ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
25•03•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(268) மனிதனே புனிதன் —
வீடு போயி இடம் வந்தது!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“எந்தக் காரியங்கள் செய்தாலும் அது நமது சொந்தங்கள், நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் உதவியாக இருந்தால் எல்லோருக்கும் நன்மை பயக்கும். நமக்கு எத்தனை இன்னல்கள் அல்லது இன்பங்கள் வந்தாலும் அது இறைவன் தந்தது என ஏற்றுக் கொள்ளும் மன தைரியத்தைப் பெற்று வாழ் வேண்டும். எங்களுக்கு எது நடந்தாலும் அது கடவுளின் விருப்பம் என எண்ணுகிறோம்.எங்களுக்குப் பழனி மலை முருகன் நல்ல வழி காட்டுவார், முருகா…! ” என அந்த அப்பாவி வியாபாரி எண்ணினார். அன்றும் இன்று போல் பங்குனியுகாதித் திருநாள். எல்லோரும் பூஜை அறையின் முன்பு நின்று அபிஷேகத்தில் வேம்பூ இட்டு, “எங்களுக்கு இனி மேல் நல்லதே நடைபெறும் ” என்று சொல்லி விட்டு,” இனிப்பு, கசப்பு இரண்டையும் நாங்கள் சமமாக ஏற்றுக் கொள்கிறோம். ஆண்டவருக்கு நன்றி” என வாய் விட்டுக்கூறிப் பிரசாதம் சாப்பிட்டனர். அவர் அப்படிப் பிரார்த்தனை செய்ததால் அவர் செய்கின்ற கர்மாக்கள் கர்மத்தோடு இணைந்து அவரது ஆத்ம வாழ்வை ஒழுங்கு படுத்தியதுடன், அவருள் நேர்மை குடிகொண்டதால் அவரால் திருப்தியுடன் வாழ முடிந்தது. சூனியத்தால் சொத்தைப் பறிக்க நினைத்தவனையும் அவரால் மன்னிக்க முடிந்தது. அவர்களுக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடிப் போக எண்ணவில்லை.
எங்களுக்கு நன்றாகப் பரிச்சயமான நண்பர் ஒருவர் இருந்தார். படிப்பறிவு இல்லை என்றாலும் கேள்வி ஞானம் உடையவர். எப்போதும் தியானம் செய்தபடியே இருப்பார். தீபம் தெரிகிறது என்பார். நெஞ்சில் சூடு அதிகம் என்பார். குரு தேவர் பேசுகிறார் என்றெல்லாம் கூறி வந்தார். எல்லோருக்கும் வேப்பிலை லேகியம் கொடுக்கவும், மருத்துவம் பார்க்கவும் ஆரம்பித்தார். சித்த மருத்துவம், அதற்குச் சம்பந்தப்பட்ட நூல்களை எல்லாம் வாங்கி வந்து, எழுத்துக் கூட்டிப் படித்துப் படித்துத் தானே மருத்துவரானவர். தான் ஒரு பிரபலமான வைத்தியர் என்ற எண்ணம் வந்து விட்டதால், தியான நண்பர்கள் பல பேருக்கு மருத்துவம் சொல்லி, அவரைப் பார்த்தாலே அவர்கள் எல்லாம் மிரண்டு ஓடுப்படிக்கு வைத்து விட்டார். சில திடீர் கம்பெனிகள் வெளியிடும் மருந்துகளை வாங்கிக் கொடுத்து மருத்துவம் பார்த்தார். பலபேர் சந்தடியின்றி பரலோகப் பயணம் மேற் கொண்டனர். நமது அப்பாவி வியாபாரியும் அவரிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டு விட்டு, இரவு நேரத்தில் யாருக்கும் சொல்லாமல் இந்த பூவுலக யாத்திரையை முடித்துக் கொண்டு, வின்நாடு பயணப்பட்டது என்னவோ உண்மை! அன்று தொட்டு பயந்து மருத்துவத்தைக் கிடப்பில் போட்டு விட்டார். அதுதவிர ஜவுளிக்கடை முதற் கொண்டு யோகா வகுப்பு ஆசிரியர் மற்றும் ஆஸ்ரம சந்நியாசி வரை சகல உத்தியோகங்களையும் பார்த்துத் தன்னை அவதார புருஷராகக் கருதிக் கொண்டார்.
இத்தனைக்கும் பணம் தேவை என்றால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால், “அடுத்தவன் பையில் பணம் இருக்கிற வரைக்கும் எனக்கென்ன கவலை?” என்ற பலமான கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டி, கட்டிய மனைவி மக்களைப் பரிதவிக்க விட்டுவிட்டு ஊரை விட்டே ஓடிப் போனார். அதற்கு முக்கிய காரணம் அவரது பலமான கொள்கை தான். கடன் கொடுத்தவர்கள் அனைவரும் அவதார மூர்த்தி வந்தால், நமது பணத்துடன்தான் வருவார், வந்து வரம் தருவார் என்று தத்தமது இல்லங்களில் அவரை எண்ணியே, வருத்தமுடனும், தூக்கம் வராமலும், கையில் கம்புடனும், யோக நித்திரையில் இருப்பதாக ஒரு செய்தி ஊருக்குள் உலவுவதும் உண்மைதான்! இதனைக் கூறுவதற்குக் காரணம், சரியான கொள்கை பிடிப்பின்றித் தவறான பாதையில் சென்றதால், நமது அப்பாவி வியாபாரி அநியாயமாக மரணம் அடையக் காரணமாக நமது தியான நண்பர் இருந்து விட்டாரே என்ற ஆதங்கம் தான். தவிர தான் நெறி தவறிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, ஊர் ஊராகச் சென்று தனது நண்பர்களுக்கு, உபதேசத்துடன் யோகா கற்றுக் கொடுப்பதுடன், தன்னை அறியாதவர் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருப்பதும் தான் நடைமுறை அதிசயமாகக் கருதுகிறோம். இனி,
நமது அப்பாவி வியாபாரி சத்தமில்லாமல் வீட்டை எழுதிக் கொடுத்து விட்டு, கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஊரைவிட்டு வெளியேறினார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக அவர் புதிய இடம் தேடிப் போனார். அங்கும் அவரை கந்துவட்டி வியாபாரி விடவும் இல்லை. சொத்து உண்டாக்கித் தரும் ஒரு மனிதனை விட முடியுமா? அவரது பேர்பாதி இடத்தை விற்க வைத்து வந்த பணத்தில், வீடு, தறிகுடோன் கட்ட வைத்து, அவரது கையில் இரண்டு “ல” கரத்தைக் கொடுத்துச் சொத்தை எழுதி வாங்கிக் கொண்டார். சொந்த பந்தங்கள் பகை, ஆலோசனை யின்றி அகலக்கால் வைத்த வியாபாரம், நம்பினோர் செய்த சூழ்ச்சி, அந்த அப்பாவி மனிதனைக் கிராமத்திற்கே விரட்டியது. விதியா?
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.