ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
09•12•2016,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(162) மனிதனே புனிதன் —
சுவாமியின் மயக்கம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திரு.காளியப்பன் அவர்கள் சுவாமியைத் துரிதப்படுத்தினார். கொஞ்சம் வேகமாகச் சென்றால் ஜீவன் முக்தி பெற்ற ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஒன்று வரும். அங்கு தங்கிக் கொள்வோம் என்று கூறிவிட்டு வேகமாக முன்னால் சென்றார். சென்றவர் சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரர் நின்று கொண்டிருந்த இடத்தைக் கடந்து சென்றவர் சற்று நின்று சுதாரித்து அவர் கையில் வைத்துள்ள அபூர்வமான வளைந்த கம்பை ஆராய்ந்தார். உடனே குருநாதர் மிகவும் உரத்த குரலில் சப்தமாக சிரிக்கத் துவங்கினார். அதனால் பயந்து போன திரு.காளியப்பன் அவரை விட்டு விலகி, ஓடிப்போய் தூரமாக நின்று கொண்டு, “நாகு சுவாமி சீக்கிரம் ஓடி வந்து விடுங்கள்” எனக் கத்தினார்.
நமது சுவாமி மெல்ல நடந்து அருகில் சென்று அவருக்குத் தலைகுனிந்து வணங்கினார். காட்டு வாசிகள் பேசும் புரியாத பாஷையில் சப்தமாக ஏதோ கடகடவெனப் பேசினார். நமது சுவாமியின் கையைப் பற்றிப் பிடித்துத் தன்னைச் சுற்றிலும் வட்டமாகச் சுற்றி ஓட வைத்தார். ஜெபம் செய்தபடியே சுவாமி குருநாதரைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தார். உண்மையில் சற்குருநாதரால் அவரை ஓட வைக்கப்பட்டு, ஆட்டுவிக்கப்பட்டார்.
சுவாமி மயங்கிக் கீழே விழவும், காட்டு பாஷையில் கத்தியபடியே சுவாமியைக் கையில் பிடித்துக் குழந்தையைத் தாய் தனது மடியின் மீது படுக்க வைப்பது போல் வைத்துக் கொண்டார். தனது தோள் பையில் இருந்து நீரை எடுத்து முகத்தில் தெளித்தார். சுவாமி கண்விழித்து எழுந்து அவரது காலைப் பற்றிக் கொண்டார். காரணம் மயக்கம் கொஞ்சம் தெளிந்திருந்தது. பிறகு புத்துணர்வு பிறந்தது. சற்குருவை வணங்கினார். நாகராஜன் சுவாமியை, அருகில் அமரவைத்துக் குடிக்க நீர் தர சுவாமி சாப்பிட்டார்.
ஒரு கல்லைப் பெயர்த்துத் திரு.காளியப்பனை நோக்கி வீசி எறியக் கல் தலையில் டர்பன் போல் கட்டியிருந்த துண்டை உரசிச் செல்ல அவர் மிகவும் பயந்து ஓடினார். “டேய், பிடிங்கடா அவனை. ஓடறான் பாரு. அவனச் சிவன் கோர்ட்ல கொண்டு போயி நிறுத்தனும். டேய் நில்லுடா” என்றபடி சப்தம் போட்டதும் திரு.காளியப்பன், “போங்கடா நீங்களாச்சு, உங்க கோர்ட் ஆச்சு. என்னைய ஒண்ணும் பண்ண முடியாது ” என்று சொல்லியபடியே ஓடிப்போனார்.
சற்குருநாதர் சிரித்துக்கொண்டே, “இவனுக்கு கடுமையான மனோவியாதி வர இருக்கின்றது. உடலில் பாதிப்பு இயலாமையாய் வெளிப்படும். ஏன் ஓடுகிறான் தெரியுமா? தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம். அதைவிட இவனது வைத்தியர் மாமா மூலிகையைப் பறிக்க இவனைப் பயன்படுத்திக் கொண்டார். அதனாலும் இவனுக்கு சாபம் இருக்கிறது. ஆக ஒட்டு மொத்தமாக மனநிலை பாதிக்கப் போகிறவன். இவர்களது வீட்டில் தங்கியிருந்த ஹடயோகியின் ரகசியம் அறிய வைத்தியர் மாமாவுக்கு உளவு பார்த்த தோஷம் வேறு இருக்கிறது.என்ன செய்யலாம்? அவன் வாங்கின, தேடிக்கொணட விதி இதுதான்” என்றார். பிறகு மெல்ல சமாது இருக்கும் இடம் நோக்கித் தனது வழிகாட்டியாய் வந்துள்ள ஸ்ரீ ஈஸ்வரருடன் நாகராஜன் சுவாமி பயணிக்க ஆரம்பித்தார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.