ஞானகுரு அறையில் பிரார்த்தனை!

173

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

15•03•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(258) மனிதனே புனிதன் —
ஞானகுரு அறையில் பிரார்த்தனை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாகராஜன் சுவாமி அவர்கள் தமது குடும்பத்துடன் சோமனூர் சென்றிருந்தார். குழந்தைகள் அங்கு சந்தோஷமாக வருவார்கள். வாழைத் தோட்டத்து ஐயன் கோயில், மங்களம் செட்டிபாளையம், சூலூர் பெரியம்மா வீடு சென்று உறவினர்களையும் பார்த்து விட்டு வருவார்கள். நமது சுவாமி அங்கு சோமனூரில் சிசுபாலன் என்ற டைலர் கடைக்குச் சென்று வருவார். “கடைக்குப் பின்புறம் உள்ள ஓர் அறையில் தினமும் கூட்டுப் பிரார்த்தனை நடை பெற்று வருகிறது. நீங்களும் வாருங்களேன்” என்று சிசுபாலன் நமது சுவாமியை அழைத்தார். அன்றைய தினம் மாலை நேரம் சுவாமி சென்றிருந்தார். டைலர் சிசுபாலன் ஏதோ முனு முனுத்தபடி தையல் இயந்திரத்தில் அமர்ந்திருந்தார். சுவாமியைப் பார்த்ததும் வரவேற்று தியானம் அறைக்குள் அழைத்துப் போனார்.

அங்கு அறிமுகம் ஆனவர்கள், அகத்தியர் என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் திரு.பாஸ்கரன், துரை என்று அழைக்கப்படும் திரு.கருப்புசாமி, திரு.ஷண்முகம் அவரது தம்பி திரு.பரமசிவம், திரு.மனோகர் அவரது தம்பி திரு.சிசுபாலன் ஆகியோர் தியானத்தில் அமர்ந்து இருந்தனர். இதில் திரு.ஷண்முகம் மற்றும் திரு.மனோகர் இருவரும் சோமனூரில் இருந்த வாசகசாலையில், தினமும் சென்று புத்தகங்கள் வாசித்து வந்தவர்கள். அவர்கள் அங்கு ஒரு புத்தகத்தை நாடி விரும்பிப் சென்றனர். அந்தப் புத்தகம் பவானி தியானம் சங்கத்தில் இருந்து 1980 -ஆம் ஆண்டில் முதற் பதிப்பாக வெளியிடப் பட்டதாகும். திரு.சண்முகம் அவர்கள் தனது நண்பர்களிடம் புத்தகம் பற்றிக் கூறிவிட்டார். அதனைப் படித்த பிறகு அவர்கள் சந்திக்க விரும்பியது தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களை! பவானி சென்று ஞானகுருவைச் சந்தித்து அவரது அருளாசியை நாடி நின்றனர். அவரும் கலசம் வைத்து தியானம் செய்து வரும்படி உபதேசம் கூறினார்.

அதன்படி திரு.சிசுபாலன் கடையின் பின்புறமுள்ள அறையை தியானம் செய்யும் இடமாகத் தேர்வு செய்து, கலசம் அமைத்து வழிபட்டுக் கூட்டு தியானம் செய்து வந்தனர். அந்த சமயத்தில் திரு.பாஸ்கரன் அவர்களின் தமையனார் திரு.கணேசன் அவர்கள் மனோ வியாதியால் பீடிக்கப் பட்டிருந்தார். எப்பவும் பயந்தபடியேயும், தான் மரணம் அடைந்து விடுவோம் என்ற எண்ணத்தில் துன்பப்பட்டு வந்தார். அதனால் அவர் சொந்த பந்தங்கள் வீட்டிற்கு, கோயில், குளங்கள் எங்கே போனாலும் பயம் பாடாய்ப் படுத்திற்று. சோமனூர் தியான நண்பர்கள் அவரை அழைத்துச் சென்று, தவத்திரு. வேணு கோபால சுவாமி அவர்களிடம் காட்டினால், குணப்படுத்தி விடுவார் என்ற நம்பிக்கை கொண்டனர். எனவே அவரைக் கூட்டிக் கொண்டு பவானி தியான சங்கத்திற்கு எல்லோரும் சென்றிருந்தனர். பவானி தியான சங்கம் அருள்மிகு செளண்டம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் அமைந்திருந்தது. சோமனூர் அன்பர்கள் மிகுந்த ஆவலோடு, ஞானகுருவைச் சந்திக்கும் நோக்கில் சென்றவர்களுக்கு, மிகுந்த ஏமாற்றம் காத்திருந்தது.

ஞானவான் திரு.RB அவர்கள் வீட்டில் பின்புறம் ஆட்கள் பணி செய்து கொண்டிருப்பதால் அங்கே இருந்தார். அவரது துணைவியார் வந்தவர்களை வரவேற்று, வந்த காரணம் பற்றி விசாரித்தார். நண்பரின் பயத்தைப் போக்கி, மனோ நிலை சுகம் பெற வேண்டி ஞான குருவைச் சந்திக்க வந்துள்ளதாக கூறினார்கள். அதற்கு அவர் ஞானகுரு சுற்றுப்பயணம் சென்றிருப்பதாகப் பதில் கூறினார். வெகு தொலைவில் இருந்து வந்திருப்பதால், ஞானகுருவின் அறையில் அமர்ந்து தியானம் செய்து விட்டுப் போக அனுமதி கொடுத்துள்ளார். எல்லோரும் மிக மகிழ்ச்சியாக தவத்திரு. வேணு கோபால சுவாமி அறைக்குள் சென்றனர். அங்கே…

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button