மகாலிங்கபுரப் பாட்டியிடம் ஆசி

247

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

09•03•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(252) மனிதனே புனிதன் —
மகாலிங்கபுரப் பாட்டியிடம் ஆசி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொள்ளாச்சி ஸ்ரீ செளடேஸ்வரி கோயிலில் நடை பெறும் கூட்டு தியானத்திற்கு நமது சுவாமி சென்றபோது, தவயோகினி திருமதி.M.சுந்தரம்மாள் அவர்கள், “அப்பா சுவாமி நாகராஜா உனது, குழந்தைகளையும், மீனாம்பாள் ஆகியோரையும் எங்கள் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என அன்புடன் அழைப்பு விடுத்தார். விக்கிரமாதித்தியன் காலத்தில் தவயோகினியாக வாழ்ந்திருந்த ஓர் புண்ணிய ஆத்மா இவர் தாம் என்று சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் அவர்கள், நமது சுவாமியிடம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். மரணத்திற்குப் பிறகு நடை பெறும் நிகழ்வுகளைப் பற்றி அனுபவித்து, அறிந்து வெளிப்படுத்திய தீரமிக்கவர். சுவாமியும் சம்மதித்து அவர் குறிப்பிட்ட தினத்தில் சுவாமியின் குடும்பம் சென்றிருந்தனர். தவயோகினி அம்மையார் எல்லோரையும் வரவேற்று உபசரித்தார். கோகுல் மிகவும் அமைதியாக அமர்ந்து கொண்டு, பெரியவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். விசாலமான பங்களாவைப் பார்த்ததும் ஓடி விளையாட ஆசை கொண்டு தனது அம்மாவின் மடியில் இருந்து இறங்கக் குழந்தை மெளலீஸ்வரர் முயற்சி செய்தார்.

புதிய இடம் கீழே இறக்கி விட்டால் கைக்குக் கிடைத்த பொருட்களை எடுத்து வீசவோ அல்வது உடைத்து விடும் நிலையோ ஏற்படலாம் என்று எண்ணிக் குழந்தையைப் பலமாகப் பிடித்தபடி தாயார் அமர்ந்திருந்தார். இறக்கி விடாததால் எதிரில் மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள, மதிப்பு மிகுந்த கண்ணாடியால் உருவான ஜாடி போன்ற பொருளை, விளையாடுவதற்கு எடுத்துத்தரச் சொல்லி அழ ஆரம்பித்து விட்டார். ” இனி சமாளிப்பது கடினமாகலாம். புதிய இடம் ஏதாவது ஒன்றை உடைத்து விட்டால், நம்மீது அவர்களுக்கு வருத்தம் உண்டாக வாய்ப்பு ஏற்படும். மரியாதை போய்விடும். வாங்க, நமது வீட்டிற்குப் போய் விடலாம்” என்ற கருத்தை நமது சுவாமி அவர்களிடம் மெல்ல நாச்சியார் கூறினார்கள். சுவாமியும் செய்வதறியாது மெளனமானார். ” அம்மா, மீனாம்பா குழந்தையை இறக்கி விடம்மா. எவ்வளவு நேரம்தான் மடியில் வைத்திருப்பாய்? ” என்று தவயோகினி கூறினார்கள். “அம்மா இவனை விட்டால் விளையாட வெளியே ஓடி விடுவான். பிறகு தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது இருக்கும் ” என்று கூறினார். அதற்கு தவயோகினி அவர்கள், “இத்தனை பேர் இங்கிருக்கிறோம். குழந்தையை சுதந்திரமாக விளையாட
விடம்மா.அப்படி என்னதான் செய்து விடுவான் பார்க்கலாம்?” என்று தைரியம் கூறினார்.

குழந்தையைத் தரையில் இறக்கி விட்டது தான் தாமதம்! அவர் தரையில் படுத்து தென்வடலாக உருண்டபடி, அவர்கள் வீட்டின் பெரிய வரவேற்பு அறையில் தொண்டை வரண்டு போகும் அளவில், காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டும், உருண்டு கொண்டும் இருந்தார். அதனைக் கண்டு பிரமித்துத் திகைத்துப் போன தவயோகினி அவர்கள், , “எல்லோரும் தியானத்தில் இருந்து இவர் குணம்பெற வேண்டிக் கொள்வோம்” என்று சொல்லி தியானத்தில் அமர்ந்து விட்டார். சுவாமி, நாச்சியார், கோகுல், அந்த வீட்டின் பெரிய மருமகள் எல்லோரும் தியானத்தில் அமர்ந்து மெளலீஸ்வரருக்காக வேண்டிக் கொண்டனர். சுமார் முப்பது நிமிடங்கள் சென்றன. எல்லாவித ஆர்ப்பாட்டம், சப்தங்களும் அடங்கியிருந்தன. குழந்தை மெளலி தனது தாயாரிடம் அமைதியாக அமர்ந்து, தாயாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு, மெளனமாக அமர்ந்திருந்தார். தியானம் சந்தோஷமாக நிறைவு பெற்றது. அன்று முதல் சந்திர மெளலீஸ்வரரின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்பட்டுத் தொடர்ந்தது. அவரது சிந்தனை தியானத்தைப் பற்றியதாகவே மாறி இருந்தது.

சந்திரமெளலீஸ்வரர் எப்படி விரைவாகத் தன்இயல்பு நிலைக்கு மீண்டார்? என்ற வினா சகஜமாக நம்முள் எழுவது நிஜம். ஒரு மனிதனின் ஆத்மநிலை என்பது பூரணமாக தனது அனுபவத்தில் இருப்பது. அது எதனாலும் பாதிப்பை அடைவதில்லை. உலகில் உள்ள எந்தப் பொருட்களும் ஆத்மாவை நெருங்கக்கூட முடிந்திடாது. ஆத்மாவானது அது தன்னைத் தானே வழிநடத்திக் கொள்ளும் சுதந்திரம் படைத்தது. இப்படிப்பட்ட ஆத்மா எதனால் பாதிப்புக்கு உள்ளாகிறது? மனிதன் வெளிஉலகத்தில் காணப்படும், பார்க்கும் பொருட்களைக் பற்றியாவது அல்லது நிகழும் ஏதாவது சம்பவங்களைப் பற்றியோ, எண்ணுகின்ற எண்ணத்தைத் தனது உள்ளத்தில் கொள்கின்ற போது, அதனால் தான் மனித ஆத்மா பாதிப்புக்கு உள்ளாகிறது. மற்ற எந்த வகையிலும் அதனை பாதிப்புக்கு உள்ளாக்க முடிந்திடாது. சரி, தரையில் உருண்டு குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன?

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button