காலன் தண்ணீரிலா? கண்ணீரிலா?

200

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

17•02•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(232) மனிதனே புனிதன் —
காலன் தண்ணீரிலா? கண்ணீரிலா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” மழை நிதானமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. குருபத்தினி தனது நிதானத்தை இழந்து மாமியை வைது கொண்டு இருந்தாள். பிறகு எண்ண எண்ணினாளோ, வருவது வரட்டும் என்ற துணிவில் மாமியை வீட்டை விட்டு வெளியேற்றத் துணிந்தாள். தனது கணவன் வருவதற்குள் எங்காவது போய் விடு. இனி உனக்கு என் வீட்டில் இடம் இல்லை, வெளியேறு எனக் கோபத்தில் பொங்கினாள். எங்கே போவது? தனக்குப் போக்கிடம் ஏது? என்று நினைத்த அந்த மாமி, தனது மகன் மீது கொண்ட அன்பினால் மறு மகளைக் கையெடுத்துக் கும்பிட்டார். இங்கேயே வீட்டின் திண்ணையில் ஓர் ஓரமாக நான் தங்கிக் கொள்கிறேன். என்னால் உனக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது மகளே. எனது மகனைக் கண்ணால் பார்க்காமல் இருங்க முடியாதம்மா. என்மீது கருணை காட்டம்மா எனக் கெஞ்சி அழுதார்கள். சோதனையோ மேலும் மிக அதிகமானது. மயில் துத்தம் கலக்கப்பட்ட சூடான கஞ்சியை முகத்தில் ஊற்றி விட்டாள் குரு பத்தினி. வேதனையில் புழுவாகத் துடித்த மாமியின் கையைப் பற்றித் தரையில் இழுத்துச் சென்று, கொட்டும் மழையில் வாசலில் தள்ளி விட்டாள். கண்களைத் திறக்க முடியாமல், அவர்களால் மனமும் பொறுக்க முடியாமல் இறைவனை எண்ணிப் பிரார்த்தனை செய்தார்கள்.”

“தனது இன்னுயிரை சந்தோஷமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இறைவா என்றும், ஆதி குரு நாதன் எடுத்துக் கொண்ட காரியம் ஜெயம் பெற வேண்டும் என்று சங்கல்பம் செய்து வேண்டிக் கொண்டார்கள். அவர் காதுகளில் பேரிசைச்சலோடு ஓடுகின்ற காட்டாற்றின் சப்தம் பலமாகக் கேட்கத்துவங்கியது. மெல்லத் தவழ்ந்தபடியே இறைச்சல் வந்த திசை நோக்கி நகர்ந்தார். ஆதி குரு நாதனின் அன்னையை அன்புடன் அரவணைத்துக் கொள்ள பெருவெள்ளம் ஆர்ப்பரித்துப் பொங்கிப் பெருகி வரவேற்றது. கரையின் ஓரத்தில் அமர்ந்து வருண தேவனை வேண்டிக் கொண்டார்கள். பெரு வெள்ளம் அன்னையை ஆட்கொண்டது. பூமியின் மடியில் தவழ்ந்த அன்னையின் உடலை வெள்ளநீர் சுமந்து படி சென்றது. இறைவா எனக்கு விடுதலை தந்தாய்! உமக்கு ஆயிரம் கோடி நன்றிகள் என முணு முணுத்தபடியே ஆதி குரு நாதனின் தாய், நீரினுள் மூழ்கி இயற்கை அன்னை சக்தியில் கலந்து விட்டார்கள்.”

“ஆதி குரு நாதனின் பணிகள் வளர்ச்சிப் பாதையில் சென்றது. அவருடன் வந்த மற்றவர்களும் திறம்படச் செயலாற்றினர். ஆதி குரு நாதன் மனநிறைவோடு இல்லம் திரும்பினார். முக மலர்ச்சியுடன் வரவேற்ற மனைவியைக் கண்டார. சந்தோஷம் அடைந்தார். தனது அருமைத்தாயைத் தேடினார். வீட்டில் காணவில்லை. குரு பத்தினியிடம் தாயைப் பற்றி விசாரித்த போது, தானும் தான் தேடிக் கொண்ணிருப்பதாகப் பதில் வந்தது. அவள் முகத்தில் வருத்தத்தில் சாயல் சிறிதும் தென்படாததால் சந்தேகம் கொண்டார். ஆதி குரு நாதன் ஆகாயத்தைப் பார்த்துக் கேட்டார். “பிரபஞ்ச சக்திகளே, எனது கடமைகளை ஒழுங்காகச் செய்து வந்திருக்கிறேன். யாரிடத்திலும் நியாயமாக நடந்து கொண்டுள்ளேன். மனதறிந்து எந்தவிதமான தவறான பாதையிலும் செல்லவில்லை. சுகத்திலும், துன்பத்திலும் சமநிலையில் வாழ்ந்துள்ளேன். எனது அன்பின் அன்னையைக் காணவில்லை. எதுவும் நிலையற்ற இந்த உலகில் எதற்காக நான் வாழ வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்? புகழுக்காகவா? அறியாமையை அறிந்து கொள்வதற்காகவா? நிலையாமையைப் புரிந்து கொள்ளவா? அன்னையிடம் அன்பைத் செலுத்தி அவர்களுக்குப் பணிவிடைகள் புரிதல் கூடாதா? நான் எதில் தவறிழைத்தேன்? தீமையைச் செய்பவர்களுக்கும் நன்மையை அருளும் நீதி பெற்றவர்களே! எல்லோரும் எங்கே மறைந்து கொண்டீர்கள்? எனது அன்னையைக் கொண்டு வந்து தாருங்கள்! என் முன்னே வாருங்கள் என அழைத்தார் ஆதி குரு நாதர்.”

“எங்கும் அமைதியாக இருந்தது. எந்தவிதமான பதிலும் இல்லை. அவரது பிரிய மனைவி அவரிடம் அன்புடன், நாதா எனது கோரிக்கையைத் தாங்கள் இன்னும் செவிமடுக்க வில்லை. நமது பண்டு நாடாகிய உலகத்திற்கே நாம் திரும்பிச் செல்வோம். இந்தக் கர்மபூமியில் நமககென்ன வேலை? பதில் கூறுங்கள் நாதா எனக் கொஞ்சினாள் பைரவி என்ற பெயர் படைத்த ஆதி குரு நாதனின் குரு பத்தினி. எனது அன்னையுடன் வந்து பதில் உனக்குக் கூறுவேன். அது வரையிலும் நீ பொறுமையைக் காப்பாற்று எனக்கூறினார். பிறகு தனது தாயைத் தேடிச் செல்லலானார்.”

ஞானச்சுடராய் விளங்கும் தவத்திருமதி. பொன்னம்மாள் நாச்சியார் நமக்குச் சொல்லிய செய்திகள் பிரமிப்பை ஊட்டுவதாக இருந்தது. வழி வழியாகப் பெரியவர்களிடம் அறிந்து கொண்டு வந்ததால் தான் இது நமக்குக் கிடைத்தது. இன்னும் இதில் பிரமிப்புக் காத்திருக்கின்றது!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button