ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
07•12•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(160) மனிதனே புனிதன் —
வெள்ளிங்கிரி மலை ஈசன்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
13•03•1983, ஞாயிற்றுக்கிழமை,
மாலை 06•30 மணிக்கு ஜென்மம் பற்றிய பாடங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் வாய்ந்தது. நமது சுவாமிக்கு ஒரு நாள் அமாவாசை அன்று அவரிடம் இருந்து செய்தி வந்தது. அவர் என்று குறிப்பிடுவது சுவாமியின் குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரரைத்தான். சூரிய மகரிஷியின் தொடர்பால் அநேக பாடங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. ஞானச்சுடர் நூற்றி ஐம்பத்து ஐந்து பாடல்கள் சுவாமியின் மூலமாகத் தந்து, சுவாமியம்மா எழுதிய பிறகு தருவதை நிறுத்திக் கொண்டனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஞானச்சுடர் பாடல்களைச் சூரிய தேவனிடம் இருந்து திரும்பவும் பெற்றார்.
அமாவாசையன்று கிடைத்த செய்தியில் “சிவன் பாதம் பற்றி அறிந்து கொள்ள விருப்பமா?” என்று கேட்டிருந்தார். நமது சுவாமி தனது தியானத்தின் மூலமாகத் தொடர்பு கொண்டு, “விருப்பம் சிவன் பாதத்தை அறிவதற்கு மட்டுமல்ல! தங்களை மீண்டும் நேரில் சந்தித்து சில விளக்கங்கள் பெற விழைகிறேன்” என்று அனுப்பிய செய்திக்கு உடனடியாகப் பதில் கிடைத்தது. “வெள்ளிங்கிரி மலைக்கு பெளர்ணமி தினத்திற்கு முதல் நாள் வந்து விடு” — மேற்கொண்டு செய்தி துண்டிக்கப்பட்டு விட்டது.
சரி, யாருடன் வெள்ளிங்கிரி மலைக்குப் போவது? இரண்டு தினங்கள் சென்று நாகராஜன் சுவாமி, ‘கற்பூர ஆழியில்’ யாக ஜெபம் செய்தபிறகு உள்ளூர் பண்ணையகாரரின் மூத்த மகன் திரு.காளியப்பன் சுவாமியைப் பார்க்க வந்தார். வந்தவர் சுவாமியிடம், “வெள்ளிங்கிரி மலைக்குப் பெளர்ணமிக்குப் போகிறேன். சுவாமி நீங்கள் வருகிறீர்களா?” என்று கேட்டதும், சுவாமிக்கு ஆச்சரியமாக இருந்தது!
“ஆகட்டும் செனறு வருவோம்” என்று சொல்லி விட்டு உணவு கொடுத்து உபசரணைகள் செய்து அனுப்பி வைத்தார்.
சற்குருநாதர் வன்னி வித்தையை நாகராஜன் சுவாமிக்கு உபதேசம் தந்ததும் வெள்ளியங்கிரி மலையில் இருந்து தான். அது
“ஆகாயகல் கற்பம் வெண் குமுதம்
ஆகாயஜீவன் சேர்பால் அமுதம் விஞ்சும்கல் ஆவின் சுத்த கங்கை
அஞ்சும் கடத்தினுள் வன்னி வித்தை” — சற்குருவின் உரை இதுதான்.
வெள்ளிங்கிரி மலையில் அக்காலத்தில் இன்று உள்ளது போல் அத்தனை கெடுபிடிகள் கிடையாது. மருத்துவர்களுக்கு அநேக தெய்வீக மூலிகைகளை உற்பத்தி செய்து தரும் தாய் போன்றது வெள்ளிங்கிரி மலை. அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் கிடைத்திட அருள்புரிந்த இடம் வெள்ளிங்கிரிமலை. மனோன் மணித் தாயார் சதாசிவமுடன் சேர்ந்து சித்தர்களுக்கு அருள்புரிந்த மலை. பாம்பாட்டி சித்தர் தவம்புரிந்து ஆற்றலை வளர்த்துக் கொண்ட இடமே வெள்ளிங்கிரி மலை. ஸ்ரீராமருக்கு பிரம்மஹத்தி விலகிட தவஆஞ்சநேயன் மூலம், சிவபூஜைக்கு லிங்கம் தந்து உதவிய மலையே வெள்ளிங்கிரி. விபூதியே மலையாகவும் பஞ்சபூதங்களும் ஓங்காரத்தில் சிவனைத் துதித்திடும் புண்ணிய பூமியே வெள்ளிங்கிரி மலை. இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புப் பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கு நமது நாகராஜன் சுவாமியை பலமுறைகள் வரவழைத்து உபதேசித்து இருக்கிறார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.