கண்களைக் கட்டி காட்டில்!

186

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

07•03•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(250) மனிதனே புனிதன் —
கண்களைக் கட்டி காட்டில் !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞானச்சுடர் தவத்திருமதி. பொன்னம்மாள் பாட்டி அவர்கள் தனது பேரன் முகத்தைப் பார்த்து விட்டு சற்குருநாதரைப் பார்த்தார். மஹாலக்ஷ்மியின் அம்சமாக விளங்கும் சற்குரு, “பேரனுக்கு ஞான பாட போதனைகள் நடத்த வேண்டும், அது தானே! இப்போது ஞானச்சுடர் படிக்கின்றான்;பிறகு பார்ப்போம்” எனவும் பாட்டி அவர்கள், “தாங்கள் எனது பேரனுடன் தங்கி இருந்து போதிக்க வேண்டும். இதனை எங்களின் அன்பு அழைப்பதாக தேவரீர் சமூகம் தயவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் ” என்றார். “அது சரி, பொன்னம்மா நாச்சியாரே! வாத்தியாரின் மனைவி மீனாம்பாள், கோகுல், மெளலி எப்படி இருக்கிறார்கள் ? நீ கேட்கும் கேள்விகளுக்கு மீனாம்பா குழந்தைகள் பதில் கூறுவார்கள்!” என்றார். அகடவிகடமாகப் பேசும் ஸ்ரீ ஈஸ்வர குரு நாதர் கூறக்கேட்டுக் கண்களைக் கட்டி வனத்தினுள் விட்டு விட்டது போன்ற உணர்வைப் பெற்றார் பாட்டி! நமது சுவாமிக்கு மெளனத்தின் மேன்மையைப் புரியவைக்க ‘வாத்தியார்’ என்று அடிக்கடி கூறியதால் தான் அவர் மெளனத்தைக் கடைப்பிடிக்க அது ஏதுவாக அமைந்தது. கடைசியில் சற்குரு நாதர் விளக்கின் சுடருக்குள் இருந்து பாடம் கூறுவதாகவும், அவைகளைத் தினமும் படித்து வர வரவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

சூரிய தியானத்தில் பெறப்படும் ஞானச்சுடர் பாடங்கள் அல்லாது, பூஜை தியான அறையில்
‘மணியின் மணியின்’ முதல் பாடம், பாடல் வரிகளில் வழங்கப்பட்டது. அது..
“அருட் பெருஞ்ஜோதி ஆனந்த ஜோதி, ஆதி சிவமாகி வந்த ஈஸ்வர ஜோதி”
இவைகளைப் படிக்கும்போது நமது சுவாமி, அவர்தம் குழந்தைகள் இருவரும் உடனமர்ந்து, அவர்களும் பாடங்கள் சற்குரு நாதரிடம் கேட்பார்கள். அவர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். விளக்கில் காட்சி கொடுக்கும் ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குரு நாதரிடம், அநேக உண்மைகளைக் கேட்டு அறிந்து கொண்டார்கள். ஆரம்பத்தில் சந்திரமெளலீஸ்வரனுக்கு மட்டுமே தென்படலானார். பெரிய பையன் கோகுலுக்கு, “ஏன் சுவாமி என்னிடம் பேசவில்லை? தம்பியிடம் தானே பேசுகிறார்!” எனக் கண்ணீர் விட்டு அழுதார். அவர் வருத்தப்படக் காரணம் ஒன்று இருந்தது. மெளலி மிகவும் குறும்பு செய்து வருவார். வெளியில் செல்லும் போது பெரிய குழந்தை கோகுல் ஏதும் கேட்க மாட்டார். வாங்கித் தருவதை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு நன்றி கூறுவார்.

ஆனால் மெளலி எந்தப் பொருள் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்து விட வேண்டும். இல்லை என்றால் வீதியில் எந்த இடமானாலும் சயனப் பிரதட்சினம் போல் உருண்டு கொண்டும், சப்தமிட்டுட் கொண்டும் அனைவரும் வேடிக்கை பார்க்க இது நடக்கும். வீட்டில் அவரின் அம்மாவை பணிகள் செய்ய விடாது அடம் பிடிப்பார். கோகுல் அவரது தாத்தாவிடம் சொல்லி, வண்டி மாடுகளை ஓட்டிவிரட்ட உதவும் சாட்டை ஒன்று ஒன்னேகால் ரூபாயில்(ஒரு ரூபாய் இருபத்தி ஐந்து பைசா) வாங்கி வந்தார். அம்மா வீட்டு வேலைகள் செய்யும் போது கோகுல் கையில் சாட்டையைக் கொடுத்து பாதுகாவலராக நியமித்து விட்டுச் செல்வார். அப்படியும் மெளலி கேட்க மாட்டார். சாட்டையைக் காட்டி மிரட்டி, கையைக் கட்டு எனச் சிறிது நேரம் தான் கவனிக்க முடியும். பிறகு சாட்டையைப் பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்க, கோகுல் தேடிக் கண்டு பிடித்து அழைத்து வந்து புத்திமதி சொல்வார். அதனைக் கவனமாக மெளலிக் குழந்தை பதவிசாகக் கேட்பார். கோகுலை அழ வைத்துக் மெளலிக்குழந்தை லூட்டியடிக்கும். கோகுல் தொல்லை தாளாது தனது தலையில் வலிக்காமல், தானே அடித்துக் கொண்டு காவல் பணியைத் திறம்படச் செய்து வருவார்.

திருமதி.மீனாம்பாள் நாச்சியார் வந்து பார்க்கும் போது, குழந்தை கண்முன் காணாது ஓடிப் போயிருக்கும். எல்லோரும் சேர்த்து ஊர்முழுக்கத் தேடி, யாராவது வீட்டில் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் மெளலியை மீட்டு வருவார்கள். வீட்டை விட்டு வீதியில் ஓடிப்போகும் குழந்தையின் வடிவைக் கண்டு, அநேகம் பேர் தங்கள் வீடுகளில் வளர்க்க கொண்டு போய் விடுவார்கள். கோகுலுக்குத் தம்பியைக் காணாது அரைநாழிகை செல்லாது. தனது தாய் சிறிய மகனைக் காணாமல் தவித்து அழும்போது, ஆறுதல் சொல்லி விட்டுத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வருவார். எத்தனை தடவைகள் குழந்தை காணாமல் போனாலும், சலிப்படையாமல் கோகுல், தனது தம்பியை அழைத்து வருவார். தாயின் கண்ணீரைக் கோகுல கிருஷ்ண னால் தாளமுடியாது. தம்பியைப் பார்த்த சந்தோஷத்தில் அம்மா மேலும் அழும்போது, சாட்டையை எடுத்து வந்து தம்பியை மிரட்டுவார். “உன்னால் தானடா அம்மா அழுது தவிக்கிறார்கள், ஏன் அமைதியாக இருக்க மறுக்கிறாய்?” என்று கேட்பார். தாயின் வாஞ்சை இரண்டு குழந்தைகள் மீதும் இருந்தது. திருத்துவதற்கு நாச்சியார் ஓர் உபாயத்தைக் கைக்கொண்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button