களவு போன நகை கிடைக்குமா?

181

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

20•03•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(263) மனிதனே புனிதன் —
களவு போன நகை கிடைக்குமா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“பலர் எண்ணுகின்றனர், நாம் வாழும் உலகத்தில் சிற்றின்ப வேட்கையைத்தரும் சொத்து, சுகம், செல்வம், செல்வாக்கு இவைகள் அனைத்தையும் தேடுவதோடு, பரலோகத்தில் வாழ வைக்கக் கூடிய பேரின்பத்தையும், அதனைச் சுலபமாகத் தரக்கூடிய ஆன்ம சக்தியையும் பாதுகாத்து வைத்துக் கொண்டு, எதனையும், எவரையும் அடக்கி ஆளலாம் என்று எண்ணியே ஏமாந்து போனவர்கள் ஏராளம்! சிற்றின்ப ஆசைகள் மேலோங்க மேலோங்கப் பேரின்பத்தில் உண்டாகும் சுதந்திரத்தை அறியாமலேயே எங்கோ போய் விடுகின்றார்கள். மனிதனின் அறியாமை நீங்க வேண்டும். அறியாமை நீங்கும் போதுதான் உள்ளத்தில் சாந்தம் ஏற்பட்டு அதற்குரிய நல்ல எண்ணங்கள் சேமிப்பாகும். பரிசுத்த எண்ணங்கள் தோன்றும் காலத்தே உள்ளத்தில் தனிமை உண்டாகும். அந்தத் தனிமையான இடமே தவம் செய்யத் தகுந்த ஆஸ்ரமம் ஆகும். அந்த ஆஸ்ரமத்தில் மெளனத்தின் சக்தியை உணர முடியும். மெளனத்தின் சக்தியே மனவலிமை தருவதை அறியலாம். அந்த மன வலிமையைப் பெற்றவர்களுக்கு மூலாதார உண்மைகளை மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் ஏற்படும். அது எல்லாவிதமான உலக துக்கங்களையும் நீக்கும் மருந்தாக ஞானிகளிடம் இருந்து மற்றவர்களுக்கும் அது உதவி செய்யும். உள்ளத்தின் தனிமையை, அங்கு உருவாகும் சாந்தத்தை, உருவானதும் உணர்ந்தவரிடம் அறிவின் ஆற்றல் பெருகிக் கொண்டே இருக்கும். மனிதனின் அறிவில் இருந்து தான் விவேகமும், அதிலிருந்து தான் பகுத்தறிவும் உண்டாகிறது. இதனை மனித உள்ளம், அறிவு உருவாகும் மூலப் பொருளில் இருந்தே பெறுகிறது. ஜனன மரண ரகசியங்களை இங்கு இருந்து தான் ஞானியர்கள் போதனைப் படுத்துகின்றனர் ” — ஸ்ரீ ஈஸ்வர நீதி

உண்மைகளைத் தவறாகப் புரிந்து கொள்பவரிடம் மனம் மாறுபாடு அடைந்திருக்கும். ஆணவம், அகங்காரம் பெருகி விடும். வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுடைய தன்னம்பிக்கையை இவர்கள் பாழ்படுத்தி விடுவார்கள். நமது சுவாமியை மறு முறை அவர்கள் சந்தித்த போது எங்கள் வீட்டிற்கு சுவாமி வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மனதின் கோனலை நீக்குபவரல்லவா நமது சுவாமி. புன்னகையுடன் வருகிறேன் என்று கூறி விட்டார். அதன்படி அவர்களுடன் சென்றார். தோட்டத்தில் வில்லை போட்ட வீடு இருந்தது. சோளப்பயிர் நன்கு வளர்ந்து செழிப்பைக் காட்டியது. வீட்டிற்குள் சென்றதும் மூத்த மகன் உட்காரச் சொல்லி உபசரித்தார். சுவாமி அமர்ந்தது தான் தாமதம் அந்த அம்மாள் ஓவெனக் கத்திக்கதறி அழத் துவங்கி விட்டார். சுவாமி செய்வதறியாது அவர்கள் அழுது ஓயட்டுமென்று பொறுமையாக அமர்ந்திருந்தார். வெகுநேரமாக அழுது விட்டு ஒரு சொம்பு நிறைய நீரை அருந்தி விட்டு, சற்று நேர ஓய்வுக்குப் பிறகு பேசத் துவங்கினார். ” சுவாமி அப்பா, நான் குளிக்கச் செல்லும் போது எனது கழுத்தில் கிடந்த ரெட்டை வடம் சங்கிலியைக் கழற்றி வைத்துவிட்டுப் போனேன். வந்து பார்த்தால் எனது சங்கிலியைக் காணோம். முழுசா பத்து பவுன் சங்கிலி அப்பா! வீட்டிற்கு யாரும் வந்து போகவில்லை. எனது மகன்கள் மூவர் மீதும் தான் எனக்குச் சந்தேகம் வந்துள்ளது. நீங்கள் தான் பேசி எனக்கு எனது நகையை வாங்கித் தர வேண்டும். நான் கேட்டால் வீண் சங்கடம் வரும் அப்பா” என்று அந்த அம்மையார் கூறினார்கள். மூத்த மகனுக்கு முகம் பேயரைந்தது போல் ஆனது.

நமது சுவாமி, ” அம்மா உங்கள் குழந்தைகள் மீது உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். யோசியாமல் நீங்கள் உடனே பழி போட எண்ணுகிறீர்கள். நீங்கள் பெட்டிக்குள் வைக்காமல் இருந்தது உங்கள் தவறு. பிள்ளைகளிடம் நீங்கள் விசாரித்திருந்தால் உண்மைகள் புரிந்திருக்கும்” என்றார். அந்த அம்மையின் கருத்துப்படி காவல் நிலையத்தில் புகார் செய்ய எண்ணியிருந்தார். “பவர்லூம் தொழில் செய்யப் பணம் கேட்டார்கள். இல்லாவிடில் பாகப்பிரிவினை கேட்டார்கள். அதுதான் எனக்குச் சந்தேகம்” உள்ளத்தில் உள்ளதை சுவாமியிடம் அந்த அம்மாள் வெளிப்படுத்தினார். சுவாமி சற்று நேரம் தியானம் செய்த பிறகு கூறினார், “அம்மா நீங்கள் புகார் கூறினாலும் திருடியவர்களைத் தண்டிக்க முடியாது. காரணம் பொருளைத் களவாடியது மனிதர்கள் அல்ல!” என்றதும் அதிர்ந்து போனார். “அப்பா சுவாமி நீங்கள் அதைக் கண்டு பிடித்துத் தந்தால் எனக்கு உபகாரமாகவும், உங்களுக்குப் புண்ணியமாகவும் இருக்கும்” என்று அந்த அம்மாள் கூறினார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button