ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
01•02•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(216) மனிதனே புனிதன் —
சுகமடைந்த பிரம்மச்சாரி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மற்றவர்களுக்கு உபகாரமாக வாழ்கின்றவர்கள் உள்ளத்தில் எப்போதும் இறைவன் வீற்றிருக்கின்றார். அப்படிப்பட்ட உள்ளத்தில் தெய்வீக இன்ப உணர்வுகள் உண்டாகும். மனம் எப்போதும் அமைதியுடன் இருக்கும். இந்நிலை இருந்தாலே அவர்கள் உலகத்துடன் ஒத்துப் போவதுடன் கூடிய உபகாரஞ் செய்வார்கள். அவர்கள் ஒரு கடமையை நிறை வேற்றியவுடன் அடுத்து நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். அப்படி இடைவிடாமல் தங்களது கடமைகளைச் செய்து வருவதில்தான் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும். நடுநிலைமை தவறாத உள்ளமுடன் செய்யப்படுகின்ற செயல்களில் கிடைக்கின்ற இன்பம் வேறெதிலும் கிடைக்காது. எண்ணமும், செயலும் வாழ்வில் ஒழுங்குடன் இருப்பதே சிறந்த தர்மம் ஆகும்.வாழ்வின் பாதையில் நமது பயணம் சுலபமாக இருக்கும். அதன் பெயர் ஆத்ம சாந்தி என்று கூறுவது ஈஸ்வர நீதியாகும்!
பூஜாரியின் நேர்மை வெளிப்பட்டவுடன் பலத்த சத்தத்துடன் அடைத்து வைக்கப் பட்டிருந்த செங்கற்கள் வீழ்ந்தன. தாமாகவே வழியும் உண்டானது. உள்ளே நுழைந்த கிராம பூஜாரியின் காலடியில் ஓர் செங்கல் வந்து விழுந்தது. அத்துடன் சுப்பிரமணியத்தின் பிளந்த மார்பில் இருந்து மீண்டும் மற்றொரு செங்கல் வருவதற்குத் தயாராக இருந்தது. தாங்கள் காண்பது கனவா? அல்லது நனவா? என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. இப்படியும் நடக்குமா? என்று சந்தேகப்பட்ட நாயனாவின் முன்னால் மற்றொரு செங்கல் பறந்து வரவும் அவர் வெளியில் ஓடினார். சுப்பிரமணி அதைக்கண்டு சிரித்து, “நாயனா ஓடாதே, திரும்பி வா ” என்றதும் நாயனா திரும்பிப் பார்க்க, சுப்பிரமணியம் கையில் ஒரு செங்கல் அவரது தலையைக் குறி பார்த்துக் கொண்டிருந்தது. அமைதியாக நின்று விட்டார். இருவரையும் உட்காரச் சொல்லவும், மாந்திரீகன் எதிரில் அமர்ந்து கொண்டார்கள்.
இனிமேல் சுப்பிரமணியைக் குணப்படுத்தும் பூஜையை அவன் உடலில் இருக்கும் மகா மாந்திரீகனே செய்யத் துவங்கினான். தவறுதலாக அவனைப் பிடித்து வருடம் ஒன்று ஓடிவிட்டது. அவனை அழிக்க இஷ்டப்படவும் இல்லை. மாந்திரீகர்கள் மத்தியிலும் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஏதாவது தீமைகளுக்கு ஆட்பட்டவர்களைக் குணப்படுத்தும் செயலைக் செய்து வருகிறார்கள். அப்படி ஒரு மாந்திரீகனுடைய ஆவிதான் சுப்பிரமணியன் உடலில் இருந்தது. அவனை விட்டு விடுவதாகவும் கூறியது. அதுமாத்திரமல்ல இன்னொரு விஷயத்தையும் கோரிக்கையாக வைத்தது. அது என்னவென்றால் தனது நண்பனால் வஞ்சிக்கப் பட்டதாகவும் அதனால் பழிவாங்கும் உணர்வு தனக்கு வரக்கூடாது என்றும், தான் சுப்பிரமணி உடலை விட்டுவிட்டு வெளியே வந்ததும், தன்னை ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் குடுவைக்குள் வைத்து பலமான மூடியிட்டு பூமிக்குள் புதைத்து விட வேண்டும் என்றும், இந்த வஞ்சக உலகில் அஞ்ஞாதவாசம் வாழ விரும்புவதாகவும், அதுதான் தனக்கு உரிய தண்டனை என்றும் கூறியது. நல்ல மனது உடைய மனிதர்களும் பாதை மாறிப் போனால் எத்தனை இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்ற எண்ணத்தில் நாயனாவின் கண்கள் கலங்கியது.
“நாயனா இந்த அனுதாப உணர்ச்சிகள் வெளி உலகில் சேவைகள் செய்ய உபயோகப்படுத்துங்கள். வீணான உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகாதீர்கள். மற்றவர்களைப் பற்றிய விமர்சனங்களை விட்டு விடுங்கள். உங்கள் கடமைகளை விருப்பு, வெறுப்பின்றி கடவுள் சிந்தனையோடு செய்து வாருங்கள். நீங்கள் செய்யும் பூஜையில் நம்பிக்கையோடு ஈடுபடுங்கள். அதுதான் நன்மையைத் தரும்” என்றது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.