடி அவர் அலைந்து கொண்டிருந்தார்.

திரு.பாஸ்கரன் அவர்களிடம் அவரது அண்ணன் அவர்களைப் பார்க்கவிரும்புவதாகக் கூறவும் அழைத்துப் போனார். சோமனூரில் இருந்து ஆத்துப் பாளையம் செல்லும் பாதையில் உள்ள மின்சார அலுவலகத்தின் எதிர்ப்புறம் உள்ள சந்தில், இரண்டாவதாக இருக்கும் வீட்டில், அப்போது அவர் குடியிருந்தார். நமது சுவாமியை அவரது அண்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வழி வழியாக இறைவனது ஆலயத்தில் தெய்வத் தொண்டு செய்து வரும் குடும்பத்தில் பிறந்த அவர்கள், உபசரிப்பதிலும் பேறு பெற்றவர்கள் ஆவர். அவர்களது தந்தையார் திரு. பழனிச்சாமி அவர்கள் ஸ்ரீ வெள்ளை விநாயகப் பெருமானை ஆராதனை செய்து வந்தவர். அவரது துணைவியார் பெயர் திருமதி.பொன்னம்மாள் அவர்கள். இவர்களது குடும்பத்தினர் அனைவருமே தெய்வீக வாழ்வில் ஈடுபட்டு வாழ்ந்தவர்கள். இவர்களில் இருந்து மாறுபட்டு திரு.பாஸ்கரன் சற்று வித்தியாசமாக “ஆன்மஞானம்” பெறுவதற்கு என்னவழி? என்று கேட்க ஆரம்பித்தார். நமது சுவாமி அவர்களையும் திரு.பாஸ்கரன் விட்ட பாடில்லை!

திரு.கணேசன் அவர்களிடம் உடல்நலம் பற்றி விசாரித்த போது அவர், ” எனக்கென்னங்க? நான் நல்லாத்தானே இருக்கிறேன். எனக்கு உடம்புக்கு சுகம் இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது?” என்று சில்க் சட்டை சகிதம், எதார்த்தமான ஒரு சிரிப்புச் சிரித்தார் பாருங்கள், பரிபூரண நலத்தை அடைந்து விட்டார் என்பதனை அது காட்டியது. இன்று நமது பரிகார ஸ்தல குரு ஈஸ்வராலயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் திரு.பாஸ்கரன் அன்று அநேக கேள்விக் கணைகளை உருவாக்குபவராகவும், அதற்குரிய பதிலைத் தேடித் தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடருபவராகவும் இருந்ததில், தனது அன்றைய பணிகளை அவரால் சரிவரக் கவனிக்க முடியாதவராகவும் மாறியிருந்தார். நமது சுவாமியிடம், “அடைந்தது
கைவிட்டுப் போனால் உண்டாகும் கவலைகளை நீக்குவதற்கு என்ன வழி?” என்பார். “அது தெய்வச்செயல் என்று எண்ணி விட்டுவிட்டால் அதனைப்பற்றிய கவலைகள் நம்மை விட்டு விலகிவிடும்” என்பார் சுவாமி.

” பக்தி என்றால் என்ன?”– திரு. பாஸ்கரன்.
” நமது வாழ்வில் எது நடை பெற்றாலும் அதனைச் சந்தோஷமாக ஒப்புக் கொள்ள வேண்டும். அதனையும்விடச் சந்தோஷமாக நாம் கடைப் பிடித்துக் கொண்டிருக்கும் தெய்வீகம் சார்ந்த உன்னத அமைப்பை ஏற்றுக்கொண்டு, கடைப் பிடித்து வருவதுதான் உண்மையான பக்தி.”— சுவாமி.
“நீதி ஸ்தானம் எதனைச் குறிக்கின்றது? “– திரு.பாஸ்கரன்
“நீதியின் ஸ்தானம் என்பது, நம்முடைய, எண்ணம், சொல், செயல் மூன்றிலும் உண்மை துலங்க வேண்டும். மற்றவர்களின் எண்ணத்திற்கு ஒப்ப, சொன்ன சொல்லிற்கு ஒப்ப, பிறர் செய்திடும் தவறுகளுக்காக நமது கொள்கையை, செயல்பாட்டை வேறுபாடாக நடத்தக்கூடாது. தருமம் தவறாது நடப்பதும், நமது உண்மைகளை ஒளிவு, மறைவின்றிப் பேசுதல் என்பதே நீதிவாக்கியமாகும். நமது உடலுக்கும், உயிருக்கும் எது நேரிடினும், எண்ணம், சொல், செயல் மூன்றும் சத்திய தர்மங்களில் இருந்து வழுவாமல் நிற்க வேண்டும்”என்ற சுவாமியின் பதிலைக் கேட்டதும், ஆனந்தக் கண்ணீர் சொரிய, “இவைகள் எந்த சித்தரால் கூறப்பட்டது? ” எனத் திரு.பாஸ்கரன் வினா எழுப்பினார்.
“அனைத்து செய்திகளும், அதற்குரிய நிகழ்வுகளும், பராபரத்தில் இருந்து அனுப்பப்பட்டு நம்மால் பெறப்படுவதும் எல்லாமே ஸ்ரீ ஈஸ்வரரின் ஆதிக்கத்தில் இருந்து தான் என்பதனை எப்பொழுது உணருகின்றோமோ, அப்போது தான் நமக்கு நேரிடுகின்ற அனைத்து நிகழ்வுகளையும், நாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்ற நிலை உண்டாகும். அப்போது தான் , எண்ணம், சொல், செயல் மூன்றின் தன்மையும் துலங்கும்” என்று உண்மையை எடுத்துரைத்தார் சுவாமி. சத்திய, தர்மங்களைப் பற்றிப் புரிந்து கொண்டார் திரு. பாஸ்கரன் அவர்கள்.

(மனிதனே புனிதன் வரலாறு வரும்)
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button