ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
31•01•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(215) மனிதனே புனிதன் —
நல்ல வழி சொல்லுவேன்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவறாக ஒருவன் மீது, பெயரைக் கொண்டு பற்றிக் கொண்டதால், அவன் மீது இரக்கம் ஏற்பட்டு, அந்தப் பையனை விட்டு விடுவதற்கான வழிமுறைகளை விபரமாகச் சொல்ல ஆரம்பித்தான் மாந்திரீகன். அவைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். தரையில் வரையும் மாந்திரீக எந்திரக் கோலம் முதல், யாகம் செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதும், ஜெபிக்கக்கூடிய மந்திரம் வரை பூஜை முறைகள் பற்றியும், சுப்பிரமணியம் உடலை ஆக்ரமித்திருந்த பெரிய மந்திரவாதி கூறி முடித்தான். நாளைக்கு வாருங்கள் என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்ததும், நாயனாவும், கிராம பூஜாரியும், வீட்டின் முன் புறத்தில் கூடியிருந்தவர்களும் புறப்பட்டுச் சென்றார்கள்.
அன்று மாலையில் வைகை ஆற்றங்கரையின் மணலில் நாயனா, பூஜாரி, மற்றும் சுப்பிரமணியம் நண்பர்கள் கூடியிருந்தார்கள். சுப்பிரமணியத்திற்கு ஏற்பட்ட நிலைமை குறித்து விவாதித்தார்கள். அப்போது கிராமத்துப் பூஜாரி அவசரப்பட்டு வாய்த்துடுக்காக ஒரு செய்தியை வெளியிட்டார். அது, “இப்படிப்பட்ட ஆவிகளைத் தந்திரமாகத்தான் அணுக வேண்டும். அவர்கள் போக்கிலேயே சென்று நமது காரியத்தைச் சாதிக்க முடியும். நான் அதன் மனங்குளிரப் பேசினதால்தான் அது சுப்பிரமணியை விட்டு விலகப் போகிறது. அது என்னுடைய திறமை” என்று தன்னையே புகழ்ந்து கொண்டார். அதனைக் கேட்டு நாயனா தனது முகத்தைத் சுழித்துக் கொண்டார். நாயனா அவரைப் பார்த்து, ” ஐயா பூஜாரி தற் பெருமை பேச்சைக் கொஞ்சம் நிறுத்தி விடுமய்யா. எதிர் கொள்ள வேண்டிய சக்தி, யக்ஷனாக மாறி விட்ட பெரிய மந்திரவாதி என்பதை நினைவில் வையும்” என்று அவர் வாய்த் துடுக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இரவு வந்ததும் எல்லோரும் வீட்டிற்குச் சென்றனர்.
மறுநாள் சுப்பிரமணி வீட்டிற்குச் சென்றவர்களுக்குப் பலத்த அதிர்ச்சி! அவனது அறையானது நிறைய செங்கற்கள் கொண்டு அடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்து மாந்திரீகன் கடுமையான குரலில் சப்தமாகப் பேசினான். ” டேய் பூஜாரி, என்ன ஆணவமடா உனக்கு? என்னைத் தந்திரமாக ஏமாற்றி வெற்றி பெறப் போவதாக, நேற்று வைகையாற்றில் வைத்துப் பேசிக் கொண்டிருக்கின்றாய்! இப்போது இவனைக் கொன்று என்னுடன் கூட்டிப் போகப் போகிறேன். முடிந்தால் இவனைக் காப்பாற்றிக் கொள்” என எக்காளமிட்டான். கிராம பூஜாரி நடுநடுங்கிப்போனார். கண்களில் நீர் சுரந்து விட்டது. தழுதழுத்த குரலில் உருக்கமாகப் பேசினார்.
” ஐயா தருமதுரை, மீண்டும் என்னை மன்னித்து விடுங்கள். நான் அறியாமல் இந்தப் பிழை செய்து விட்டேன். உங்கள் கால்களைப் பிடித்துக் கெஞ்சுகிறேன். என்னிமித்தம் அவனைத் தண்டிப்பது முறையாகாது. தவறை மன்னியுங்கள் ஐயா “என்று பூஜாரி முறையிட்டார். அப்போது கிடுகிடு கிடுவென பலத்த சப்தம் உண்டானது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.