நவக்கிரகங்கள் கட்டுப்பட்டன!

200

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

04•03•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(247) மனிதனே புனிதன் —
நவக்கிரகங்கள் கட்டுப்பட்டன!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“இறைவன் கட்டளைப்படி வானுறையும் தெய்வங்கள் பூமிக்கு வருகை புரிந்தனர். விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சத்தை எட்டியிருந்த அவர்களின் ஆலோசனைகள், பூமியில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த, பூமியின் குருமார்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவர்கள் இறைவனாகிய பராபரத்திற்கு நன்றிகளைத் தெய்வங்களிடம் கூறிக் கொண்டனர். அவர்களின் மேன்மைமிகு ஆலோசனைகள் படி, நவக்கிரகங்களைக் கட்டுப்படுத்த வடதுருவம், தென் துருவம் ஆகிய இரண்டு இடங்களில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மற்றும் நவக்கிரகங்களுக்கு மனிதர்களைப் போலவே வடிவங்கள் கொடுக்கப்பட்டன. அவர்களுக்கு ஆலயங்களும் அமைக்கப்பட்டன.”

“மனித வடிவமும், தெய்வீக வழிபாடுகளும், யாகங்களில் அவிஸூம் நவக்கிரங்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் அவைகளின் தாக்குதல்கள் மனிதர்களின் மீது படிப்படியாகக் குறையத் துவங்கியது. மனிதர்களை அழித்தால் அது தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதற்குத் சமம் என்பதைப் புரிந்து கொண்டு அமைதியை அடைந்தனர். இப்படியாக மனித சமுதாயம் பேரழிவில் இருந்து காப்பதற்கு உதவிகள் புரிந்தவர்களுக்கும், பின்னாட்களில் ஆலயங்கள் கட்டப்பட்டு, அவர்களுக்கு நன்றிகள் கூறி, மரியாதைகள் தரப்பட்டன. அவைகள் தாம் இன்று நாம் காணும் அநேகப் புனிதம் பெற்ற ஆலயங்களும், அவைகளில் உறையும் ஆண்டவன் தூதுவர்களாக, சகல ஜீவன்களுக்கும் நன்மைகள் புரியப் பூமிக்கு வந்த புனிதம் மிக்க தெய்வங்களுமாவர்! நாம் இப்படிச் சுருங்கமாக இவைகளைப் பற்றித் தெரிந்து கொண்டாலே போதுமானது. மனிதன் எண்ணம் எப்படிச் செயல்பட்டால் அவன் தெய்வீக நிலை பெற முடியும் என்பது பற்றியும், ஞானியர்கள் அதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறியுள்ளனர்.”

தவஞானச்சுடர் தவத்திருமதி பொன்னம்மாள் பாட்டி அவர்கள் கூறியுள்ளதில் எங்கள் ஞாபகத்தில் உள்ளதைத்தான் உங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இன்னும் “சித்தர்கள் தொடர்புக்கு” என்ற பல விஷயங்கள் பற்றிக் கூறியுள்ளார். அவைகளும் தக்க இடத்தில் இப் புனித வரலாற்றில் வரும். ஸ்ரீ பிரசண்ட விநாயகர் திருக்கோயில் அருகே ஆதி குரு நாதன் பற்றிப் பேசிய பாட்டி அவர்கள் தமது பேரன் தவத்திரு. நாகராஜன் சுவாமியுடன் சென்று தங்களது குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்களிடம் ஆசிபெறப் புறப்பட்டார். நாய்கள் கூட்டம் ஏராளமாகப் பாதையில், நடந்து செல்லும் அளவுக்குத் தடம் விட்டுப் படுத்திருந்தன. அவைகளின் ஊடாகச் சென்றவர்கள், பழங்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஸ்ரீ விநாயகருக்கு நன்றி கூறி வழிபட்டனர். தூய காடா பனியன் அணிந்து, ஞானக்கனியெனக் கனிந்து, சுடர் போன்று விளங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ ஈஸ்வரரின் திருமுக விலாசம், தங்களின் மனதிற்குள் சாந்தியை உண்டாக்குவதைக் கண்கூடாடக் கண்டனர். அவரை நேரில் சந்திக்கும் பாக்கியம் பெற்ற அனைத்து பக்தர்களுக்கும் இந்த அனுபவத்தை நிச்சயமாகக் பெற்றிருப்பார்கள்.
“வாடா குழந்தே! நீ மூன்று வயதுக் குழந்தைப் பருவத்தில், உணர்வற்றுப் படுத்து இருந்த போது, எனது மடியின் மீது உன்னைக் கிடத்தி வைத்து, எனது பேரனுக்கு உயிர்ப்பிச்சை தாருங்கள் சுவாமி என்று கேட்டாள் உனது பொன்னம்மாள் பாட்டி. இன்றும் தனக்காக எந்தக் கோரிக்கையும் இன்றி, உனக்காக என்னிடத்தில் ஏதோ கேட்க நினைந்து வந்திருக்கிறாள். ஏனம்மா, ஆதி குரு நாதன் பற்றி இவ்வளவு தெரிந்த உனக்கு, வானத்துச் சந்திரன் பற்றியும், அங்கிருந்து நட்சத்திர மண்டல சக்திகளைப் பெற்று, உண்மை உரை செய்த குரு நாதன் பற்றியும் அறிந்திருக்க வேண்டுமே? சொல்லம்மா, பொன்னம்மா உன் தங்கச்சி நல்லம்மா” என்று சொல்லிப் பலமாக இடிஇடிப்பது போன்று சிரித்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button