ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
28•02•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(243) மனிதனே புனிதன் —
குரு நாதனுக்கு எதிர் சாபம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” ஆஹா, ஏற்றுக் கொள்கிறேன் ஆதி குரு நாதனே! எனது ஆசை களை அதிகரிக்க விடாமல் நான் அதனை அடக்கி ஆள முடியும். சில காலம் அது அடங்கிக் கிடந்து பிறகு மீண்டும் கிளர்ந்து எழுந்து என்னை மீண்டும் வஞ்சித்து விடாதா? ஆசைக்கு இடம் கொடுத்து விட்டேன். பிறகு அதனை எதிர்த்து நிற்கும் மனோபாவம் என்னிடம் கிடையாது. ஆனால் ஆதி குரு நாதனே, சிற்றின்ப வேட்கையானது என்னை முழுவதும் கவர்ந்து விடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளும்! மன்னிக்கும் மனமற்ற ஆதி குரு நாதா! இனி எனது எதிர் சாபத்தையும் கேள்! இனி குரு பரம்பரைகள் ஞானத்தைத் தேடுவதை விட, செல்வத்தையும், செல்வாக்கையும், சொத்து, சுகத்தையும், புகழையும் நாடி அவப்பெயரை அதிசீக்கிரம் அடைவார்கள். சீடர்கள் குருவின் இடத்தைப் பிடிக்க, குருவின் சொத்துக்களை அடைய வஞ்சத்தில் ஈடுபடுவார்கள். குரு விஷமிட்டுக் கொல்லப்படுவான். உயிர் ஹானி சீடர்களால் உண்டாகும். இந்த உலகில் ஞானியின் பேச்சிற்கு மதிப்பற்றுப் போகும். குருமார்கள் போதிப்பதை விட்டு விட்டு அரசியலில் ஈடுபடுவார்கள். அரசு பகை உண்டாகும். மனைவியைக் கைவிட்டு பிற மகளிர் மேல் நாட்டம் கொள்வார்கள். உலக மக்கள் தூற்றுவார்கள் என குரு பத்தினி எதிர்சாபம் இட்டாள்.”
“பைரவி உனது எதிர் சாபம் அப்படியே பலிக்கட்டும். உனது சாபம் உண்மையாய் விளங்கும் உத்தம குருமார்களைச் சாராது. உண்மையான குருமார்கள் தங்களது அறிவைக் கொண்டு மதிக்கத்தகாததை உறுதியுடன் விலக்கிக் கொள்வார்கள். கர்வம் சிறிதேனும் இல்லாமல் மற்றவர்களிடம் அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். மதியிழந்த பைரவியே கேள்! பேராசை பிடித்து அலையும் போலி குருமார்களுக்கு மட்டுமே உனது சாபம் பொருந்தட்டும். போலிக்குருமார்களை உலக மக்கள் அறிய, அவர்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக் கொள்வார்கள் என ஆதி குரு நாதர் கூறினார். ”
“உண்மையான குரு மார்களைக் காப்பாற்றக் கூறிய ஆதி குரு நாதன் வாக்குப் பலித்தது. பைரவி நாயாகப் பிறவி பெற்றுத் தாங்கொண்ணாது துயருற்றாள். வீட்டில் இருந்து வெளியேறி பசிக்கு உணவு தேடி அலைந்து, காட்டு நாய்களால் கடியுண்டு, வேதனையை பைரவி நாய் அனுபவித்தது. ஆதி குரு நாதன் அன்போடு கொடுக்கும் உணவுக்காகப் பைரவி நாய் வாசலிலேயே ஏக்கத்துடன் காத்துக் கொண்டு
இருக்கிறது. இனி, ஆதி குரு நாதன் மாயா அன்னையிடம் ஆசி பெற்று, வியாழன் கோளின் மூலசக்தியில் வசிக்கும் தெய்வீக சக்தியுடன், கலந்து விட எண்ணி தவம் செய்திட விழைந்தார். ஸ்ரீ கணபதியின் அருளாசியைப் பெற்று தவத்தில் ஈடுபட்டார். நல்லவிதமாக அது நடைபெற்றுக் கொண்டிருந்தது.”
“இந்த பூமிக்கு ஆதி குருமார்கள் வந்ததன் பின்னணியை நாமும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. நமது சூரிய மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நவக்கிரகக் கோள்கள் என்பன சிருஷ்டி, திதி, சம்ஹாரம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ஏற்பட்டால், படைப்பின் பிரபஞ்ச இயல்பு நன்கு தொழில் படும். உப்பும், நீரும் கலந்துள்ள இப்புவியில் கர்ம ஜீவித உயிரினங்கள் ஏற்பட்டாலும், அறிவின் ஆற்றறில் மேம்பாடு அடையக் கூடியவை மனிதப் பிராணிகள் தான். அறிவின் மேன்மையை அடைந்து, ஆறாம் அறிவின் பகுத்தறியும் சக்தியை உபயோகிக்கக் கற்றுக் கொண்டால் தான், மனிதப்பிராணி அறிவுடன் கூடிய மனிதன் என்ற உன்னத நிலையில் வாழ முடியும். அதன் பிறகு குருவருள் துணையுடன் தெய்வீக நிலையை அடைந்து விடுகிறான்.”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.