கட்டுப்பாட்டை இழந்தது மனம்!

163

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

28•03•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(271) மனிதனே புனிதன் —
கட்டுப்பாட்டை இழந்தது மனம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆத்ம ஞானம் ஒன்றுதான் இறை சக்தியை அடையும் வழி என்பது ஞானியர்கள் முடிவு! மனிதன் இறந்த பிறகு அடைகின்ற புகழை, அறிந்து கொள்ள முடியாத அந்தகார இருளுக்கு ஒப்பிடுகின்றார்கள் மகான்கள். மனிதனுடைய மனம் சம்பந்தப்பட்ட அனைத்துக நிலைகளும், எவ்விதத் தோற்றங்களும் அற்ற கனவு நிலை என்றும் வாழ்வின் போராட்டம் எனவும் வர்ணிக்கின்றனர். காரணம் மனிதனை ஈர்க்கும் விஷயங்கள் நிலையில்லாதவை என்பதும் ஞானியர்கள் முடிவு! மனித மனதின் உணர்ச்சிகள் தெளிவில்லாமல் இருப்பதை உணர்ந்து கொண்ட அவர்கள், உடல் சம்பந்தப்பட்ட அனைத்துச் செயல்களையும், மனித வாழ்வையும் நீரோட்டத்துடன் ஒப்பிடுகின்றார்கள்.”

” பஞ்ச பூதங்கள், நவக் கிரகங்களால் உண்டாக்கப்பட்ட மனித உடலும் நிலையில்லாமல் அழிந்து போகின்றது. வாழ்க்கை என்பதை ஒரு யாத்திரை வந்து செல்வதற்கு ஒப்பு நோக்கு கின்றார்கள். அது பரம் பொருளிடம் சென்று முடிவடைகின்றது. ஆத்ம ஞானம் ஒன்றே தான் சாஸ்வதம். இந்த ஞானம் எதுவென்று ஞானியர்கள் கூறுகிறார்கள் தெரியுமா? ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும், தெய்வாம்சம் நிறைந்த ஆத்மா குடி கொண்டுள்ளது. அந்த ஆத்ம சக்தியைப் பரிசுத்தமாக எண்ணி,
எவ்விதத்திலும் தீங்கு நேரிடாமல் பாதுகாக்க வேண்டும் என்கின்றார்கள். இன்ப துன்பங்களை விடவும் மிகவும் மேன்மையாக , உயர்வாக, நிலையாக, நிறுத்தி வைப்பதுதான் சிறந்த ஆத்ம ஞானம் ஆகும்.” — ஈஸ்வர நீதி யில் இருந்து ஞானியர் கூறியது.

மனிதன் பழக்கத்திற்கு அடிமை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதை முருகனின் பெயர் கொண்டவரின் தம்பி நிரூபித்துக் கொண்டு இருந்தார். மனதினை கிளைக்குக் கிளை தவ்விக் குதிக்கும் மந்தியோடு ஒப்புநோக்கி வேடிக்கையாகச் சிலர் கிலாசிப்பதும் உண்டு. அத்தகைய மந்தி ஒன்று கள் பானையினைக் கண்டு, தனது வயிறுமுட்டக் குடித்துப் போதை தலைக்கேறி அது செய்த அஷ்டகாசம் அனைவருக்கமே துன்பத்தைத் தந்து விட்டதாம். அப்படித்தான் இருந்தது கள், கஞ்சா இரண்டையும், தியானத்தில் போதை யை உருவாக்க மாந்திமாந்தி அருந்திய அன்பரின் மனம், சிறுகச்சிறுக தனது கட்டுப் பாட்டை இழந்து விட்டது. இப்போது சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது மாறி, மனம் போன போக்காக மாறிவிட்டது. இப்போதெல்லாம் அவரது மனக் கண்ணில் கற்பனை ஊற்றுப் பொங்கி வழிய ஆரம்பித்தது. “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்” என ஒளவை வந்து சொல்வதாகக் கூறுவார். ஆனால் பாட்டி தண்ணிஅடித்து விட்டுச் சொல்லும் போது நான் என்ன செய்வது? என்றபடி தனது சுயகட்டுப் பாட்டை இழந்து தெருவில் ஓட ஆரம்பித்தார்.

சில காலம் மெளனமாகத் ‘திரு திரு’ என விழித்தபடி இருப்பார். அதனைக் கண்டு ஊரார்,” இந்தப் பையனுக்கு ‘மறை’ கழன்று விட்டது. ஒன்று கட்டி வையுங்கள் அல்லது மருத்துவம் பாருங்கள்” என்று ஆலோசனைகளை அள்ளி வழங்கினார்கள். ஒரு சாமியார் இதனைச் செய்தால், அவர் குடும்பம் குழந்தை அற்றவர் என்று கூறுவதோடு விலகிக் கொள்வோம். ஆனால் இவர் மனைவி குடும்பத்துடன் வாழும் அழகிய, கம்பீரமான, மரியாதையுடன் நடந்து வந்தவர். ஞானத்தைத் தேடி வாழ்க்கை நதியின் சுழலில் சிக்குண்டு மறைந்தே போனார்.

அவரது அண்ணன் முருகன் பெயர் கொண்டவர் மகா உத்தமர் என்றே கூற வேண்டும். தனது தம்பிக்காக அநேக மருத்துவ உதவிகளும் செய்தவர். மனக்கட்டுப்பாடு உடைய மனிதர். தவத்திரு. வேணுகோபால சுவாமி ஆசி பெற்றவர். தனது குருவாகிய அவர்களிடமும் தனது தம்பியின் நிலையைப் பற்றி எடுத்துக் கூறினார். ஞானகுரு தான் என்ன செய்வார்? கட்டுப்பாடுடன் வாழும் வாழ்வில் உள்ள சுதந்திரம் என்றும் நிலையானது என்று கூறும் ஞானி அவர். பையனுக்குப் புத்திமதிகள் கூறினார். புன்சிரிப்புடன் சொல்வதை எல்லாம் பையன் அப்போது கேட்பார். ஆனால் அப்புறமாக அவர் பேசுவதை அவரே கேட்க மாட்டார். இவ்வளவு செய்யும் அவர் நமது சுவாமியைக் கண்டதும் அமைதியான தவஞானி போல் மாறி விடுவார். ஞானத்தேடல் இருந்தது அவரிடம், ஆனால் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி, படு சுத்தமாக அலைந்து கொண்டே இருந்தார். மரணத்தைத் கண்டு அவர் பயப்படவில்லை. ஆனால் அவரது மரணத்தை சந்தோஷ நிரந்தர நித்திரையாக அவரே வடிவமைத்துக் கொண்டார். அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்வோமாக.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button