குருநாதரை அழைத்தல்!

250

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

11•02•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(226) மனிதனே புனிதன் —
குருநாதரை அழைத்தல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி கிராமம் திரும்பியதும் ஓரிரு நாட்கள் சென்று, வீட்டின் வெளியே மீன்கரைச்சாலையில் வட்டமாக வளைந்து கம்புடன், தூய வெள்ளை உடையில், தலையை பெரிய துணியினால் முகத்தைப் போர்த்தி மறைத்தபடி, மேற்கு திசையில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். தெருவில் உள்ள நாய்கள் வாலை ஆட்டியபடியே சந்தோஷமாக, அவர் பின்னால் சென்று கொண்டிருந்தன! கூட்டமாக நின்று மக்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டே நின்றிருந்தனர். ஊரை விட்டே எல்லா நாய்களும் செல்வதாகப் பேசிக்கொண்டு இருந்தனர். பள்ளி வாசல் தாண்டி அவருடன் சென்று, பிரசண்ட விநாயகர் கோயிலின் வெளியே சுற்றிலும் படுத்துக் கொண்டன.

நமது நாகராஜன் சுவாமி அவர்கள் தியானத்தில் அமர்ந்து இருந்த இடத்திற்குப் பாட்டி திருமதி. பொன்னம்மாள் நாச்சியார் அவர்கள் வந்து அமர்ந்து பிரார்த்தனை செய்யத் துவங்கினார். கண்விழித்து ஸ்ரீ நாகராஜன் சுவாமி பாட்டியின் முகத்தை நோக்கினார். பிரகாசம் பொருந்திய அவர் முகத்தில் கண்கள் மட்டும் நீலநிறமாக, அமைதியாக, சாந்தமாக விளங்கியது. நீலநிறக் கண்களில் அபூர்வமான காந்தசக்தி மிளிர்வதை சுவாமி கண்டு, இறைவனுக்கும், இறையருளால் கிடைக்கப்பெற்ற தியானம் சக்திக்கும், அதனை உலகினுக்குக் தந்த மஹா ஞானியர்களுக்கும் மனதிற்குள் நன்றி கூறினார்.

ஞானக்கனலாய் விளங்கி வரும் பாட்டி திருமதி.பொன்னம்மாள் நாச்சியார் அவர்கள் நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமியை அன்புடன் ஆசீர்வதித்து, “அப்பா நீ நன்றாக இருக்க வேண்டும். இன்று நமது கிராமத்தில் வாழ்ந்த பைரவர் கூட்டம் அத்தனையும் ஊரை விட்டுச் சென்று, ஆற்றுக்கு அப்பால் பிரசண்ட விநாயகர் கோயிலின் அருகே தங்கி விட்டன. காரணம் என்னவென்று சொல்லமுடியுமா?” என பீடிகையுடன் கேள்வி கேட்டார். உடனே சுவாமி, ” நமது குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரர் வந்திருப்பார். நம்மை அழைப்பதற்காக இப்படித் தகவல் தருகின்றார்” என்றார்.
“சரி புறப்படு போவோம்!” என்று பாட்டி கூறி ஆச்சரியப்பட வைத்தார்.

 

” பாட்டி உங்கள் எண்ணம் புரிகிறது. நமது வீட்டிற்கு குருநாதரை அழைக்க நீங்கள் எண்ணி இருப்பது புதிதல்லவே! அதனை அந்த மகானுபாவரிடம் அடியேன் கேட்கின்றேன்” எனச் சுவாமி கூறவும்,
” ஆகட்டும், புரிந்து விட்டதல்லவா! காரண காரிய நிமித்தம் என்பது அறிய நீ எண்ணுவது எப்பொழுது செயல்படும்? அவர் பற்பல பாடபோதனைகள் நிறைந்ததோர் கற்பக விருட்சம் என்பதை நினைவில் கொள்! இப்போது நீ சூரியனில் படிப்பதும், எழுதுவதும் மாத்திரம் போதாது. அவர் வீட்டிற்கு வரச் சம்மதித்து வந்தால், அவரிடம் நீ என்ன கேட்க வேண்டும்? என்பதனை சமயத்தில் கூறுகிறேன். இப்போது புறப்பட்டுப்போய் நாம் அவரது தரிசனத்தைப் பெறுவோம்” என்று பேசிக் கொண்டே வாசலில் இறங்கி@ விட்டார். பாட்டியும், பேரனும் பைரவர்கள் சென்றுள்ள பாதையில் சென்றனர்.

நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி பாட்டி அவர்களிடம், “எங்களுக்குத் தெய்வமென வந்த தாயே! ஏதோ பைரவி சாபம் என்பதாக ஒருமுறை கூறினீர்களே! அதுபற்றிக்கூற இயலுமா?” என்று நடந்து கொண்டே சுவாமி வினவினார்.
உடனே பாட்டி, “அது பைரவி சாபமல்ல, உலக குருநாதன் தனது குருபத்தினிக்குக் கொடுத்த சாபம். அதனைத் தெரிந்து கொள்ள விருப்பமா?” என்று கேட்டார். சுவாமி அதற்கு கையெடுத்துக் கும்பிட்டபடி பதிலை சைகையில் சொன்னார். பாட்டி கூறிய ‘குருபத்தினி ‘ பற்றிய செய்தி உள்ளத்தை உறையச செய்வதாக இருந்தது. அதனையும் தெரிந்து கொள்வோம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button