உள்ளத்தில் நல்ல உள்ளம்!

294

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

31•03•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(274) மனிதனே புனிதன் —
உள்ளத்தில் நல்ல உள்ளம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நமது சுவாமியை மாடியில் உள்ள தியான அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறிது நேரம் தியானம் செய்தனர். இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டது அந்த தியான அறையில் தான். நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களைச் சற்குருநாதர் ஆட்கொண்டு இருப்பதை அவரால் உணர முடிந்தது. நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் தியான அறையில் மும்முடிவரம் ஸ்ரீ பாலயோகீஸ்வரர் படம் ஒன்று இருந்தது. அவரது இடைவிடாத தியானம் செய்யும் நிலை மிகவும் பிடித்திருந்தது. சுவாமியும் திரு.R.B. அவர்களின் நெற்றியில், மும்முடிவரம் ஸ்ரீ பாலயோகீஸ்வர் தோன்றித் தம்மை ஆசீர்வதிப்பதைக் கண்டு வணக்கம் கூறினார். அன்று முதற்கொண்டு அவர் நமது சுவாமி அவர்களின் மானசீக நண்பராக மாறி விட்டார். விடை பெற்றுக் கொண்டு புறப்படும் சமயம் நமது சுவாமி அவரிடம், “இவ்வூரில் இந்த தியான சங்கத்திற்கும் பலமான எதிர்ப்பு நிலவுவதை வழியில் கேட்டுக் கொண்டு வந்தேன்” என்று கூறவும், அதற்கு திரு.R.B. அவர்கள் உள்ளது உள்ளபடி பதில் கூறினார். “ஆமாம் நாகராஜன். இங்கு இந்த வீதியில் குடியிருப்பவர்கள் ஒரு பட்டப் பெயர் சொல்லி அழைக்கின் றார்கள். அதுதான் பைத்தியத்தின் முக்தி நிலை என்று கேலி செய்கின்றனர். அவரவர்கள் குணம் அவரவர்களுக்கு” எனத் தெளிந்த மனதுடன் கூறினார், அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட உத்தம மனிதர். நமது சுவாமியும், “இந்த உலகில் நன்மை, தீமை இரண்டும் இருக்கும் வரை, அதற்குண்டான ஜனங்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இது உலகத்தின் நியதி. நமது கடமைகளை நாம் செவ்வனே செய்து கொண்டு வரும்போது, எந்த எதிர்ப்பையும் கண்டு நாம் அஞ்சவேண்டியதில்லை”எனவும் திரு.R.B. அவர்கள் தனது இனிமையான புன்னகையுடன், “நன்றி” எனக் கூறினார்.

நமது சுவாமி திரு.R.B. அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு, கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயத்திற்குப் புறப்பட்டுப் போனார். நல்ல வெயில் காலம். சூரியனைப் பற்றி உயர்வாக எண்ணியபடியே ஜெபம் செய்து கொண்டு சென்றார். வெய்யிலின் தாக்கம் ஜெபம் மற்றும்உயர்வான எண்ணத்தினால் சற்றுத் தணிந்த மாதிரி உணர முடிந்தது. அங்கே கோட்டைப்படி ஸ்ரீ கணபதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு, கோயிலுக்குள் சென்று, சந்நிதி வலம் வந்து வழிபட்டார். பிறகு முருகனின் ஆலயத்தில் அமைதியுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டார். சுவாமி தன்னை அறியாமல் கண்களை மூடி இருந்தவருக்கு, மனக்கண்ணில் சில நிகழ்வுகள் தென்பட்டன. எதனையும் கற்பனை செய்யாமல், சிந்தியாமல் தியானம் செய்து பழகியிருந்த அவருக்கு, நேரில் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றே நடந்து போன நிகழ்ச்சிகள் புலனாகத் துவங்கின. தான் அமர்ந்திருக்கும் கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடர்ந்த வனமாகத் தென்பட்டது. சுமார் 300 அடி தூரத்தில் ஓர் பெரிய மரத்தின் கீழே குகை போன்ற அமைப்பும் அதனுள் திடகாத்திரமான உடல் கொண்ட ஒரு ரிஷியானவர் கடும் தவத்தில் ஈடுபட்டுள்ளது புலப்பட்டது.

அவருக்குச் சற்று தூரத்தில் நல்ல வளர்ச்சி பெற்ற இரண்டு புலிகள் படுத்தபடி அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தன. அதற்கு அடுத்த காட்சிகளில் அந்த தவயோகி செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்தப் புலிகளும் செல்கின்றன. நன்றாகப் பழகியவைகளாக அவைகள் நடந்து கொண்டன. அவர் தனது எண்ணங்களை ஓலைச் சுவடிகளில் பதிவு செய்து கொண்டிருக்கின்றார். ஆற்றினுள் உள்ள பாறைகள் நடுவே தவத்தில் ஈடுபடு கின்றார். காயத்திரி மந்திரத்தின் இருபத்தி நான்கு சக்தியின் ஆற்றல்கள் அவருக்குள் ஒன்று குவிந்து சென்று கொண்டே இருந்தன. அவை அவரது உள்ளில் நிறைந்தன. அவரும் ஒவ்வொரு சக்திக்கும் உண்டான அச்சரங்களைத் தனது ஏடுகளில் பதிவு செய்கின்றார். இருபத்து நான்கு ரிஷிகள் அவர் முன்னால் வருகின்றனர். அவர்களது நெற்றியில் ஒவ்வொரு அச்சரமும், அதற்கு உண்டான உபாசனா தேவதைகளும் காட்சியாகின்றனர். அந்த இருபத்து நான்கு சக்திகளின் தேவதைகள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ காயத்திரி தேவியாகக் கபாலம் கையில் கொண்டு, அந்த ரிஷிக்குக் காட்சி ஆகின்றது. இருபத்தி நான்கு ரிஷிகளும் அவரை ஆசீர்வதிக்கின்றனர். அடுத்த காட்சியாக நமது சுவாமியும் அவரும் ஒன்றாக அமர்ந்து உரையாடுவது போல் தென்பட்டது. தன்னை காதி அரசனாக இருந்த “விஸ்வா மித்திரர்” தானே எனக்கூறிய அவர், ” விஜயாபதியில் இருக்கிறேன் நீ அங்கும் வந்து என்னைக் காண்பாய்” எனக் கூறினார். இப்போது மணி ஓசை நன்றாகக் கேட்டதும் கண் விழித்த நமது நாகராஜன் சுவாமி அவரின் கண்களில் , ஸ்ரீ முருகனுக்கு அர்ச்சகர் ஆரத்தி செய்து கொண்டிருந்தது அற்புதமாகப் புலனாகியது. இறைவனுக்குத் தனது நன்றியைக் கூறிக்கொண்டு சோமனூர் புறப்பட்டுப் போனார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button