ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
10•02•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(225) மனிதனே புனிதன் —
அம்மனின் அருளாசி தேவை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதன் “தான் செய்யும் கடமைகளில் எவ்வாறு நடந்து கொண்டோம்?” என்று தனது உள்ளத்தில் கேள்வியைக் கேட்டால், நிச்சயம் விடை கிடைக்கும். தனது குடும்பம் மற்றும் வெளி வட்டாரப் பழக்க வழக்கம் இவைகளில் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறோம்? என்ற கேள்விக்கு, ” நியாயமாகத்தான் நடந்து வந்துள்ளேன்; கடமையில் தவறவில்லை; உண்மையே பேசி வந்துள்ளேன்; இன்ப துன்பங்களில் சமமாக நடந்து கொண்டேன், ” என்று உண்மையாகக் கூற முடியுமா?
மெய், வாய், கண்கள், மூக்கு, செவிகள் என்ற ஐம்புலன்களால், விரும்பி அனுபவித்து வருகின்ற இன்பங்கள் அனைத்தும் என்றுமே நிலையானவை தானா? என்பன பற்றிச் சிந்திக்கத் தோன்றுகின்றதா?
வழிபடுதல், வணங்குதல், உதவுதல், பொறுத்தல், தகாதன செய்யாதிருத்தல், தன்னை அடக்குதல் இவைகளைப் பெற்றவனே தெய்வப் பிறவியாக மாறமுடியும்! அவர்களது உள்ளத்தில் இறையருள் குடி கொண்டிருக்கும்! அங்கே இறைவன் நல்வழி காட்டுவான்! அத்துடன் தெய்வீகப் பாதுகாப்பும் கிடைக்கப் பெறும். மனிதன் உறுதியுடன் நன்மை தரும் வழியில் உறுதியுடன் செல்லவும் வேண்டும்!
பண்ணாரியில் இருந்து புறப்பட்டு சபரிமலைக்குச் சென்ற பக்தர்கள் மிகவும் சந்தோஷமாகச் சென்றனர். ஆட்டமும், பாட்டும், கும்மியும், சரணகோஷங்களுடன் சென்று எருமேலி வந்து சேர்ந்தனர். பேட்டை துள்ளல் முடித்துக் குளித்து விட்டு உணவருந்தி ஓய்வு கொண்டனர். பண்ணாரி மாரியம்மன்கோவில் பூஜாரியால் நிம்மதியாக உறங்க இயலவில்லை. உடல் மிகவும் பலவீனமானதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. பாரமாகக் கனத்த தலையைத் தூக்க முடியாமல் தவித்து அவஸ்த்தைப்பட்டார். உடல் காய்ச்சலால் துடித்தது். உடன் கொண்டு போயிருந்த அவசரக் கால மருந்துகளால் உபசாந்தி ஏற்பட்டது.
விடியவிடியத் தூக்க மின்மையாலும் துயரத்தை அனுபவித்த அவருக்கு, ஒவ்வாமையால் உடல் சிவந்து, எங்கும் வியர்வைக்குரு போன்று சிறுசிறு கொப்புளங்கள் உண்டானது. விடியற் காலையில் நான்கு மணிக்கு சபரிமலை பம்பா நதிக்குப் புறப்பட்டனர். வாகனத்தில் படுக்க வைத்து அழைத்துப் போகும் போது அவருக்கு வைசூரி கண்டது. காய்ச்சல் அதிகரிக்க அதிகரிக்க, அம்மைக் கொப்புளங்கள் மிகவும் பெரியதாகத் தென்பட ஆரம்பித்து விட்டன. அவரால் சபரிமலை மண்ணைக்கூட மிதிக்க முடியாமல் உள்ளங் கால்களிலும் கொப்புளங்கள் வெளிப்பட்டன. என்ன செய்வது? என்று யாருக்கும் புரியவில்லை.
பூஜாரியை ஐயப்ப சேவா சங்க மருத்துவர் பொறுப்பில் விட்டு விட்டு, அவருடைய இருமுடியை சந்நிதானம் கொண்டு சென்று, ஐயப்ப சுவாமிக்கு நெய்யபிஷேகம் செய்வித்து, பிரசாதத்தோடு பம்பை வந்து சேர்ந்தார்கள். பிறகு சத்தியமங்கலம் புறப்படும் போது பூஜாரி அவர்களைத் தகுந்த பாதுகாப்பில் அழைத்துச் சென்றார்கள். ஊர் வந்தடைந்தடைவதற்குள் காய்ச்சல் முற்றிலும் குணமானது. பண்ணாரி மாரியம்மன் கோவில் செல்வதற்குள் வைசூரி முற்றிலும் குணமானது. சிறு கொப்புளம் கூட இன்றி, அதிசயமாக உடல் பழைய நிலைக்கு மீண்டு, ஆரோக்கியம் பெற்றது. கோயிலில் பண்ணாரி மாரி அம்மனைப் பக்திப் பரவசத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போது அங்கு அம்மன் தரிசனத்திற்கு வந்திருந்த சுமார் நான்கு வயதுப் பெண் குழந்தைக்கு உடலில் அம்மன் ஆவேசம் ஏற்பட்டது. குழந்தை அருள் முகத்துடன் , “எனது உத்தரவின்றி மலைக்குத் சென்றாய்! மட்டுமல்லாமல் உனது ஆர்வம் எனக்குள்ள பூஜை புனஸ்காரங்களை அலட்சியப் படுத்தியது. ஆகாரமின்றி என்னைத் தவிக்க விட்டாய். அதனால் உன்னை சபரிமலை மண்ணை மிதிக்க நான் விட வில்லை! ஐயப்பனுக்கு நெய் அபிஷேக இருமுடியைச் சுமந்து வந்த “சுமடுஆள்” நான் தான். அதனை என் பக்தனான உனக்காகச் செய்தேன். மணி மாலை அணிந்து விரதம் இருந்தாலும் எனது பூஜைகளைச் செய்ய உனக்கென்னடா தடை?” என்றதும் அனைவரும் குலவையிட்டு அம்மனைத் துதித்தனர். அம்மன் கதை நிறைவில் பண்ணாரி அம்மனை வழிபட்டு விட்டு சுவாமி அவரிடம் விடை பெற்று இல்லம் திரும்பினார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.