தியானமும், போதையும்

243

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

27•03•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(270) மனிதனே புனிதன் —
தியானமும், போதையும்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° “நன்மை எது? தீமை எது? என்று அறியாத மனிதர்களை உலகம் என்ன சொல்கிறது? குற்றவாளி யாகவே கருதுகிறது. உண்மை யில் இது நன்மை, தீமைகள் அறியாத மனிதர்களின் அறியாமையே ஆகும். மனிதனை வேறு யாரும் கெடுதல் செய்து விட முடியாது. அவனவனே அவனவனுக்குக் கெடுதல் செய்து கொள்வான். உலக பந்தங்கள், கோபம், குரோதம், வஞ்சனை, ஆத்திரம், பகை, பழி, கலகம், மோசம், பொறாமை, பற்று, பாசம், அனைத்தும் மனிதனை விட்டு விலக வேண்டும் என்றால் அவன் இறைவனை சிந்தித்துப் கொண்டிருக்க வேண்டும். சந்தோஷ மரணம் என்பது மன நிறைவுடன், சாந்த குணத் தன்மை களுடனும், உலக வாழ்வை விட்டு விட்டு வெளியேறி, உன்னதமான பிறவா நிலையை அடைந்து விட வேண்டும் என்பதே! எந்த மனிதன் தன்மீது முதலில் நம்பிக்கை கொள்கின்றாரோ அவருக்கே பராபரமாகிய இறையருளின் அருளாசிகள் கிடைக்கப் பெறும். பிரபஞ்ச வாயிலின் சாவி அவர்களுக்கே இறை அருளால் தரப்படுகிறது!”

“ஒரு மனிதனின் மனக் குழப்பத்திற்குக் காரணமாக இருப்பது அவனது சலிப்புத் தன்மையே ஆகும். பிறகென்ன தானாகவே உதயமாகி, சோர்வான நிலைகள் ஏற்பட்டு விடுகிறது. சோர்வினால் சலிப்பு ஏற்பட்டு விடுமானால், பிறரால் தனக்குச் சங்கடங்கள் உண்டாவதாக எண்ணுகிறான். சங்கடங்கள் அவனது வாழ்வை அவசர கதியாக மாற்றி விடுகிறது. மனம், நிலை கொள்ளாமல் தவிக்க நேரிடுகிறது. சிறு நிகழ்வுக்கும் பொறுமை இழந்து ஆத்திரம் ஏற்பட்டு அது கோபமாக வெடித்து விடுகிறது. இந்தக் கோப குணங்கள் வளர வளர பழி வாங்கும் உணர்வுகள் கிளர்ந்து எழுகின்றன. பழி என்பது எப்பொருள்கள் மீது வேண்டு மானாலும் ஏற்பட்டு விடலாம். அதனால் தீய சக்தியின் வசமாகும் மனிதனை அது, பாவம் செய்யத் தூண்டி விடுகிறது. இவைகளில் இருந்தெல்லாம் மனிதன் விடுபட்டு வாழவேண்டும் என்றால் தன்னையே தான் நம்பி வாழும் போது, தன்னுள் உறையும் இறை சக்தி தன்னை சத்திய தர்மங்களில் வழிநடத்த உதவிகள் புரியும். அன்பைப் கடைப்பிடிக்கும் பாக்கியம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும். மனிதன் தன்னைத் தான் உணரும் அநுபூதி நிலையில் ஏற்படும் பரவசத்தையே நிஜானந்த போதம் என்று அறிவுறுத்தப் படுகிறது. இது தான் நிலையான சந்தோஷமும், அமைதியும், சாந்தமுமாகும்” — ஸ்ரீ ஈஸ்வர நீதி!

தியான நண்பர்கள் குழாத்தில் முருகனின் பெயர் படைத்த ஒருவர் இருந்தார். ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்டுக் கேட்டு தியானம் ஈர்ப்பதில் மெய்மறந்து வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு தம்பி. சிவன் பெயரைக் கொண்டவர். அவர் சித்தர்களின் நூல்களை வாசக சாலையில் படித்துத் தியானத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். சாமியார்கள் கஞ்சாபுகை பிடிப்பதைப் பற்றியும் பேசுவார். “அதில் ஆனந்த போதை ஏற்படுகறது. எதனை எண்ணிச் சாப்பிடு கின்றோமோ, அந்த விஷயம் போதை தெளியும் வரை இருக்கும். தியான எண்ணம் அதிகப்படுகிறது” என்றும் உறுதிபடப் பேசுவார். பேச்சில் சமர்த்தரான அவர் ஏன் இப்படிப் பேசுகிறார் என்று தியான நண்பர்கள் குழப்பம் உற்றனர். நமது சுவாமி அங்கு சென்றிருந்த போது,” உங்களோடு் தனியே பேச வேண்டும்” என அனுமதி கேட்டார். சுவாமி சரி என்று சொன்னதும் தியானத்தில் போதையுடன் இருப்பது பற்றியே பேச்சு இருந்தது.

நமது சுவாமி, “தியானத்தில் உண்டாகும் பேரின்பத்தையே போதை என்று ஞானியர்களால் கூறப்படுகிறது” என்பதை எடுத்துக் கூறினார். அதற்கு அவர், ” தன்நிலை மறந்து இருப்பதற்குக் கோரக்கர் சித்தர் சடைக்கஞ்சா லேகியம் கடைந்தார் என சித்தர் பாடல்கள் குறிப்பிடடுகின்றன. சுவாமி நீங்கள் அதனை அறிய வில்லையா?” என மடக்கினார். “புகையிலை, சடைக்கஞ்சா இவைகளை சித்தர்கள் மருத்துவத்திற்காகப் பயன் படுத்தி உள்ளனர். அன்று அறுவை சிகிச்சைக்காகக் கூடப் பயன்படுத்தி இருக்கலாம். அதனை மனிதன் சுத்தியின்றி நேரடியாகப் பாவிக்கும் போது, சிந்தயும், புத்தியும், உடலும் பாதிப்பை அடையலாம். வேண்டாம் இந்தப் பரிசோதனை” என்று விளக்கம் கூறினார். அவர் கேலியாக சிரித்துக் கொண்டார். யாரோ சாமியாரின் நட்பு கிடைக்கப் பெற்று, கஞ்சா போதையில் ஆழ்ந்து, அதற்கு அடிமையாகிப் போன வரை வேறு என்னதான் செய்ய முடியும்? அவருக்காகப் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழிகள் புலப்படவில்லை. போதையில் வாழும் மனிதனை மீட்க மருத்துவ மனைகள் இருப்பதாக சுவாமி கேள்விப்பட்டிருந்தார். அங்கு சென்று வர ஆலோசனைகள் கூறி விட்டு இருப்பிடம் திரும்பினார். தியானம் என்பது பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நல்ல ஆசான் கிடைக்கவில்லை என்றால் இப்படியும் கூட சிந்தனை செல்லும் என்பதையும் அறிந்து கொண்டார். கூடா நட்பு கேடாய் விளையும் என்பதனை விரைவில் அறிந்து கொள்ள வாய்ப்பும் உருவாகிக் கொண்டிருந்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button